Published : 14 Mar 2019 10:35 AM
Last Updated : 14 Mar 2019 10:35 AM

மூன்று வடிவங்களில் அருள்பாலிக்கும் கரிக்ககத்தம்மன்

மார்ச் 19: பொங்கல் வழிபாடு

பிற்காலச் சேர மன்னர்கள் சிவன் கோயில்களை உருவாக்கியதோடு அன்னை பராசக்தியை பகவதி அம்மனாகவும் சாமுண்டி தேவியாகவும் பற்பல இடங்களில் நிறுவி இடப்பெயருடன் சேர்த்து வழிபட்டு வந்தனர். இவ்வாறு கரிக்ககம் என்னுமிடத்தில் உருவானதுதான் தேவிகரிக்ககத்தம்மன் என்றழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டிகோயில்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலிலிருந்து வடமேற்குத் திசையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் பார்வதி புத்தனாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. 600ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம்.

சிறுமி வடிவில் தோன்றிய அம்மை

அன்னை பராசக்தியின் தீவிர பக்தர் ஒருவர் மந்திர தந்திரங்களை நன்கு கற்றவராக இருந்தார். இளைஞன் ஒருவனைத் தன் சீடனாகக் கொண்டு உபதேசமும் அருள்வாக்கும் அருளினார். ஒருநாள் அம்பிகை சிறுமி வடிவில் அவர்கள் இருவர் முன்பும் தோன்றினாள். அவளை அம்பிகை என்றுணர்ந்த இருவரும் கரிக்ககம் என்னுமிடத்தில் பச்சைபந்தல் அமைத்து அம்மனைக் குடியிருத்தினர். அம்பிகையும் ஆசி வழங்கி மறைந்தாள்.

குருவின் அறிவுரைப்படி தேவியைச் சிலையாகவும் பிரதிஷ்டை செய்தார் சீடர். அந்த அன்னையே சாமுண்டியாக அனைவரும் வழிபடும் கரிக்ககத்தம்மாவாக விளங்குகிறாள். கோயிலின் ராஜகோபுரம், நந்தவனம், வானளாவி நிற்கும் வளமிகுந்த மரங்கள், குளம், சிற்பங்கள், சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அழகிய சிற்பங்கள், தெய்விக சாந்நித்யம் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு அனைவர் மனதையும் உருகச் செய்யும் ஆலயம் இது. இக்கோயில் வளாகத்தில் கணபதி, சாஸ்தா குருயோகீஸ்வரன், நவக்கிரகங்கள், ஆயிரம்வல்லி அம்மனுக்குத் தனிச் சன்னிதி ஆகியவையும் உள்ளன.

சாமுண்டி ரத்தசாமுண்டி பாலசாமுண்டி

காளியின் உக்கிர வடிவினளாக சாமுண்டி கருதப்படுகிறாள். ஆனால், இங்கோ சாமுண்டி ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று வடிவங்களில் வழிபடப்படுகிறார்.

மூன்று தேவிகளும் மூலவர்களாக இருப்பினும் விநாயகரும் யக்ஷஜியம்மாவும் புவனேஸ்வரியும் ஆயிரவல்லியும் இங்கே விசேஷமாக வணங்கப்படுகின்றனர். தேவி கோயிலுக்கு வடக்கே உள்ள பழைய இல்லம் குரு மந்திரம் என்று அறியப்படுகிறது. தேவியை இங்கே அழைத்து வந்த யோகீஸ்வரனின் பரம்பரை இல்லமாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீசாமுண்டி தேவி கோயிலில் அம்மன் முன்னர் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்புடன் வடிவமைக்கப்பட்டிருந்தார், பின்னர் பஞ்சலோகத்தால்அம்மன் சிலை உருவாக்கப்பட்டது. ரத்தசாமுண்டியும் பாலசாமுண்டியும் சுவர் சித்திரங்களாகவே நீடிக்கின்றனர். அருள்சுரக்கும் தேவி ஸ்ரீசாமுண்டிதேவி என்றும் குறைகளை நீக்கி அநீதியை முறியடிக்க ரத்தசாமுண்டி தேவி என்றும் அனைத்து ஐஸ்வரியங்களும் வழங்கிடுவது பாலசாமுண்டிதேவி என்றும் வழிபடுகின்றனர்.

சத்திய சாட்சி

கேரளாவில் மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை இக்கோயிலில் பல வழக்குகள் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டு தீர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. 21 பணம் அல்லது 21 காசுகள் கட்டணமாகச் செலுத்தி இந்த வழக்கு நடத்தப்படுகிறது. ரத்த சாமுண்டியின் சன்னிதி நடை அப்போது மட்டுமே திறக்கப்படும்.

குற்றம்சாட்டியவரும் குற்றவாளியும் கோயில் குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன் காணிக்கை செலுத்தி விளக்கேற்றி தீபச்சுடரின்மேல் சத்தியம் செய்வார்கள். யாரும் பொய் சத்தியம் செய்வதில்லை என்று நம்பப்படுகிறது. இங்கு இன்றும் சாதி மத வேறுபாடின்றிச் சிக்கலான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன.

பொங்கல் வழிபாடு

ஆண்டுதோறும் இங்கு ஏழு நாள் திருவிழாவும் பொங்கல் வழிபாடும் நடத்தப்படுகின்றன. பிரசித்திபெற்ற பொங்கல் வழிபாடு பங்குனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவர். பொங்கலிட்டுப் பிரார்த்தனை செய்தால் நினைக்கும் காரியம் கைகூடும் என்பது ஐதீகம். தேவிக்குத் தாலப்பொலி நேர்ச்சை நடத்தப்படுவது இங்குள்ள சிறப்பாகும்.

தாலப்பொலி சடங்கு என்பது பெண்களும் சிறுமிகளும் பித்தளைத் தட்டில் அரிசி, மலர்கள், தீபத்தை ஏந்தி ஊர்வலமாக அம்மனை வழிபடும் சடங்காகும். தாலப்பொலி சடங்கு அனைத்து வளங்களையும் பெறவேண்டி செய்யப்படும் சடங்காகும்.

- தா. அனிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x