

அது ஓர் அழகிய காலை. கதிரொளி தீண்டத் தொடங்கிய கங்கையில் நீராடிவிட்டு, ஆதிசங்கரர் சீடர்கள் புடைசூழ கரையேறினார். அப்பொழுது எதிரே, ஒரு புலையன் நான்கு நாய்களைக் கூட்டிக் கொண்டு எதிரே வந்தான். உடனே “எட்டிப்போ” என்று விரைந்து சொன்னார் ஆதிசங்கரர். உடனே அந்தப் புலையன்
“அன்னமயாதன்னமயம் அதவா
சைதன்யமேவ சைதன்யாத்
த்விஜவர தூரீகர்தும் வாஞ்சஸி
கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி.”
பிராமணர்களில் சிறந்தவரே, விலகிப்போகச் சொல்கிறீரே! உணவினால் உருவான எலும்பும் சதையிலுமான இந்தக் கூட்டையா, உள்ளிருக்கும் என்னையா? உள்ளிருக்கும் உயிர்ப்பொருளை பிரித்துவிட்டால் இந்த உடல் ஜடத்தன்மை உடையதாகிவிடும். அது தானாய் நகராது. உயிரைச் சொல்கிறீர்கள் என்றால், உங்களிடமும் என்னிடமும் உள்ள உயிர்ப்பொருள் ஒன்றே. அது தன்னையே விட்டு எப்படி விலகும் என்று கேட்டான்.
மேலும்
கிம் கங்காம்புனி பிம்பிதே அம்பரமணெள சாண்டாலவாடீபய
பூரே சாந்தரமஸ்தி காஞ்சனகடீ ம்ருத்கும்பயோர்வாம்பரே
ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்கஸஹஜானந்தாவ போதாம்புதெள
விப்ரோயம் ஸ்வபசோயமித்யபி மஹான் கோயம் விபேதப்ரம:
கங்கை நீரிலும், சண்டாளன் வீட்டின் அருகே உள்ள கழிவு நீரிலும் பிரதிபலிக்கிற சூரியனிடம் வேற்றுமை ஏதாவது உண்டா? பொன் பாண்டத்திலும் மண்பாண்டத்திலும் உள்ள நீரை ஏந்தும் பிம்ப வடிவத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? அலையற்ற சுபாவம் கொண்ட அளவில்லாப் பேரானந்தம் உடைய கடல் போன்ற ஆன்மாவில், உருவத்தினால் ஆன இந்த வேற்றுமை எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்புகிறான்.
அக்கேள்வியால் அனைத்தும் உணர்ந்த ஆதிசங்கரர், அப்புலையனின் திருவடிகளைத் தொழுதார். சிவபெருமானே அப்புலையனின் வடிவில் வந்து தத்துவ உபதேசத்தை நிகழ்த்தினார் என்பதையும் அறிந்தார். எல்லோரிடத்திலும் உறையும் ஆன்மா ஒன்றே எனும் போது, வேறுபாடு ஏது என்பதை உணர்ந்த நிகழ்வை, ஐந்து சுலோகங்களாக இயற்றினார். அதுவே மனீஷா பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து அருமணிகள்
மனீஷா என்றால் ஐயமற ஆராய்ந்து அறிந்த நிச்சயிக்கப்பட்ட அறிவு என்பது பொருள். பஞ்சகம் என்பது ஆதிசங்கரர் இயற்றிய ஐந்து சுலோங்களின் வடிவம். ஆதிசங்கரரின் ஒப்புதல் உறுதிமொழி எனலாம்.
விழிப்பிலும் கனவிலும் உறக்கத்திலும் ஆகிய மூன்று நிலைகளிலும், எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, பிரபஞ்சத்தின் சாட்சியாக, எது பிரம்மா முதல் எறும்புவரை அனைத்து உடல்களிலும் ஊடுருவி உள்ளதோ, அதுதான் நான். நானே ஆன்மா. தூய உணர்வும் நானே. நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவன் சண்டாளனாக இருந்தாலும் சரி, அல்லது பிராமணனாக இருந்தாலும் சரி அவனே என் குரு என்பது என் உறுதியான நம்பிக்கை. இவ்வாறாக முதல் சுலோகத்தில் குருவை ஏற்கிறார்.
