

பாண்டவர்களுக்கு மக்கள் மனத்தில் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே போயிற்று. விரைவில் யுதிஷ்டிரன் அரசனாகப் பதவியேற்கும் திருநாளுக்காக மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் துரியோதனன் மட்டும் தான் மன்னனாகப் பதவியேற்கும் வைபவத்தைக் கற்பனை செய்துகொண்டே இருந்தான். மாமன் சகுனியும் அந்த எண்ணத்துக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருந்தான்.
ஆனால் பாண்டவர்கள் உயிரோடு இருக்கும் வரையிலும் அந்த எண்ணம் ஈடேறுவதற்கு வழியில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த துரியோதன னும் சகுனியும், பாண்டவர்களை அடியோடு அழித்துவிடுவதற்கான உபாயத்தை முடிவுசெய்தார்கள்.
வாரணாவதம் என்னும் நகரத்தில் புரோசனன் என்ற மந்திரியை அனுப்பி, பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒரு மாளிகையைக் கட்டச் செய்தான் சகுனி. அந்த மாளிகை சுலபமாகத் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள்களான அரக்கு, மெழுகு, குங்கிலியம், சணல் போன்றவற்றை வைத்துக் கட்டப்பட்டது. கட்டிடத்தின் மேற்பூச்சுகூட சுலபமாகத் தீப்பற்றிக் கொள்ளும் பொருள்களை வைத்தே செய்யப்பட்டது.
தீ நெருப்பு கவனம்
திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சென்று, வாரணாவதத்து மக்கள் பாண்டவர்களைக் காண ஆவலாக இருப்பதால் அவர்களை அங்கு அனுப்பும்படி சொன்னான். மகன் மீதுள்ள குருட்டுத்தனமான பிரியத் தின் விளைவாக திருதராஷ்டிரன் அவ்வாறே செய்தான்.
பாண்டவர்களும் அவர்கள் தாய் குந்திதேவியும். விதுரனிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது, துரியோதனனின் சூழ்ச்சியை அறிந்திருந்த அவர், 'எப்போதும் சுற்றிலும் கவனமாக இருங்கள். வாழ்க்கை தீயைப் போன்றது. எங்கும் நிறைந்துள்ளது நெருப்பு,' என்று மீண்டும் மீண்டும் ‘தீ' என்று பொருள்படும்படி அவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை சூசகமாக உணர்த்தினார். பாண்டவர்களும் அவர் குறிப்பைப் புரிந்துகொண்டு அவரை வணங்கி ஆசி பெற்றுப் புறப்பட்டார்கள்.
வாரணாவதத்து மக்கள் அவர்களைக் கோலாகலத்துடன் வரவேற்றார்கள். பாண்டவர்கள் அரக்கு மாளிகையை அடைந்தார்கள். காண்பதற்குக் கண்ணைக் கவர்ந்திழுக்கும்படியாக இருந்தாலும், தங்களைக் காவுகொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும் நெருப்புக் கூண்டு அது என்பதை அவர்கள் சிறிது நேரத்திலேயே கண்டுகொண்டனர். புரோசனனும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதாகச் சொல்லிக்கொண்டு, அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி அங்கேயே தங்கியிருந்தான்.
விரைவில் விதுரன் அனுப்பிய ரகசியத் தூதன் ஒருவன் புரோசனனுக்குத் தெரியாமல் பாண்ட வர்களைச் சந்தித்தான். விரைவில் அந்த மாளிகையினுள்ளிருந்து வெளியே தப்பிச் செல்வதற்கு ஒரு சுரங்க வழியை அமைத்து விடுவதாகவும் அதுவரையிலும் மிகவும் விழிப்புடன் இருக்கும்படியும் அவன் சொன்னான். அதேபோல் பகலிலும் இரவிலும் யாராவது ஒருவர் விழித்துக்கொண்டே இருக்கும்படியாக ஏற்பாடு செய்துகொண்டார்கள் அவர்கள்.
