Published : 17 Jan 2019 10:24 AM
Last Updated : 17 Jan 2019 10:24 AM

உள்ளத்தில் ஏற்றிய விளக்கு

தைப்பூசம் ஜனவரி 21

முருகனை வழிபடு கடவுளாகவும், ஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் இளமையிலேயே அமைத்துக்கொண்டவர் வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூர் தியாகராசப் பெருமானையும், சென்னை வாழ்வை நீத்த பிறகு சிதம்பரம் நடராசரையும், இறுதியில் வடலூர் சித்திவளாகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஒளி வழிபாட்டையும் மேற்கொண்டார்.

எனவே, வள்ளலாரின் வழிபாட்டுக் கொள்கை முதலில் உருவ வழிபாட்டிலும் (கந்தகோட்டம், ஒற்றியூர்), பின்னர் அருவுருவ வழிபாட்டிலும் (சிதம்பரம்), முடிவில் அருவ வழிபாட்டிலும் (சித்திவளாகம்) ஊன்றியது. எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் முதிர்ந்த ஞானநிலையைப் பெறுவதற்கு முதற்படியாக உருவ வழிபாடே வள்ளலாருக்கு அமைந்தது எனலாம்.

வள்ளலார் காட்டும் வாழ்க்கை நெறியின் பல்வேறு கூறுகளில் விக்கிரக வழிபாடும் ஒன்று. “கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும் சட்டகங்களே விக்கிரகங்கள்” என்பது அகத்தியக் கோட்பாடு. ஒலி வடிவை விளக்க வரி வடிவம் தோன்றியமைக்குக் காட்டும் எடுத்துக்காட்டே இது எனில் பொருந்தும்.

இதையே சிவஞான சித்தியார், “நம் கருமேனி களிக்க இறைவன் மேற்கொண்ட கருணை வடிவங்களே தெய்வத் திருமேனிகள்” என்று கூறுகிறது. எனவேதான் ஒளி வழிபாட்டை வள்ளலார் வற்புறுத்திய போதுங்கூட உருவ வழிபாட்டை அவர் மறுக்கவில்லை. கடவுள் அனுபவம் விக்கிரக வழிபாட்டின் மூலமாகத்தான் ஏற்படும். படிப்படியாகவே அதைக் கடக்க வேண்டும் என்பதால்தான் உருவின் இயல்பும் அருவின் இயல்பும் கொண்ட ஜோதி வழிபாட்டை வள்ளலார் எடுத்துரைத்தார்.

பிரம்மசமாஜி ஸ்ரீதரஸ்வாமி நாயக்கர் உருவ வழிபாட்டை மறுத்தபோது, அவரோடு கடுமையாக வாதம்புரிந்ததையும் 1867 ‘தத்துவ போதினி’ இதழில் அச்செய்தி வெளியானதையும் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

vallalarjpgதிரு அருட்பிரகாச வள்ளலார் 1823  - 1874

ஜோதி வழிபாடு

இறைவன் ஒருவனே என்னும் முடிவுக்கு வந்த வள்ளலார், எல்லோருக்கும் பொதுவான கோயிலாம் சத்திய ஞான சபையை நிறுவி அதனுள் “ஜோதி” வழிபாட்டை மட்டுமே புகுத்தினார். “இன்று தொடங்கி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும்” என்று சன்மார்க்கிகளுக்குக் கட்டளையும் இட்டார்.

அகன்ற ஜோதி, பரஞ்ஜோதி, சீர்ஜோதி, செழுஞ்ஜோதி, ஒளிர் ஜோதி, ஞான ஜோதி, வாமஜோதி, சோமஜோதி, சின்மயஜோதி, சிவஜோதி, மெய்ஜோதி முதலியன திருவருட்பாவில் பயின்றுவரும் ஜோதி தொடர்பான சில சொல்லாட்சிகள். புறநிலையில் ஒளி வடிவினனாகத் தோற்றமளிக்கும் இறைவனை, ஒளியுடன் தொடர்புடைய பெயர்களால் வள்ளலார் சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்கது.

ஒளியின் உதவியின்றி இவ்வுலகப் பொருள்கள் எதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியாது. “விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இல்லையேல், விழிகள் விழித்து இளைப்பதல்லால் விளைவொன்றும் இல்லையே” --- என்பது திருவருட்பா. எனவே இறைவன் ஜோதிமயமாய் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பது பெறப்படும்.

இறைவனின் உருவப்படம் வீட்டிம் ஒன்றும் இல்லையேனும் விளக்கை மட்டுமாவது ஏற்றிவைத்து வழிபடும் மரபு நமக்கு உண்டு. “தையலார் கொண்டாடும் விளக்கீடு” என்று மாணிக்கவாசகரும், “தீபமங்களா ஜோதி நமோ நம” என்று அருணகிரிநாதரும் இம்மரபைச் சுட்டுகின்றனர். ஆக, ஜோதி வழிபாடு நமது மரபில் நெடுங்காலமாகப் பயின்றுவரும் ஒன்றுதான். ஆனால், இவ்வழிபாட்டைத் தத்துவ நெறிக்குக் கொண்டு சென்றவர் வள்ளலார்.

