

சந்தோஷமாக இருப்பதற்கு நீங்களே போதும். சுகம் உங்களைச் சூழ்ந்துதான் எப்போதும் இருக்கிறது. உண்மையில் நீங்கள் சுக சொரூபி. ஆனால், நீங்களோ சுகசொரூபமாக ‘ஆவதற்கு’ முயல்கிறீர்கள்.
வாழ்நாள் முழுவதும் சுக சொரூபமான நம்மையே நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். சுக சொரூபமாக ஒருவர் தன்னை அறியும்போது, நான் இப்படி அப்படி என்று தன்னையே தவறாக மதிப்பிடுவது மறைந்து விடுகிறது. யார் தன்னை அறிகிறாரோ, அவர் துக்கத்தைக் கடக்கிறார் என்பதை ‘ஆத்மவித் சோகம் தரதி’ என்று வேதம் குறிப்பிடுகிறது. தன்னை அறிந்திட ஈசனை அறியவேண்டும்.
ஈச்வரனை அறிந்துகொள்ளாமல் ‘தான் யார்’ என்பதை ஒருவரால் அறிந்துகொள்ள முடியாது. இரண்டும் சம்பந்தப்பட்டுள்ளன. நான் யார் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் நான் எந்தத் திட்டத்தின் ஒருபகுதி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் ஓர் உறுப்பினராக நீர் உள்ளீர். உலகம் என்பது சமுதாயம், நாடு, ஊர், கிராமம் எல்லாமும். உம்மைச் சூழ்ந்திருப்பவை! இதில் நீங்கள் ஒரு அங்கம். இந்தக் கட்டமைப்பு உங்களுக்கு வழங்கப்பட்டது.
நீங்களாகத் தேடிக் கொண்டதல்ல. மனம் எனும் கருவி பிறந்தபோதே கொடுக்கப்பட்டது. நீங்கள் உருவாக்கிக் கொண்டதல்ல. மனம், புலன்கள் யாவும் வழங்கப்பட்டவை. சுற்றியுள்ள சமுதாயம் கொடுக்கப்பட்டது. நீங்கள் அதில் சிக்கிக்கொண்டீர்கள். கொடுக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளை நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட மனம், உடல், புலன்களைக் கொண்டு சமாளித்தாக வேண்டும்.
எல்லா வடிவங்களும் இறைவனின் வெளிப்பாடுகள். எனவே, எல்லா வடிவங்களும் ஈச்வரனே. வடிவங்கள் எண்ணற்றனவாக உள்ளதால் அவற்றிற்கு நாம் இடும் பெயர்களும் எண்ணற்றனவாக உள்ளன. அவை அத்தனையும் ஈச்வரனின் நாமங்களே. ஆதலால், ஈச்வர நாமம் எண்ணிறந்தவை. எண்ணிறந்த நாமங்களில் ஓர் ஆயிரத்தை மட்டும் தேர்ந்தெடுத்துப் போற்றுகிறோம்.
நாமங்கள் வெறும் சொற்களாக இருந்தாலும் அவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ளும் போது ஈச்வரனைப் புரிந்து கொள்கிறோம்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தமிழில்: பேரா. க. மணி அபயம் பப்ளிஷர்ஸ் விலை: 1000/- தொடர்புக்கு: 94426 27280 |