சுரங்கப்பாதை தயாரானது. பாண்டவர்கள் அங்கிருந்து தப்பிப் போகும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். ஒருநாள் மாலை புரோசனனைச் சந்திக்க ஒரு கிழவியும் அவள் மகன்கள் ஐந்து பேரும் அரக்கு மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன் சேர்ந்து புரோசனனும் குடித்துவிட்டுப் புரண்டுகொண்டிருந்தான். அவன் தன் சுயநிலையில் இல்லாத அந்த நேரம்தான் தப்பிப் போவதற்கு உகந்தது என்று முடிவுசெய்து பாண்டவர்கள் இரவில் தாமே அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துவிட்டுச் சுரங்கப் பாதை வழியாகத் தப்பிச் சென்று கானகத்தை அடைந்தனர்.
தீயில் வெந்து அடையாளம் தெரியாமல் கருகிப் போயிருந்த சடலங்களைக் கண்ட வாரணாவதத்து மக்கள் பாண்டவர்களும் குந்தியும் தீயில் கருகி மாண்டனர் என்று நினைத்துப் பெரும் துக்கம் அடைந்தனர். செய்தி போய்ச் சேர்ந்ததும் துரியோதனனும் சகுனியும் தங்கள் சூழ்ச்சி வெற்றிபெற்றது என்று மகிழ்ச்சி அடைந்தனர். விதுரனைத் தவிர மற்ற பெரியவர்களும் பாண்டவர்கள் மடிந்து போனார்கள் என்று நம்பிச் சொல்லொணாத் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
தப்பிச் சென்ற பாண்டவர்கள் அந்தண வேடம் தரித்து ஏகசக்ரா நகரத்தைச் சென்றடைந்தனர். மேற்கொண்டு கதை போகிறது.
இந்தக் கதைக்கு உட்பொருள் என்ன? அரக்கு மாளிகை என்பது எதன் குறியீடு? கௌரவர்கள், பாண்டவர்கள் என்பது எதைக் குறிக் கிறது? விதுரன் எதன் குறியீடு? இந்தக் கேள்விகளை நாம் ஆலோசிப்போம்.
தீப்பற்றக் காத்திருக்கும் மனங்கள்
புராணக் கதைகள் மனிதப் பிரக்ஞையின் உள்ளியக்கங்களை விளக்குவதற்காக ஏற்பட்டவை. அந்தக் கோணத்தில் பார்த்தால் அரக்கு மாளிகை என்பது மனிதப் பிரக்ஞையின் இன்றைய நிலையைக் குறிப்பதாகக் கொள்ள முடியும். ஒரு தீப்பொறி பட்டால் பற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பது அரக்கு மாளிகை. அதேபோல் சிறுபொறி போன்ற உணர்ச்சிகள், முக்கியத்துவம் இல்லாத சிறு சம்பவங்கள் நம் மனத்தைத் தீப்பற்றி எரியச் செய்கின்றன. உறவு நிலைகள் சார்ந்த முரண்பாடுகள், மனஸ்தாபங்கள் நம் மனங்களில் பெரும் தீயை மூட்டி விடுகின்றன. அற்பமான சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் உறவை முறித்துவிடும் அளவுக்குக் கசப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த மாதிரியாகத்தான் நாம் நம் மனத்தைக் கட்டமைத்திருக்கிறோம். கோபம், அகங்காரம், பொறாமை, சுய பச்சாதாபம், காழ்ப்புணர்ச்சி, விரோதம், குரோதம், பேராசை, அழிவை உண்டாக்கும் நோக்கங்கள், பிறருக்குக் கேடு நினைக்கும் மனப்பான்மை என்று அரக்கு மாளிகையைப் போன்றே எளிதில் தீப்பற்றிக் கொள்ளும்படியான தன்மையுடன் இயங்குகின்றன நம் மனங்கள்.
