Last Updated : 03 Jan, 2019 09:50 AM

 

Published : 03 Jan 2019 09:50 AM
Last Updated : 03 Jan 2019 09:50 AM

விவிலிய மாந்தர்கள்: என் அப்பாவின் வீட்டில் இருப்பேன்!

திருப்பாடல்கள் நாற்பதாவது பகுதியில் 8 மற்றும் 9-வது வரிகளை வாசிக்கும்போது 12 வயதே நிரம்பிய இயேசுவின் பால்ய காலம் நினைவுக்கு வந்துவிடும். 'என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம். உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.

உங்களுடைய நீதியைப் பற்றிய நல்ல செய்தியை மாபெரும் சபையில் சொல்கிறேன். பாருங்கள்... என் உதடுகளை நான் மூடுவதே இல்லை' என்ற அந்த இரண்டு வரிகளுக்கும் எடுத்துக்காட்டாக பாலகன் இயேசுவின் பால்ய காலம் அமைந்துபோனது.

இயேசு பிறந்த 8-ம் நாள். மோசே கடவுளிடமிருந்து பெற்றுத் தந்த திருச்சட்டத்தின்படி குழந்தைக்கு விருத்தசேதனம் செய்து பெயர்சூட்ட மரியாளும் சூசையும் புறப்பட்டனர். குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு பெத்லகேமிலிருந்து யூதேயாவின் தலைநகராக இருந்த ஜெருசலேமில் கடவுளாகிய பரலோகத் தந்தைக்குக் கட்டப்பட்டிருந்த தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தனர்.

குழந்தை தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்னர், தேவதூதர் குறிப்பிட்டபடியே அதற்கு இயேசு என்ற பெயர் சூட்டி, பிற சடங்குகளைச் செய்தார்கள். ஏனென்றால் “மூத்த மகன் ஒவ்வொருவனும் பரலோகத் தந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்” என்று திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்ததையே அவர்கள் கடைப்பிடித்தார்கள். அதன்படி ஒரு ஜோடி காட்டுப் புறாவைத் தேவாலயத்தில் காணிக்கையாகச் செலுத்தினார்கள்.

தேடி வந்த சிமியோன்

அப்போது ஜெருசலேம் நகரத்தில் சிமியோன் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் தலைசிறந்த நீதிமான், பக்திமிக்கவர். இஸ்ரவேல் மக்கள் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் தனது வாழ்நாளிலேயே பிறந்துவிடுவார், அவரைக் கண்ணாறக் காண்பேன் என உறுதியாக நம்பினார். அதன்படியே பரலோகத் தந்தையுடன் அனுதினமும் தனது பிரார்த்தனைகளை வைத்துக் காத்திருந்தார்.

அப்போது கடவுளின் தூதர் அவரது கனவில் தோன்றி, ‘தந்தை அனுப்பும் கிறிஸ்துவைக் குழந்தையாகப் பார்ப்பதற்கு முன்பு நீர் இறந்துபோக மாட்டீர்’ எனக் கூறியிருந்தார். அதன்படியே தள்ளாத முதுமையில் வீட்டில் இருந்த சிமியோனைக் கடவுளின் சக்தி தூண்ட, விரைந்து ஜெருசலேம் தேவாலயத்துக்கு வந்தார்.

சிமியோன் ஆலயத்துக்குள் நுழைந்த அதே தருணத்தில் குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு அதனுடைய பெற்றோரும் உள்ளே நுழைந்தார்கள். குழந்தை இயேசுவைக் கண்டதும் சிமியோனின் முகம் மலர்ந்தது. தெய்வக் குழந்தையின் முகத்தில் வீசிய தெய்வீக ஒளியும் அதன் பெற்றோரின் முகத்தில் படர்ந்திருந்த தூய்மையும் அவரது மனதை நிறைத்தது.

‘இதோ உலகின் மீட்பரைக் குழந்தையாய்க் கண்டேன்’ என அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அவர் வலியச்சென்று குழந்தை இயேசுவைத் தன் கரங்களில் வாங்கிக்கொண்டு, கடவுளைப் புகழ்ந்து, “உன்னதப் பேரரசரே தந்தாய்..! உங்களுடைய வார்த்தையின்படியே, உங்கள் ஊழியன் நிம்மதியாகக் கண்மூடுவதற்கு வழிசெய்துவிட்டீர்கள். ஏனென்றால், இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல; எல்லா மக்களுக்கும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பரை இப்போது என் கண்களால் பார்த்துவிட்டேன்.