புறத்திலே விளங்கும் இறையொளி (அக்கினி ஒளி, சூரிய ஒளி, சந்திர ஒளி, நட்சத்திர ஒளி) அகத்திலும் உண்டு. அவ்வாறு உள்ளொளியாக (ஆன்மஒளி, ஜீவஒளி, மனஒளி, கண்ணொளி) விளங்கும் இறைவனைக் கண்டு தொழவேண்டும் என்பதை விளக்கவே ஞான சபையில் எல்லோருக்கும் பொதுவான இறையாம் ஜோதி வழிபாட்டை நடைமுறைப்படுத்தினார் வள்ளலார்.

இறைவனை உணர்த்தும் உள்ளொளி

“ஞானசபை என்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்கு உள்ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞான சபை என்றும் சொல்லுகிறது” என்னும் வள்ளலாரின் வாக்கு, உள்ளொளி இறைவனை நமக்கு உணர்த்துகிறது.

சிவப்பும் நீலமும்

ஒளி வழிபாட்டுத் தன்மைக்குச் சமயம் சார்ந்த ஒரு விளக்கமும் நம்மவர்களால் முன்வைக்கப்படுகிறது. அது: “எரியும் கைவிளக்கு ஒன்றின் சுடரை உற்று நோக்கின், சிவந்த அல்லது பொன்னிறமான வெளிச் சுடரையும் நீல நிறம் வாய்ந்த உட்சுடரையும் காணமுடியும். இஃது இறையின் இயல்பெனக் கருதுவர். தீயின் தன்மை சுடுதல்; தீயின் நிறம் சிவப்பு. அத்தீயின்கண் அடங்கிய நீரின் தன்மையோ குளிர்ந்தது.

அந்நீரின் நிறமோ நீலமுமாகும். மேலும் வன்தன்மை உடைய தீ ஆண் தன்மை கொண்டது என்றும் மென்தன்மை உடைய நீர் பெண் தன்மைகொண்டது என்றும் பகுத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் வன்தன்மையும் சிவந்த நிறமும் உடையவன் சிவபெருமான் என்பதும் மென்தன்மையும் நீல நிறமும் உடையவள் உமையம்மை என்றும் பண்டை இலக்கியங்கள் உரைக்கின்றன.

மேலே சொல்லப்பட்ட சமயம் சார்ந்த ஜோதி வழிபாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டது வள்ளலாரின் ஜோதி நெறித் தத்துவம். வேறு வகையில் சொல்வதானால், சீவன் சிவனாதலே பெறற்கரிய பேறு. இந்த அரிய பேற்றினைப் பெறுதல் அஞ்ஞானமாகிய இருள் சூழ்ந்த ஆன்மாவிற்கு இயலாதது. அது ஆணவம் கன்மம் மாயை திரோதானம் மகாமாயை என்னும் இருளால் சூழப்பட்டுள்ளது. இந்த இருள் முற்றிலும் நீங்கினால் மட்டுமே இறைவனைக் காணமுடியும்.

“அஞ்ஞான இருளை இறைவன் அருளால் பெறலாகும் அருட்சோதியின் துணைகொண்டே நீக்குதல் இயலும். இவ்வருட்சோதியே மெய்ஞ்ஞானம் அல்லது இயற்கை விளக்கம் அல்லது உண்மையறிவு எனப்படும். இவ்வுண்மை அறிவைக் கொண்டு அஞ்ஞானத்தைப் போக்குவதால் அஞ்ஞானம் இருளாகவும் மெய்ஞ்ஞானம் ஜோதியாகவும் உருவகம் செய்யப்பட்டது.

கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, தூய கன்ணாடியின் வழியே பேரொளிப் பிழம்பை ஞான சபையில் வள்ளலார் அமைத்தது எதற்கெனில், மாயா சக்தி என்னும் திரைகள் விலகி மனம் தூய்மை பெற்றதும், உள்ளொளியாய் இறைவன் விளக்கம் தருகிறான் என்பதைப் புறத்தில் காட்டுவதற்கேயாம்.

“அருள் ஒளிவிளங்கிட ஆணவம் எனும்ஓர் இருளற என்உளத்து ஏற்றிய விளக்கே (அகவல், 1495–-96) என்று அருட்பெருஞ் ஜோதி அகவலில் வள்ளலார் கூறியிருப்பதும் இதைத்தான்.

முனைவர் ப. சரவணன்,
தொடர்புக்கு: psharanvarma@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x