

சபரிமலையை அடைவதற்குப் பல மார்க்கங்கள் உண்டு. அவற்றில் மிகவும் தொன்மையானது எருமேலிப் பாதைதான். இந்தப் பாதையில் சென்றால்தான் பல முக்கிய இடங்களைப் பார்க்க முடியும். மணிகண்டன் குழந்தையாகத் தவழ்ந்த இடம், காளைகட்டி நிலையம், ஐயப்பன் மகிஷியை அழித்த இடம் ஆகியவை எருமேலி வழித்தடத்தில்தான் உள்ளன.
காட்டின் தொடக்கத்தில் இருக்கிறது எருமேலி. இங்கு ஐயப்ப பக்தர்கள் எல்லோருமே பேட்டை துள்ளுகிறார்கள். முக்கியமாக கன்னி ஐயப்பமார்கள் (அதாவது முதன்முறை விரதம் இருந்து சபரி மலைக்கு வருபவர்கள்) பேட்டை துள்ளுவது அவசியம்.
மோகத்தை வேட்டையாடு
அதென்ன பேட்டை துள்ளல்? உடலின்மீதும் முகத்திலும் வண்ணப்பொடிகளைப் பூசிக்கொள்ள வேண்டும். ஒரு கையில் மரத்தழைகளையும், இன்னொரு கையில் அம்பு ஒன்றையும் ஏந்திக்கொண்டு 'சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம்' என்று குரல் எழுப்பியவாறே குதித்து ஆட வேண்டும். இதன்மூலம் தான் என்ற அகம்பாவம் அகல்கிறது. உயர்வு தாழ்வு பேதம் நீங்குகிறது.
தவிர ‘எருமேலியில் உள்ள தர்மசாஸ்தா வேட்டைக்காரனாக அமர்ந்திருக்கிறார். மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பும் வேட்டைக்காரனின் மனநிலையை பேட்டைத் துள்ளல் வெளிப்படுத்துகிறது எனலாம். விலங்குங்களைக் கொன்று அவற்றைச் சுமந்தபடி வீடு திரும்புவது வேட்டைக்காரனின் வழக்கம்.
நாமும் நம் மனத்திலுள்ள காமம், குரோதம், மோகம் போன்ற உணர்வுகளைக் கொன்றுவிடுவதையே பேட்டைத் துள்ளல் உணர்த்துகிறது. பேட்டைத் துள்ளும்போது கறுப்பு நாடா ஒன்றையும் கட்டிக்கொள்ள வேண்டும். இந்தக் கறுப்பு நாடா மற்றும் அம்பு ஆகியவற்றை பத்திரமாகச் சுமந்துகொண்டுதான் ஐயப்ப பக்தர்கள் யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
காளைகட்டி நிலையம்
எருமேலி வரைதான் வாகனங்கள் வர முடியும். அதற்குப் பிறகு நடைப் பயணம்தான். சுமார் நாற்பது மைல் தொலைவு நடக்க வேண்டும். பதினெட்டு மலைகளைக் கடக்க வேண்டும். எருமேலியிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது பேரூர்தோடு எனும் சிறிய அருவிக்கரை. அங்கிருந்து சுமார் எட்டு மைல் தூரத்தில் உள்ளது காளைகட்டி நிலையம். ஐயப்பன் மகிஷியின்மீது போர் தொடுத்து வென்றார்.
இந்தக் காட்சியைக் காண ரிஷப வாகனத்தோடு அங்கு எழுந்தருளினார் சிவபெருமான். அப்போது தனது வாகனமான காளையை இங்கு ஒரு மரத்தில் கட்டினார். எனவே, இதற்கு காளைகட்டி நிலையம் என்று பெயர். இங்கு வெடிவழிபாடு செய்கிறார்கள். சிறியதொரு சிவன் கோயிலும் உள்ளது.
