

வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லா செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கு உம்மோடு
ஒரு பாடுழல்வான் ஓரடியானும் உளனென்றே
என்று நம்மாழ்வாரால் திருவாய்மொழியில் பாடப்பட்ட தலம் திருப்பதிசாரம். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று திருப்பதிசாரம். நாகர்கோவிலிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
நம்மாழ்வாரின் தாய் பிறந்த இடம்
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை பிறந்த இடம் இது. உடைய நங்கை இளமையிலேயே விஷ்ணு மீது மிகுந்த பக்தியுடையவள். மணம் முடிந்தபின் நீண்ட நாட்களாக உடையநங்கைக்கு குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. திருவாழ்மார்பனை வேண்டி 41 நாட்கள் விரதம் மேற்கொண்டார். பெருமாளின் திருவருளால் கர்ப்பமுற்ற இவருக்கு ஒரு வைகாசி விசாகத்தில் குழந்தை பிறந்தது. அக்குழந்தைதான் நம்மாழ்வார்.
திருமால் தனது பக்தன் பிரகலாதனுக்கு அவன் தந்தை இரணியனால் இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளைத் தாங்கமுடியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை சம்ஹாரம் செய்தார். அதன் பின்னும் உக்கிரமாக இருந்த பரந்தாமனைக்கண்டு பயந்துபோன லட்சுமிதேவி திருமாலை விட்டு பிரிந்து திருப்பதிசாரம் வந்து தவம் மேற்கொண்டார். பின்னர் பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்தமடைந்த பகவான், லட்சுமிதேவியைத் தேடி திருப்பதிசாரம் வந்தார்.
லட்சுமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் பகவான் இங்கு திருவாழ்மார்பன் என்றழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். திருவாகிய லட்சுமி பதியாகிய விஷ்ணுவைச் சார்ந்து இந்த ஊரில் தங்கியதால் இந்த இடம் திருப்பதிசாரம் என அழைக்கப்பட்டது. நம்மாழ்வாரின் முன் பெருமாள் காட்சியளித்த இடம் இது எனவும் தலபுராணம் கூறுகிறது.
அபிஷேகம் இல்லாத மூலவர்
நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் பாடப்பட்ட திருவாழ்மார்பன் இங்கு கருவறையில் ஏழு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்குசக்கர தாரியாக வலது காலை மடக்கியும் இடதுகாலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தடன் காட்சியளிக்கிறார். இங்கு மூலவர் கடுகு, சர்க்கரை, மலை தேசத்து மூலிகைகளால் (கடுசர்க்கரை யோகம்) வடிவமைக்கப்பட்டுள்ளதால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது.
பஞ்சகவ்யத்தால் தூய்மை செய்வது சிறப்புக்குரியது. திருமகளுக்குத் தனியாக சன்னிதி இங்கு இல்லை. லட்சுமி மூலவரின் நெஞ்சில் குடியமர்த்ப்பட்டுள்ளதாக ஐதீகம். திருவாழ்மார்பன் இங்கு சப்தரிஷிகள் புடைசூழக் காட்சியளிக்கிறார். இது எங்கும் காணமுடியாத காட்சி. கருவறையில் திருவாழ்மார்பன் ஸ்ரீதேவி, பூதேவி, நிலாதேவி சகிதம் வீற்றிருக்கிறார்.
நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்து செல்வது போன்ற அழகியசிலை ஒன்றும் இங்கு காணப்படுகிறது. கருவறையின் வலது பக்கம் ராமர், சீதை, அனுமன், லட்சுமணன் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டுள்ளன. கருவறைச் சுற்றில் கன்னி மூல விநாயகர் தரிசனமளிக்கிறார். இங்கு விமானம் இந்திர கல்யாண விமான அமைப்பைச் சார்ந்தது.
இக்கோயிலில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஒற்றைக் கல்மண்டபம் ஆகிய மண்டபங்களும் உள்ளன. கோயிலுக்கு வெளியே 40 அடி உயரமுள்ள கொடிமரம் உள்ளது. கொடிமரத்தின் பக்கத்தில் பெரிய பலிபீடம் ஒன்றும் உள்ளது. கோயிலுக்கு வெளியே சோமதீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளியே வடக்குப்பகுதியில் உடையநங்கையார் அவதரித்த பகுதியுள்ளது. நம்மாழ்வாரின் தாயாரின் இந்த வீடானது இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் திருவாழ்மார்பனை வேண்டினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு வெள்ளிக்கிழமைதோறும் கருட சேவை விசேஷமாக நடைபெறும். சித்திரை மாதம் பத்து நாள் திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறுவது வழக்கம். வைகாசி விசாகமும் இங்கே விசேஷ நிகழ்வாக உள்ளது.