

செய்த பிழை பொறுத்து சிறியேனை ஆட்கொண்டு
சிந்தையில் வருவாயே குளத்தூரில் அய்யனே…
வைதாலும் அவர் வாழ அருள் செய்யும் மணிகண்டா…
வாயார வாழ்த்தி உன்னை வணங்குவோர்க்கு என்ன செய்யாய்…
- அய்யப்பன் பூஜையின் போதும், பஜனைப் பாடல்களின் இறுதியிலும் “அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னித்து தங்களைக் காக்கும்படி” அய்யப்பனிடம் பக்தர்களின் வேண்டுதல் நடக்கும். அதைத் தொடர்ந்து பாடப்படுவது `செய்த பிழை பொறுத்து’ என்னும் இந்தப் பாடல்.
இந்தப் பாட்டுக்கு இசையமைத்துப் பாடியிருக்கிறார் வீரமணிதாசன். அதோடு இந்தக் காணொலியில் பாலகன் அய்யப்பனோடு அளவளாவும் பக்தனாகவும் தோன்றுகிறார். வீரமணிதாசனின் குரலில் உருக்கமும் பக்தியும் போட்டி போடுகின்றன.
ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் தயாரித்திருக்கும் இந்தக் காணொலியில் இடம்பெற்றிருக்கும் பாடல் காலம் காலமாக பாரம்பரியமாகப் பாடப்பட்டு வருகிறது.
அய்யப்ப பூஜையில் மிகவும் அரிதான கலை வடிவமாகக் கொண்டாடப்படும் சாஸ்தா வரவுப் பாடல்களை கம்பங்குடி வம்சத்தினர் இன்றைக்கும் கல்லிடைக்குறிச்சியில் ஆடி மாதத்தில் விமரிசையாக நடக்கும் சாஸ்தா ப்ரீதி திருவிழாவில் பாடிவருகின்றனர். கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த மணிதாசர் என்பவரே இந்தப் பாடலை எழுதியதாகக் கருதப்படுகிறது.
கம்பங்குடி பாரம்பரியம்
கல்லிடைக்குறிச்சியில் பூர்ண புஷ்கலா சமேத குளத்தூரில் அய்யன் என்பதுதான் சாஸ்தாவின் திருநாமம். சாஸ்தா வரவுப் பாடல்கள் அனைத்திலும் `குளத்தூரில் அய்யன்’ என்றே இருக்கும். கல்லிடைக் குறிச்சியில் இன்றைக்கும் திருவிளக்கில்தான் சாஸ்தா ஆவாஹனம் செய்யப்படுகிறார்.
கல்லிடைக்குறிச்சி கரந்தையார் பாளைய பிராமண சமூகத்தினரால் 900 ஆண்டுகளாகச் செய்யப்படுவது சாஸ்தா ப்ரீதி சம்பிரதாயம். உலகில் எங்கு சாஸ்தா ப்ரீதி நடந்தாலும் கல்லிடைக்குறிச்சி சாஸ்தாவுக்குக் காணிக்கை அனுப்புவது, பாரம்பரியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சம்பிரதாயத்துக்குச் சான்று.