

இல்லத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி என்பது மிக உயரிய சொத்து. இது பல தலைமுறைகளைக் காக்கும் என்பதால் ராமர், கிருஷ்ணர் ஆகிய விஷ்ணு அவதாரங்கள்கூட இந்த நாளில் தர்ப்பணம் செய்தார்களாம். அவர்களோ ஆதிமுதலான தெய்வங்கள் அவர்களுக்கு எங்கே முன்னோர்கள் என்று தோன்றலாம்.
அவர்கள் விஷ்ணுவாக இருக்கும்போது, தர்ப்பணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித உருவெடுத்துப் பிறந்த இல்லங்களில் முன்னோர்கள் உண்டல்லவா? அம்முன்னோர்களைத் திருப்திபடுத்தவே, ஆராதிக்கவே ராமரும், கிருஷ்ணரும் தர்ப்பணம் செய்தார்கள் என்பது குறிப்பிட்டு நோக்கத்தக்கது.
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட அவதாரங்களே தர்ப்பணம் பண்ண வேண்டுமென்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? பித்ருக்களின் ஆசீர்வாதம் குலத்தைக் காக்கும் என்பார்கள். மனித குலத்தைக் காக்கவே அவர்களும் தர்ப்பணம் செய்தார்கள் போலும்.
தர்ப்பணம்
உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம்.
தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.
மகாளய புண்ணிய காலம்
தம் குலக் கொழுந்துகள் நன்றாக இருக்கின்றனரா என்று காண வரும் முன்னோர்கள் மனம் மகிழும்படி இக்காலகட்டத்தில் இல்லத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். சண்டை சச்சரவுகள் இன்றி, இல்லம் அமைதியாக இருப்பது அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்குமாம்.
இந்த மஹாளய பட்ச நாட்களைக் குறித்து கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் காகத்துக்கு அன்னமிடுதலும், பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தலும் பல நற்பலன்களை அளிக்கும்.
பலன்
பித்ருக்கள் ஒருபோதும் தன் குலத்தைச் சபிக்கப்போவது இல்லைதான். ஆனால் அவர்கள் மனம் மகிழ்வடையும்பொழுது, வழங்கும் ஆசிகள் இல்லத்தில் கவலை அளிக்கக்கூடிய, திருமணத் தடை, புத்திரப் பேறின்மை, கடன் தொல்லை, மனக் கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும் என்பது நம்பிக்கை.இந்த நன்னாட்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எனச் சில விஷயங்கள் உண்டு.
செய்ய வேண்டியவை
இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம்.
தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே.
தவிர்க்க வேண்டியவை
கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.