

நீண்ட காலத்துக்கு முன்னர், மகிழ்ச்சி, சோகம், அறிவு, பகட்டு, அன்பு உள்ளிட்ட உணர்வுகள் அனைத்தும் ஒரே தீவில் ஒன்றாக வசித்துவந்தன. ஒரு நாள், அந்தத் தீவு கடலில் மூழ்கப் போவதாக உணர்வுகளிடம் தெரிவிக்கப்பட்டது. அப்படித் தெரிவிக்கப்பட்டவுடன், அனைத்து உணர்வுகளும் தனித்தனி படகுகளைக் கட்டமைத்து அந்தத் தீவை விட்டுச் செல்வதற்குத் தயாராயின. ஆனால், அன்பு மட்டும் செல்லவில்லை. இறுதிகட்ட சாத்தியம் இருக்கும்வரை, அந்தத் தீவில் வசிக்கலாம் என்று அது முடிவுசெய்தது.
ஒரு கட்டத்தில், அந்தத் தீவு கடலுக்குள் பெரும்பாலும் மூழ்கிவிட்டது. அப்போதுதான், அன்பு உதவி கேட்பதற்கு முடிவுசெய்தது. அந்தச் சமயம், செல்வம் ஓர் ஆடம்பரமான படகில் அன்பைக் கடந்துசென்று கொண்டிருந்தது. “என்னை உன்னுடன் அழைத்துச் செல்ல முடியுமா?” என்று செல்வத்திடம் அன்பு கேட்டது. அதற்குச் செல்வம், “இல்லை, என்னால் முடியாது. என் படகில் எண்ணற்ற தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. உனக்கு இங்கே இடம் இல்லை” என்று அன்பை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டது.
அந்த நேரத்தில், ஓர் அழகிய நீர்க்கலனில் சென்றுகொண்டிருந்த பகட்டிடம் உதவிகேட்பதற்கு அன்பு முடிவுசெய்தது. “பகட்டே, எனக்கு தயவுசெய்து உதவிசெய்!” என்றது அன்பு.
“அன்பே, என்னால் உனக்கு உதவி செய்ய முடியாது. நீ மிகவும் நனைந்து போயிருக்கிறாய். என் அழகான நீர்க்கலனை நீ நாசம் செய்துவிடுவாய்” என்று கூறிய பகட்டு, அங்கிருந்து சென்றுவிட்டது.
அப்போது, சோகம் அந்தப் பக்கம் வந்தது. அதனிடம் அன்பு, “சோகமே, என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்” என்றது. “ஓ அன்பே, நான் பெரும் சோகத்தில் இருக்கிறேன். அதனால், என்னை என் போக்கில் இருக்கவிடு!” என்றது.
சோகத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சி அங்கே வந்தது. ஆனால், அது இருந்த அளவற்ற மகிழ்ச்சியில் அன்பு அதை அழைத்ததைக் கூடச் செவிமடுக்காமல் கடந்து சென்றுவிட்டது.
அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது: “வா, அன்பே, நான் உன்னை அழைத்துச்செல்கிறேன்” என்றார் ஒரு பெரியவர். மிகவும் மகிழ்ச்சியடைந்த அன்பு, அந்தப் பெரியவரிடம் எங்கே செல்கிறோம் என்று கேட்கக்கூட மறந்துவிட்டது. நிலப்பகுதிக்கு வந்தவுடன், அன்பை இறக்கிவிட்ட பெரியவர் அவர் வழியில் சென்றுவிட்டார். அப்போது, அங்கிருந்த மற்றொரு பெரியவரான அறிவிடம், “யார் எனக்கு உதவி செய்தது?” என்று கேட்டது அன்பு.
“அது காலம்,” என்று அறிவு பதிலளித்தது.
“காலமா? ஆனால், காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?” என்றது அன்பு.
“ஏனென்றால், காலத்துக்கு மட்டும்தான் அன்பின் மதிப்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறது” என்று ஆழமான ஞானத்துடன் புன்னகைத்தபடி பதிலளித்தது அறிவு.