காளைகட்டி நிலையத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது அழுதா நதி. இதை அலஸா நதி என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்கு ஐயப்ப பக்தர்கள் தாவளம் (கூடாரம் போன்றவை) அமைத்துத் தங்குவதுண்டு. இரவில் நெருப்பு மூட்டி அது காலைவரை அணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். விலங்குகள் அந்தப் பகுதிக்கு வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
கன்னி ஐயப்பன்மார்கள் அழுதா நதியில் குளிக்கும்போது அங்கிருந்து ஒரு சிறிய கல் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வார்கள். பின்னர் இதைக் கல்லிடம்குன்று என்ற இடத்தில் போடவேண்டும். அழுதை நதியைக் கடந்தால் அழுதை மலைஏற்றம். கொஞ்சம் செங்குத்தாக குறுகிய பாதை. இருபுறமும் மரங்களும் புதர்களும் மண்டியிருக்கின்றன. மகிஷியுடன் போரிட்டு அவளை வதம் செய்த ஐயப்பன், பின்னர் அவளது உடல்மீது கூத்தாடினார். அந்த உடல் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்தது.
தன் கால்களால் அவள் உடலைப் பூமிக்குள் அழுத்தினார். அந்த உடல் மேலும் வெளிப்படாமல் இருக்க ஒரு பெரிய பாறையை அவள் உடல்மீது வைத்து அழுத்தி மூடினார். இதை நினைவுபடுத்தும் வகையில்தான் கன்னி ஐயப்பன்மார்கள் இங்கு (அழுதை நதிக்கரையிலிருந்து கொண்டுவந்த) கல்லை இடுகின்றனர்.
அழுதையிலிருந்து சுமார் ஏழு மைல் தொலைவிலுள்ளது உடும்பாறைக்கோட்டை. இங்கு மணிகண்டன் கோட்டைத் தலைவராகக் குடிகொண்டிருக்கிறார். இங்குள்ள அடுப்பில் எரிந்த சாம்பலை பக்தர்கள் உடலில் பூசிக்கொள்கிறார்கள். கொஞ்சம் சேகரித்தும் வைத்துக்கொள்கிறார்கள். வியாதிகள் போக்கக்கூடிய மருந்து என்று இதைக் கூறுவதுண்டு.
இந்த வழியாக சுமார் எட்டு மைல் தூரம் நடந்தால் கரிமலை அடிவாரம் தென்படும். கரி என்றால் யானை. யானைகள் நடமாட்டம் இங்கு அதிகம் என்பதால் கரிவலந்தோடு என்கிறார்கள். இங்கே சிறிய ஆறு ஒன்றும் ஓடுகிறது. கரிமலை ஏற்றம் என்பது கடினமான ஒன்றுதான். அதன் தொடக்கத்தில் உள்ள கணபதிக்குன்று என்ற இடத்தில் ஒரு மரத்தின் அடியில் உள்ள கணபதியை வழிபடுவது வழக்கம். கரிமலையின் உச்சி விசாலமானது. அங்கு இளைப்பாறுவார்கள். இங்கு வற்றாத சுனை ஒன்று உண்டு. அதன் பெயர் சரக்குழித் தீர்த்தம்.
கரிமலை இறக்கம் என்பது கடினமானது. சொல்லப்போனால் ஏற்றத்தைவிட இறக்கம் மேலும் கடினம். கரிமலை அடிவாரத்திலிருந்து நான்கு மைல் தொலைவு நடந்தால் பம்பா நதி வருகிறது. இந்த நதிக்கரையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களுக்கு நல்ல கதி கிடைக்கும் என்கின்றனர்.
பம்பை நதிக்கரையில் இருமுடி பூஜை செய்யப்படுகிறது. பின்னர் நீலிமலை ஏற்றம். அப்பாச்சிமேடு, இப்பாச்சிக்குழி ஆகியவற்றின் வழியாக நீலிமலை முகட்டை அடைய வேண்டும். அங்கே உள்ள சபரிபீடம். பக்தையான சபரியின் பெயரைத்தான் சபரிமலை தாங்கியுள்ளது. சபரிபீடத்துக்குத் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றுதல் என்ற வழிபாடு நடத்தப்படுகிறது.
ஐயப்பனின் கோயில் கிழக்கு நோக்கி எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் மேலே செல்லப் பதினெட்டுத் திருப்படிகள். ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கிறது. இந்தத் தத்துவங்கள் தன்னுள் அடக்கம் என்று ஐயப்பன் கூறாமல் கூறுகிறார்.
