

ஆஞ்சனேயர் சீதையைத் தேடிக்கொண்டு இலங்கையை அடைவதற்காகக் கடல்தாண்டிச் செல்கிறார். வழியில் பல இடர்கள். அவற்றை வென்று இலங்கையை அடைகிறார் சுந்தரன் என்னும் ஆஞ்சனேயன். அனைத்துக் காண்டங்களிலும் சுந்தர காண்டமே மிகவும் ஆழமான உளவியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
அனுமன் எழுந்து கடலுக்கு மேல் பறந்து செல்லும்போது சமுத்திர ராஜனின் ஆணையின்படி மைனாக மலை நீர்ப்பரப்புக்கு மேல் எழுகிறது. யாரோ தடை ஏற்படுத்துகிறார்கள் என்று கோபப்படும் ஆஞ்சனேயனிடம், ஸ்ரீ ராமபிரானின் வேலையாகச் செல்வதால், சற்று நேரம் இளைப்பாறிவிட்டுச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது மைனாகம். ‘வேலை முடியாமல் ஓய்வெடுப்பது சரியல்ல,’ என்று நன்றியுடன் மலையைத் தொட்டுவிட்டு மேலே செல்கிறார் அனுமன்.
அடுத்து எழுவது நாகர்களின் தாயான ஸுரஸை. தன் வாய்க்குள் புகுந்துவிட்டுச் செல்லும்படி அனுமனிடம் சவால் விடுகிறாள் ஸுரஸை. அனுமன் தன் உருவத்தைப் பெரிதாக்கிக்கொள்கிறார். அவளும் தன் வாயை இன்னும் பெரிதாகத் திறக்கிறாள். இவ்வாறு அனுமன் தன் உருவத்தை மேலும் பெரிதாக்கிக்கொள்ள, அவளும் தன் வாயை இன்னும் பெரிதாகத் திறக்கிறாள்.
சட்டென்று ஒரு கணப் பிளவில் சுண்டுவிரல் அளவுக்குத் தன்னைச் சுருக்கிக்கொண்ட அனுமன், அவள் வாயை மூடுவதற்குள் உள்ளே புகுந்து வெளிவந்துவிடுகிறான். அனுமனின் புத்தியையும் தீரத்தையும் பரிசோதிப்பதற்காகவே தான் இப்படி நடந்துகொண்டதாகக் கூறித் தன் ஆசியை அனுமனுக்கு வழங்குகிறாள் நாகர்களின் தாய்.
நிழலைப் பிடித்து இழுத்தாள்
அடுத்ததாகக் ஸிம்ஹிகை என்னும் அரக்கி கடற்பரப்பில் விழும் ஆஞ்சனேயரின் நிழலைப் பிடித்து இழுக்கிறாள். ஆஞ்சனேயர் தன் உடலைப் பெரிதாக்கிக்கொள்கிறார். ஸிம்ஹிகையும் தன் உருவத்தைப் பெரிதாக்கிக்கொள்கிறாள்.
சட்டென்று தன் உடலைக் குறுக்கிக்கொண்டு அவள் வாய் வழியாக வயிற்றுக்குள் புகுந்த அனுமன், மறுகணம் உடலைப் பெரிதாக்கிக்கொண்டு அவள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வருகிறார். இந்தச் சம்பவங்களுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
உளவியல் இலக்கணப்படி, கடல் போன்ற நீர்ப்பரப்புகள் நம் பிரக்ஞையின் குறியீடாக இயங்குகின்றன. மேற்பரப்பு நனவு மனத்தையும், கடலின் ஆழங்கள் நனவிலி மனத்தின் ஆழங்களையும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். தீவு என்பது, உளவியல் இலக்கணப்படி, ‘நான் தனியானவன்; நானே அனைத்திலும் மிகச் சிறந்தவன்,‘ என்ற அகந்தையைக் குறிக்கிறது. இலங்கை என்னும் தீவில் சீதை இருக்கும் நிலை, தனக்குள் தன் பெண்மைத் தன்மையை அடக்கிச் சிறை வைத்திருக்கும் மனித அகந்தையின் அறியாமையைச் சுட்டிக் காட்டுகிறது.
நனவிலியின் ஆழ்தளங் களிலிருந்து எழும் அனைத்தும் தீங்கு விளைவிப்பவை என்று கொள்ள அவசியமில்லை என்பதை மைனாக பர்வதம் மேலெழுவது காட்டுகிறது என்று கொள்ளலாம்.
ஸுரஸையின் எதிர்கொள்ளலின்போது அனுமன் தன் உருவத்தை முதலில் பெரிதாக்கிக் கொண்டு, பிறகு மிகச் சிறிய அளவுக்குச் சுருக்கிக்கொள்வதால் ஒரு கணத்தில் அவள் வாயினுள் புகுந்து வெளிப்பட முடிகிறது. நம்மைப் பற்றிய நம் மனப்பிம்பம் வீங்கிப் பெருத்திருக்கிறது.
அதை விடுத்து நம் மன ஆகிருதியை எளிமையாக வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடமுடியும் என்பதையே இது காட்டுகிறது.
அடுத்து ஸிம்ஹிகை. நிழலைப் பிடித்து அவள் இழுக்கிறாள் என்றால், நிழல் விழாத யாரையும் அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆகிறதல்லவா? நம்முடைய நிழல் என்பது என்ன? ஆழமான விஷயங்களைக் கதைகளாகக் கூறுவது நம் புராணங்கள் என்றுதானே நாம் கருதுகிறோம்? அப்படியென்றால் இந்தச் சம்பவத்திற்கு என்ன உட்பொருள்?