நான் பிரம்மம் தான். இந்த பிரபஞ்சம் முழுவதும் பிரம்மம் தான். தூய உணர்வு இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் அறியாமையினால் நான் பொருட்களைப் பிரம்மம் அல்லாததாகக் கருதுகிறேன். ஒன்றும் மீதமில்லாமல் அனைத்தும் என் கற்பனையே.
பேரானந்தமான அழிவில்லாத தூய வடிவமான பிரம்மம் தான் எங்கும் நிறைந்துள்ளது என்று எவனுக்கு உறுதியான ஞானம் உள்ளதோ, அவன் சண்டாளனாக இருந்தாலும் சரி அல்லது பிராமணனாக இருந்தாலும் சரி அவன் என் குரு என்பதே என்னுடைய உறுதியான நம்பிக்கை.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எப்பொழுதும் அழியக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இது மாயை. ஏக ஆன்மா மட்டுமே நிரந்தரம் என்ற உண்மையை உணர்வோம். இந்த உறுதியை குருவின் உபதேசத்தினால் பெற்று சஞ்சலமில்லாத தூய்மையான மனதுடன் இடைவெளியில்லாத பிரம்மத்தைத் தியானிப்பதால் கடந்த கால, வருங்கால கர்மங்களையும் மற்றும் பாவச் செயல்களையும் தூய உணர்வான நெருப்பில் எரித்துவிட்டு இந்த உடல் பிராரப்த கர்மத்தினிடம் ஒப்படைக்கப்படுகிறது.
(ஒருவனுக்கு ஒரு கண் தான் உள்ளது என்றால், அதை மாற்ற முடியாது. அவ்வாறே வாழ வேண்டும். அதுவே பிராரப்த கர்மம்.) இது தான் என்னுடைய உறுதியான நம்பிக்கை.
விலங்குகள், மனிதர்கள், தேவர்களிடமும் ஒரே தூய உணர்வு தான் உள்ளது. இந்த ‘நான்’, இவை எல்லாவற்றிலும் இருக்கிறது. தூய உணர்வின் ஒளியினால் தான் மனம், புலன்கள் மற்றும் உடல் பிரகாசிக்கின்றன. அதே தூய உணர்வுதான் மனம் மற்றும் உடலை இயக்குகிறது. அவற்றுள் உயிரைப் பிறப்பிக்கிறது.
அனைத்தின் பின்னணியிலும் அதே தூய உணர்வுதான் உள்ளது. சூரியனின் பிரகாசத்தினை மேகம் மறைப்பதைப் போல, பேருண்மையை தெரிந்து கொள்வதை நம் அறியாமை தடுக்கிறது. அதை விலக்கி, தூய உணர்வை என்றும் தியானித்து,அமைதியான மனதை அடைபவர் என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.
பிரம்மம் தூய பேரானந்தத்தின் கடலாக விவரிக்கப்படுகிறது. அந்தக் கடலின் மிகச்சிறு துளிகூட இந்திரன் போன்ற தேவர்களைத் திருப்திப்படுத்துகிறது. தேவர்கள் அச்சிறு துளியினாலேயே ஆனந்தம் அடைகிறார்கள். தியானம் செய்யும் ரிஷிகள் சஞ்சலமற்ற மனநிலையைப் பெற்றுவிட்டால் அவர்களால் தூய உணர்வின் அளவில்லா பேரானந்தத்தை அடைய முடியும். பிரம்மத்தை உணர்ந்தவர்கள் மட்டுமல்ல, அவர்களே பிரம்மமும் ஆவர். இந்திரன், தேவர்களால் போற்றப்படும் உயர் ஆன்மா ஆவர். இதுதான் என்னுடைய உறுதியான நம்பிக்கை.
இவ்வாறாக தன் ஞான அனுபவத்தை ஐந்து அருமணிகளென ஆதிசங்கரர் நமக்கு வழங்கியுள்ளார். எல்லாம் பிரம்மமே என்று உணர்ந்த பேரானந்த நிலை நோக்கி செல்ல, நமக்கு மனீஷா பஞ்சகத்தின் பேரொளி உதவும்.