பதினெட்டுப் படிக்கு வடப்புறம் மாளிகைப்புற அம்மனைத் தரிசிக்கலாம். பதினெட்டுப் படிக்கட்டுகளை ஒட்டினாற்போல ஒருபுறம் மாளிகைப் புறத்துக்குச் சற்றே தள்ளி பகவதி அருள்பாலிக்கிறார்.
கொச்சுகடுத்த சுவாமிக்கும் மறுபுறம் கருப்பர் சுவாமிக்கும் இரு சன்னிதிகள் உள்ளன. நமக்கு துவாரபாலகர்கள் நினைவுக்கு வருகிறார்கள். கொச்சுகடுத்த சுவாமி ஐயப்பனின் தளபதிகளில் குறிப்பிடத்தக்கவர். அந்தக் காட்டுப் பகுதியிலுள்ள பேய், பூதங்களிலிருந்து தொந்தரவு வராமல் ஐயப்ப பக்தர்களை அவர் காக்கிறார். கொச்சுகடுத்த சுவாமியை பைரவரின் அம்சமாக நினைப்பவர்களும் உண்டு.
கொச்சுகடுத்த சுவாமிக்கு வாழைப்பழம், அவல், தேங்காய், வெல்லம், கற்கண்டு, திராட்சை ஆகியவை படைக்கப்படுகின்றன. பஸ்மகுளம் என்ற ஒன்று அங்கே இருக்கிறது. சபரிமலைக்கு வருபவர்களில் கணிசமானவர்கள் அங்கே குளிக்கிறார்கள்.
பதினெட்டாம் படிக்கு எதிரே கொஞ்சம் வடகிழக்கில் வாவர் சன்னதி இருக்கிறது. சபரிமலைக்கு வர மதம் ஒரு தடை இல்லை என்பதற்கான அடையாளம் இது. ஐயப்பனின் முஸ்லிம் தோழர் இவர். தொடக்கத்தில் ஐயப்பனை எதிர்த்து பிறகு நெருங்கிய தோழர் ஆனவர். எரிமேலியில் இவருக்கு ஒரு கோயிலே உள்ளது.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைகின்றன
கோயிலின் மேற்கு மூலையில் கன்னிமூல கணபதி காட்சி தருகிறார். இரு நாகர் சன்னிதிகள் உள்ளன. அவற்றுக்குப் பின்னே கீழே இறங்கிச் செல்ல வசதியாக படிக்கட்டுகள் உள்ளன. இருமுடி கட்டிக் கொள்ளாமல் சபரிமலைக்கு வருபவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏறத் தடை உண்டு என்றாலும் பின்பிறமுள்ள படிகளின் வழியாக வந்து ஐயப்பனைத் தரிசிக்கலாம்.
தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டிருக்கிறது ஐயப்பனின் கருவறை விமானம். மற்றபடி ஒரு ஓட்டு வீடுபோலவே காட்சியளிக்கிறது. தங்க விமானக் கலசங்கள் நீள வாக்கில் அமைந்துள்ளன. நடுக்கலசம் மட்டும் உயரமாக அமைந்துள்ளது.
சபரிமலை சன்னிதி மிகத்தொன்மையானது. என்றாலும் அதன் தற்போதைய கட்டிடம் மிகத்தொன்மையானது என்று கூறிவிட முடியாது. 1900-ம் ஆண்டில் நடந்த தீவிபத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட கோயிலைத்தான் இப்போது பார்க்கிறோம்.
கணபதி சன்னிதிக்குச் சற்றுத் தள்ளி நாகராஜர் ஆலயம். ஆலயத்தை வலம்வந்து ஐயப்பனின் கருவறையைத் தரிசிக்கிறார்கள். சின்முத்திரையுடன் தவ யோகியாக அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். வலது கட்டைவிரல் பரமாத்மா, ஆள்காட்டிவிரல் ஜீவாத்மா, மற்ற விரல்கள் ஆத்மாவை உலகோடு இணைக்கும் பந்தங்கள்.
கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் இணையும்போது பிற பந்தங்கள் விலகிவிட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைகின்றன. கருணை பொழியும் கண்கள். முட்டிக்கால் மீது படிந்து பாதங்களைச் சுட்டிக்காட்டும் இடக்கை. நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகம்.
தரிசனம் பரவசம். அது மீண்டும் மீண்டும் பக்தர்களை இழுக்கும் காந்தம்.