நம்பிக் கொண்டிருக்கும் நாம்
நம் உண்மையான சுயத்துக்கு நிழல் கிடையாது. நம் சுயம் ஒரு ஒளிச்சுடர். ஒரு ஜ்வாலை. ஒளிச்சுடருக்கு நிழல் உண்டா? அப்படியென்றால் நம் நிழல் என்பது என்ன? நம் உண்மைச் சுயம் மனத்துக்கு அப்பாற்பட்டது. அதன் ஒளியில்தான் நாம் எல்லாவற்றையும் காண்கிறோம்.
மனமே அதன் ஒளியில்தான் இயங்குகிறது. ஆனால் நம் அனுபவங்களின் பதிவுகள் நம் மனத்தில் நம்மைப் பற்றி ஒரு பிம்பத்தை, பொய்ச்சுயத்தை (Ego) உருவாக்கியிருக்கின்றன. நம் சுய ஒளியை நாம் உணராதிருக்கும் நிலையில் மனத்தில் விழும் நம் பொய்ச்சுய நிழலை 'நாம்' என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
மனத்தில் இருக்கும் நம் பெயர், நம் உடலுருவம், நம் இறந்தகால மனப்பதிவுகள், இவற்றை அடிப்படையாக வைத்து இந்தப் பொய்ச்சுயம் என்னும் நிழல் உருவாகியிருக்கிறது. வெறும் மனப்படம் இது. இதற்கு உண்மையான இருப்பு கிடையாது. நம் அறியாமையின் விளைவாக இதுவே ‘நான்’ என்று இதில் போய்ச் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிழற்சுயம் இருக்கும் வரைக்கும், அதையே ‘நாம்' என்று நம்பிக்கொண்டிருக்கும் வரைக்கும், பிரக்ஞை என்னும் உயிர்க் கடலில் உள்ள 'உலகம்' என்னும் இந்த ஸிம்ஹிகை நம்மைப் பிடித்து இழுத்துக்கொண்டுதான் இருப்பாள். அவள் வாய்க்குள் போய் நாம் விழுந்துகொண்டுதான் இருப்போம். நமக்கு விமோசனம் கிடையாது. நிழலுக்கு ஏது விமோசனம்?
தொடக்கமும் முடிவும் அற்ற சிரஞ்சீவியான நம்மை அனுபவிப்பவனாக, அல்லது அனுபவிப்பவளாக எண்ணிக்கொண்டு, பிறந்து, இருந்து, மறையும் ஒரு அற்ப ஜீவனாக நம்மைக் கருதிக்கொள்ளும் அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அனுபவம் எழுகிறது, இருக்கிறது, மறைகிறது. ஆனால் ஒளி எழுந்து. இருந்து, மறையும் அவஸ்தைக்கு உட்பட்டதில்லை. தான் விழும் நிலத்திற்கேற்ப நிழலின் உருவம் குறுகியோ, நீண்டோ, வளைந்தோ நேராகவோ இருக்கிறது, இல்லையா? அதேபோல்தான் நம் பொய்ச்சுயம் நாம் பிறந்துள்ள நாடு, நாம் பேசும் மொழி, நாம் பிறந்துள்ள குடும்பம், இவற்றிற்கேற்ப உருவெடுத்துக்கொள்கிறது.
நம் உண்மையான சுயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் 'நான்' என்னும் உணர்வான நம் பிரக்ஞையை மனத்தின் நினைவுப் பதிவுகளிலிருந்து விடுவித்துக் கொண்டாக வேண்டும். மனத்தளவில் நம் இயக்கத்தை முடிந்த அளவு சுருக்கிக்கொள்ள வேண்டும். அதுதான் ஆஞ்சனேயர் செய்தது.
வாழ்க்கை என்னும் எல்லையற்ற பெருங்கடலில் உலகம் என்பது ஒரு பகுதிதான். இங்கே பல சக்திகள் இயங்குகின்றன. இந்தச் சக்திகள் நமக்கு வெளியில் எங்கும் இல்லை. நமக்கு உள்ளேயே இயங்கும் பிரபஞ்ச சக்திகள்தான் இவை. நம்மை நாம் கண்டடைந்து நம் தொடக்கத்தில் மறுபடி வந்து சேரும் பயணத்தில் நாம் சந்திக்க வேண்டிய இடர்கள்தான் இவை. இந்த அனுபவங்கள் அவசியமானவை. தவிர்க்க முடியாதவை. தவிர்க்கக் கூடாதவை. எதிர்கொண்டு சந்திக்க வேண்டியவை.
இதையெல்லாம் கடந்துதான் நம் தோற்றுவாயான உண்மையை, சத்திய ஒளிப்பிழம்பை நாம் அடைய முடியும். நம் வாழ்க்கையின் ஜாலம்தான் சுந்தர காண்டம். நம் பிரக்ஞையில் விழிப்பற்ற நிலையிலிருந்து முழுவிழிப்பு நிலைக்கு நாம் செல்ல நாம் மேற்கொள்ளும் பயணம்தான் அனுமன் கடலைத் தாண்டுவது.
(கடல்களைத் தாண்டுவோம்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com