துரியோதனாதிகள் நம் மனத்தின் அறியாமை என்னும் இருள் சார்ந்த போக்குகளைக் குறிக்கின்றன என்று கொள்ளலாம். சகுனி என்பது அந்த இருண்ட நினைப்புகளைத் தூண்டி விடும் கேடு சார்ந்த தன்மையை, துர்ப்புத்தியைக் குறிக்கிறது.
பாண்டவர்கள் என்பது பிரக்ஞையின் வளர்ச்சி சார்ந்த, முன்னேற்றம் சார்ந்த தன்மைகளைக் குறிக்கிறது. அந்த விதமான தன்மைகளைத் தூண்டி, அவற்றுக்குப் பாதுகாப்பளித்து, அவை வளர்ச்சி கொள்வதற்கான உபாயங்களைத் தந்து வழிநடத்தும் புத்தியின் குறியீடு விதுரன்.
புத்தியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் பிரக்ஞையின் இருண்ட சக்திகள் இல்லை. அவற்றை துர்ப்புத்தி தன் வசப்படுத்தி வைத்துள்ளது. புத்தி வேறு வழிகளில்தான் ஒளி சார்ந்த சக்திகளைக் காக்க வேண்டியுள்ளது. விதுரன் சுரங்கப் பாதை அமைத்துப் பாண்டவர்களைக் காப்பது இந்த விஷயத்தைத்தான் குறிக்கிறது. அவ்வாறு தப்பிச் சென்ற பின்னும் கொஞ்ச காலத்துக்குத் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல்தான் ஒளிசார்ந்த சக்திகள் இயங்க வேண்டியிருக்கிறது.
அவ்வாறு காத்திருத்தல் பிரக்ஞையின் வளர்ச்சியில் முக்கியமான ஒரு விஷயமாகும். அப்படி மறைந்திருந்துதான் பாண்டவர்கள் பகாசுர வதம் முடிந்து கடைசியில் திரௌபதியைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அப்போதுதான் பாண்டவர்கள் இன்னும் உயிரோடு இருப்பது வெளியில் தெரியவருகிறது. பிரக்ஞையில் வளர்ந்துவரும் வருங்காலத்துக்கான புதிய ஆக்க சக்திகள் இவ்வாறு முதலில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைந்திருந்து, பின்னர் தகுந்த சமயம் வரும்போதுதான் முழுமையாக வெளிவர முடியும்.
தீய சக்திகளுக்குத் துணைபோகும் உபசக்திகள், தாம் அமைத்த சூழ்ச்சி வலையில் தானே விழுந்து அழிந்து போகும் நிலையை புரோசனனின் பாத்திரம் காட்டுகிறது. அவ்வாறு அழியும்போது பொய்யான சில சக்திகளும் கூடவே மாய்ந்து போகும் தன்மையை புரோசனனுடன் குடித்துக் கும்மாளமிட்ட கிழவியும் அவள் மகன்களும் குறிக்கின்றனர் என்று கொள்ள முடியும்.
ஒளி சார்ந்த சக்திகளுக்கு எப்போதும் பேரொளி துணை நிற்கிறது. ஒளி என்பது அறிவுணர்வு. விதுரன் புத்தியைக் குறிப்பதாகக் கொண்டால், பாண்டவர்களுக்குப் பெருந்துணையாகக் கிருஷ்ணன் கூடவே இருந்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும். கிருஷ்ணன் என்பது சுத்தப் பிரக்ஞையை, அகண்டப் பிரக்ஞையை, அனைத்துக்கும் ஆதாரமான பிரபஞ்சப் பிரக்ஞையைக் குறிக்கிறது.
இவ்வாறு புராணங்களின் பல்வேறு கதைகளிலும் சம்பவங்களிலும் பொதிந்து நிற்கும் பல உண்மைகளை நாம் கண்டடைய முடியும்.
(ஒளியைத் தொடர்வோம்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com