Published : 28 Feb 2019 10:03 AM
Last Updated : 28 Feb 2019 10:03 AM

பிருந்தாவனத்தில் வாழும் ராகவேந்திரர்

துங்கபத்திரை நதிக் கரையில் ஒரு பொட்டல் வெளியில் சில குடிசைகளுடன் இருந்த மஞ்சலம்மா ஆலயம் அது.  த்வைத வேதாந்த தத்துவ அறிஞர், துறவி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் உறைவிடமாக மாறி, சாதி, மத பேதமின்றி லட்சக்கணக்கான மக்களை நாடு முழுவதுமிருந்து ஈர்க்கும் என்று யாரும் கற்பனையும் செய்திருக்க மாட்டார்கள்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தி லுள்ள கர்னூல் மாவட்டத்தில் மிகச்சிறிய வழிபாட்டு மையமாக இருந்த இந்த இடத்தில்தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் தனது முக்கியமான காலகட்டத்தைக் கழித்தார். அங்கு தானே உருவாக்கிக் கொண்ட அழகிய பிருந்தாவனத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவரே ஒவ்வொரு கல்லையும் தேர்ந்தெடுத்து தனக்கென உருவாக்கிய பிருந்தாவனம் அது.

தனக்கான சமாதியை தாமே உருவாக்கிக் கொள்வதற்கு அவரது மனம் எந்தளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீமத்வாச்சாரியார் தொகுத்த த்வைத வேதாந்தத் தைப் பரப்புவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்த ராகவேந்திரரின் உயிர்ப்பு இன்னும் மந்திராலயத்தில் உணரப்படுகிறது.

ராகவேந்திரர், தான் ஜீவசமாதியாகத் தேர்ந்தெடுத்த பிருந்தாவன இடத்தில் புராதன காலத்திலிருந்து ஒரு ஹோமகுண்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தை மேலும் புனிதப்படுத்துவதற்காக, ராமன் தண்டகாருண்ய வனத்தில் சீதையைத் தேடி அலைந்தபோது ஓய்வெடுத் ததாகக் கூறப்படும் பாறை யிலிருந்து ஒரு பகுதியை மாதவரம் கிராமத்திலிருந்து வெட்டியெடுத்து வரச் சொன்னார்.

தனது சமாதியின் உச்சியில் அதைப் பதித்து, அதில் வாயு தேவரின் உருவத்தையும் செதுக்குவதற்குப் பணித்தார். சிரவண மாதத்தின் பின்பகுதி யில் சிரவண பகுளதிவிதியை தினத்தில் 1671-ம் ஆண்டு தன் தினசரி நியமங்களை நிறைவுசெய்தார். பின்னர் பிருந்தாவனத்தில் கூடியிருந்த பக்தர்கள் முன்பு தனது கடைசி உரையை ஆற்றினார். “நான் எனது உடலை மட்டுமே பிரிந்து செல்கிறேன். எல்லாருடைய நலனைப் பாதுகாப்பதற்காகவும் நான் இங்கே என்றும் இருப்பேன்” என்று பேசினார்.

மடாதிபதி உரைக்காரர் மக்களின் குறைதீர்ப்பவர்

அவர் உடல் வைக்கப்பட்ட இடத்தின் மீது கல் பலகைகள் அடுக்கப்பட்ட பின்னர், 1200 சாளக்கிரமங்களை அவரது தலைக்கு மேல் வைக்கும்படியும், பிருந்தாவனத்தின் தலைப் பகுதியை மணலைக் கொண்டு மூடும்படியும் பணித்தார்.

மத்வாச்சாரியாரின் வழிவந்த ராகவேந்திரர் அவர் உருவாக்கிய பூர்வாதி மடத்தின் 16-வது மடாதிபதியாவார். கடலோர கர்நாடகத்துக்கு வெளியே உள்ள ஒரே மடம் இதுதான்.

ஸ்ரீராமச்சந்திர தீர்த்தர் காலத்தில் பூர்வாதி மடம் பிரிக்கப்பட்டு உத்தராதி மடம் புதிதாக உருவானது. பூர்வாதி மடம், ராகவேந்திரர் பெற்ற புகழ் காரணமாக ராகவேந்திர சாமி மடம் என்று அழைக்கப்பட்டது.

ஒரு மடாதிபதி என்ற நிலையையும் தாண்டி, ராகவேந்திரர் அருமையான பாஷ்யக்காரராகவும் விளங்கியவர். அவரது எளிமையும் தெளிவும் கொண்ட சமஸ்கிருத மொழிப் புலமையால் சிக்கலான உண்மைகளையும் சிடுக்கின்றி விளங்கவைத்தார். அதனாலேயே த்வைத வேதாந்தத்தின் சிறந்த உரையாசிரியர்களில் ஒருவராக அவர் புகழ்பெற்றார்.

