Published : 14 Feb 2019 10:42 AM
Last Updated : 14 Feb 2019 10:42 AM

தெய்வத்தின் குரல்: சுயம்வரத்தில் ஐந்து நளன்கள்

ஐந்து மதங்களுக்கிடையே மிக உயர்ந்த உண்மையான அத்வைதத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் ஜனங்கள் மயங்குவதுபோல், ஐந்து நளர்களுக்குள் உண்மையான நளனை அறிய முடியாமல் தமயந்தி மயங்கினாள் என்கிறார் ஸ்ரீஹர்ஷ கவி.

ஐந்து மதங்கள் என்னென்ன என்று பாரதத்தில் சொல்லியிருக்கிறது. சாங்கியம், பாதஞ்ஜலம், பாஞ்சராத்ரம், பாசுபதம், வேதம் என்பனவே அவை. ஈசுவரன் என்ற ஒன்றைச் சொல்லாமல் வெறும் தத்துவ ஆராய்ச்சியைச் சொல்வது சாங்கியம். ராஜயோகம், அஷ்டாங்க யோகம் என்றெல்லாம் செய்கிற யோக மார்க்கம்தான் பாதஞ்ஜலம். விஷ்ணு ஒருத்தர்தான் பரம்பொருள் என்று சொல்கிற மதம் பாஞ்சராத்ரம்.

இவ்வாறே சிவன் மட்டும்தான் பரமாத்மா என்கிற சமயம் பாசுபதம். வேதம், மற்ற எல்லா மதங்களையும் அங்கமாகக் கொண்டது. வேதம் சொல்கிற ஒவ்வோர் அம்சத்தைத்தான் மற்ற மதங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு அந்த ஓரம்சத்தையே ஒரு முழு சம்பிரதாயமாக்கி விட்டன. வேதத்தின் பரம தாத்பரியமோ, ‘பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; ஜீவனும்கூடப் பிரம்மம்தான்’ என்கிற அத்வைதம்தான். ஸ்ரீஹர்ஷர் இப்படித்தான் கருதி, ‘வேதமதம்’ என்று சொல்லாமல், ‘அத்வைத தத்வம்’ என்றே சொல்லியிருக்கிறார்.

மேம்பட்ட சத்தியம்

வெறும் லௌகீகத்தில் இருக்கிற ஜனங்களுக்கு எல்லா மதங்களும் வெறும் லௌகீக இந்திரிய வியாபாரத்திலிருந்து இவனுடைய பார்வையைத் திருப்புவதால், எடுத்த எடுப்பில் எல்லா சமயங்களும் ஒரே மாதிரிதான் தெரியும் – ஐந்து நளர்களும் ஒரேபோல் தென்பட்ட மாதிரி. ஆனாலும் இவர்களில் ஒரே ஒரு நளந்தானே சத்தியமானவன்? அப்படியே அத்வைதம் ஒன்றுதான் சத்தியமானது என்கிறார் ஸ்ரீஹர்ஷர்.

‘சத்தியமானது’ என்று சொல்லாமல் ‘சத்ய தரமானது’ என்கிறார். இப்படிச் சொன்னதில் நிரம்ப விசேஷம் உண்டு.

‘தரம்’ என்றால் ‘மேம்பட்டது’ என்று அர்த்தம். ‘தரமான சரக்கு’ என்று சொல்கிறோம் அல்லவா?  ‘சத்தியதரம்’ என்றால் மேம்பட்ட உண்மை என்று அர்த்தம். அப்படியானால் கீழ்ப்பட்ட சத்தியம் என்று இருக்கிறதா? இருக்கிறது. எப்போதுமே சத்தியமாக இருப்பதுதான் மேம்பட்ட சத்தியம். தாற்காலிகமாகச் சத்தியமாக இருப்பது கீழ்ப்பட்ட சத்தியம். ஒருபோதும் சத்தியமாக இல்லாததுதான் அசத்தியம் அல்லது பொய். முயல் கொம்பு ஒரு போதும் இல்லாதது.

இவை ‘அத்யந்த அஸத்’ அல்லது முழுப் பொய். தகர டப்பியின் மூடி வெயிலில் மினுக்குகிறபோது அதை ரூபாய் என்று நினைக்கிறோம்; வைக்கோலால் செய்த பழுதையை இருட்டிலே பார்த்துப் பாம்பு என்று எண்ணுகிறோம். உண்மையில் ரூபாயோ பாம்போ இல்லை. ஆனாலும், இந்த உண்மையை அறிகிற மட்டில் நமக்கு ரூபாய் கிடைக்கப் போகிறது என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி, பாம்பு கடித்து விடப் போகிறதே என்பதில் உண்டான பீதி எல்லாம் உண்மையாகவே இருக்கின்றன.

ரூபாய் இல்லாவிட்டாலும் அந்தத் தோற்றத்தை உண்டாக்குவதற்கு ஆதாரமாக ‘டப்பா மூடி’ என்கிற உண்மையான வஸ்து இருக்கிறது; பாம்புக்கு ஆதாரமாக வைக்கோற் பழுதை என்கிற வஸ்து மெய்யாகவே உள்ளது. பழுதைப் பாம்பும், டப்பா மூடி ரூபாயும் அத்யந்த அஸத் அல்ல. ஆனால் அவை நிரந்தர சத்தியமும் அல்ல. தற்காலிகமாக சத்தியம் மாதிரி இருந்து நம்மை சந்தோஷத்திலும் பயத்திலும் ஆட்டி வைத்தன. உண்மையில் மூடி என்றும் பழுதை என்றும் தெரிந்ததும் இந்த உணர்ச்சிகள் போய்விட்டன. இதைத்தான் மாயை, மித்யை, ப்ராதிபாஸிக ஸத்யம், கீழ்ப்பட்ட ஸத்யம் என்று சொல்வது. கனவுகூட இப்படிப்பட்டதுதான்.

பிரம்மம்தான் நித்திய சத்தியம்

இந்த உலக நடப்புக்களை வ்யாவஹாரிக ஸத்தியம் என்பார்கள் – விவகார உண்மை என்று அர்த்தம். உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது; நாம் மாறிக் கொண்டேயிருக்கிறோம். எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருக்கிற ‘ஸத்யதரம்’ விவகாரத்தில் இல்லை. ஞான நிலையில் பார்த்தால் இந்த விவகார சத்தியமும் கனவு மாதிரி, மூடி, ரூபாய், பழுதைப் பாம்பு இவை மாதிரிப் பிராதிபாஸிக சத்தியம்தான் என்று தெரியும். பரமாத்மா என்ற ஒன்றுதான் எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருக்கிற சத்தியம்.

அதுதான் பழுதையே பாம்பாகத் தெரிந்த மாதிரி மாயையால் இத்தனை தோற்றங்களாகவும் தெரிகிறது. இந்தத் தோற்றங்களையெல்லாம் ஞானத்தால் அழித்து விட்டால் ஆதாரமான பரமாத்மா அல்லது பிரம்மம் ஒன்றுதான் நிற்கும். விவகாரத்தை நாம் சத்தியம் என்று நினைத்தாலும் இதற்கும் மேலான நித்திய சத்தியமாக, சத்தியதரமாக இருப்பது இரண்டற்ற – அத்வைதமான – பிரம்மம்தான்.

மற்ற சித்தாந்தங்களும், மதங்களும் விவகார சத்தியம் போல் ஓரளவு வரை சத்தியமாக நிற்கும். ஆனால் எக்காலமும் சத்தியமாக, அதாவது ‘ஸத்யதர’மாக இருப்பது அத்வைதம் தான். மற்ற தேவர்கள் அந்த மற்ற மதங்களைப் போல் ஓரளவு வரை நளனைப் போல் தெரிந்தாலும், நளந்தான் சத்தியதரமானவன்.

தற்காலிக சத்தியமான உலகமே நித்ய சத்தியம் போல் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதால்தான் நாம் இந்த உலகமே உண்மை என்று மயங்கி இருக்கிறோம். தமயந்தியின் ஸ்வயம்வரத்தில் கூடிய தேவர்களும் வேஷத்தைத்தான் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அத்வைதம் தவிர இதர சித்தாந்தங்களை ஸ்ரீஹர்ஷர் பொய்யென்று சொல்லிவிட்டதாகக் கோபிக்கக் கூடாது. அத்வைதமே ‘சத்தியம்’ என்று அவர் சொல்லியிருந்தால்தான் மற்றவை ‘பொய்’ என்றாகும். ஆனால், அவர் அத்வைதத்தை ‘ஸத்யதரம்’ என்றே சொல்வதால், மற்றவையும் அடியோடு பொய்யில்லை, ஒவ்வொரு நிலையில் அவையும் சத்தியமாக இருப்பவை என்று சொன்னதாகவே ஆகிறது.

எதனிடமும் பிணக்கு இல்லை

உண்மையான அத்வைதிகள் எந்த சித்தாந்தத்தையும் துவேஷிப்பதில்லை. ‘மற்ற சமயங்கள் பரஸ்பரம் பிணங்கிக்கொள்கின்றன; நமக்கு அவை எதனிடமும் பிணக்கு இல்லை’ என்று கௌடபாதர் என்கிற ஒரு பெரிய அத்வைத ஆசாரியர் சொல்கிறார். பரமாத்மாவிடமிருந்து இரண்டாகப் பிரிந்து பக்தி செய்கிற மதங்களைக்கூட அத்வைதம் ஆரம்ப நிலையில் ஒப்புக்கொள்கிறது. சாதகன் எந்தச் சித்தாந்தத்தில் ஆழமாக ஈடுபட்டாலும் தானாகக் கொஞ்சம் கொஞ்சமாக அத்வைதத்துக்கே வந்து சேருவான் என்கிற நிச்சயம் அத்வைதிகளுக்கு உண்டு. பரம சத்தியத்துக்கு அழைத்துவர உதவி புரிகிற இதர சித்தாந்தங்களைப் பொய் என்று எப்படிச் சொல்வது?

(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x