மடாதிபதி, சிறந்த உரைக்காரர் ஆகியவற்றைத் தாண்டி எளிய மக்களின் விருப்பங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மந்திர சக்திகளை அவர் பெற்றி ருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது பிருந்தாவனம் அமைந்துள்ள மந்திராலயத்தில் நுழைந்து வெளியே செல்லும் எவரையும் ராகவேந்திரர் வெறுங்கையோடு அனுப்புவதில்லை என்ற நம்பிக்கை இன்னும் நிலவுகிறது.

ragavendra-2jpg100

இல்லறத்தைத் துறந்த ராகவேந்திரர்

த்வைத வேதாந்த ஆசிரியராக, உரைக்காரராக ராகவேந்திரரின் புகழ் உச்சத்திலிருந்த சமயத்தில்தான் அவரது குரு சுதீந்திர தீர்த்தரிடமிருந்து சன்னியாசத் துக்கான அழைப்பு வந்தது. அப்போது சுதீந்திர தீர்த்தர், மடத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் தனக்கு வாரிசாகவும் அடுத்த மடாதிபதியாகவும் இருக்க ராகவேந்திரரை அழைத்தார்.

ராகவேந்திரர் அப்போது மன அளவில் சன்னியாசத்துக்குத் தயாராக இல்லை. அவரது மனைவி சரஸ்வதி, மகன் லக்ஷ்மி நாராயணன் மீது அவர் அளவற்ற பற்று கொண்டிருந்தார்.

லக்ஷ்மி நாராயண னுக்கு உபநயனச் சடங்கு நடத்த அவரது குடும்பம் தயாராகிக்கொண்டிருந்த வேளை அது. சன்னியாசத்தை ஏற்க தனக்கு இன்னும் வயது வரவில்லை என்று கூறி குருவிடம் ராகவேந்திரர் மறுத்துப் பார்த்தார். ஆனால் சுதீந்திர தீர்த்தரோ, மகன் லக்ஷ்மி நாராயணனுக்கான பொறுப்பை மடமே கவனித்துக் கொள்ளும் என்று வாக்குறுதி அளித்தார்.

ராகவேந்திரருக்கு, சிரமகாலங்களில் எல்லாம் தன் மனைவி சரஸ்வதி தனக்குத் துணையாக வந்தது நினைவுக்கு வந்து துன்புறுத்தியது. அவரைப் பிரிவதை ராகவேந்திரரால் கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை. சரஸ்வதிக்கு இத்தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்குமென்று நினைத்தார்.

ஆனால் குருவின் சொல்லைத் தட்ட முடியாத ராக வேந்திரர் கடவுளின் விருப்பம் தான் குரு வழியாக வந்திருக்கிறதென்று தெளிந்தார். தனது முடிவு சுமுகமாக இருப்பதற்குக் கடவுளின் கருணையை நாடி பல தூக்கமற்ற இரவுகளைக் கழித்தார். ஒரு இரவில் தியானத்திலிருந்தபோது வித்யா மடத்துக்கான பொறுப்பை ஏற்பதற்கான செய்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர், தன்னை வதைத்த அச்சங்களும் சந்தேகங்களும் முழுமையாகக் களையப்பட்ட ராகவேந்திரர், சன்னியாசத்தை ஏற்பதாகத் தனது குருவிடம் தெரிவித்தார். வேங்கடநாதா என்ற இயற்பெயருடையவர் ஸ்ரீராகவேந்திரரானார். தஞ்சாவூரின் அப்போதைய மன்னர் ரகுநாத நாயக்கரின் முன்னிலையில் இந்தச் சடங்கு நடைபெற்றது.

 

bookjpgright

தி இந்து குரூப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள The Living Saint Of Mantralayam நூலில் இதுபோன்ற அரிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

SRI RAGAVENDRA SWAMY

தி இந்து குரூப் பப்ளிகேஷன்ஸ், 859-860, அண்ணா சாலை, சென்னை– 02

விலை : ரூ. 299/-

தபால் வழியாக காசோலை அனுப்பிப் பெறலாம். THG Publishing Private Limited என்ற பெயரில் ரூ. 334/-க்கு காசோலை அனுப்பிப் பெறலாம். தபால் செலவு ரூ. 35/-

இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications

மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878

 

- டி. வி. சிவானந்தன் | தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x