இவரே மற்ற எல்லா தேசங்களின் மீதும் மூடியிருக்கிற இருளைப் போக்கும் ஒளியாகவும் இந்நிலத்தின் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மகிமையாகவும் இருப்பார்” என்று சொன்னார்.

தங்கள் குழந்தையைப் பற்றி சிமியோன் கூறியவற்றைக் கேட்டு பெற்றோர் ஆச்சரியப்பட்டார்கள். பின் சிமியோன் குழந்தை இயேசுவின் பெற்றோரையும் ஆசீர்வதித்தார். அதன்பின்பு, பிள்ளையின் தாயான மரியாளை நோக்கி, “இதோ! இவர் இஸ்ரவேலர்களில் பலருடைய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருப்பார், அவமதிப்புக்கு ஆளாவார். இதனால் பலருடைய இதயத்திலிருக்கிற எண்ணங்கள் வெளிப்படுத்தப்படும்; உன் உள்ளத்தையும் நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் செல்லும்” என்று சொன்னார். அதைக்கேட்டு தாய் மரியாள் மனம் கலங்கினாள்.

ஏன் என்னைத் தேடினீர்கள்?

திருச்சட்டத்தின்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு, கலிலேயாவில் இருக்கிற தங்கள் சொந்த ஊரான நாசரேத்துக்குக் குழந்தை இயேசுவுடன் மரியாளும் சூசையும் திரும்பிப் போனார்கள். பிள்ளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, பலம் பெற்று, ஞானத்தால் நிறைந்தது. கடவுளின் வெளிச்சம் அந்தப் பிள்ளையின்மேல் எப்போதும் நிறைந்திருந்தது.

பத்து வயது முதலே தன் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்புக்கு அவரது தச்சு வேலைகளில் உதவத் தொடங்கினார். தாய் மரியாளுக்கோ வீட்டு வேலைகளில் மகிழ்ச்சியுடன் உதவி வந்தார். இயேசுவுக்கு 12 வயதானபோது அந்தச் சம்பவம் நடந்தது.

ஒவ்வொரு வருஷமும் இயேசுவின் பெற்றோர் விடுதலைப் பயணத்தின் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட ஜெருசலேம் மாநகருக்கு வந்தார்கள். ஏனென்றார்கள், யூதர்கள் அனைவருக்குமான தேவாலயம் அங்கேதான் இருந்தது. ஜெருசலேமில் பாஸ்கா பண்டிகை முடிந்து அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது பாலகன் இயேசு மட்டும் ஜெருசலேமிலேயே தங்கிவிட்டார்.

அதை மரியாளும் சூசையும் கவனிக்கவில்லை. ஊரிலிருந்து வந்திருந்த தங்கள் உறுவினர்கள் நண்பர்கள் அடங்கிய புனிதப் பயணிகளின் கூட்டத்தில் இயேசுவும் சென்றுகொண்டிருப்பார். பசி எடுக்கும்போது எப்படியும் தங்களை நோக்கி வந்துவிடுவார் என்று நினைத்தார்கள். ஆனால், மதியவேளை நெருங்கி மாலையும் முடிந்து இருளும் வந்தபோது மரியாள் மனம் கலங்கினார். உறவினர்கள் மத்தியிலும் தெரிந்தவர்கள் மத்தியிலும் அவரை மும்முரமாகத் தேடினார்கள்.

கூட்டம் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்த பயணிகளின் மத்தியில் கடைசி ஆள்வரையிலும் தேடியும் இயேசு கிடைக்கவில்லை. ‘உன் உள்ளத்தை நீளமான வாள் ஒன்று ஊடுருவிச் செல்லும்’ என்று இயேசுவுக்கு பெயர் சூட்டிய தினத்தில் நீதிமான் சிமியோன் கூறியது மரியாளின் நினைவுக்கு வந்து செல்ல, அவளது கண்கள் கலங்கி நீரைச் சொரிந்தன.

மரியாளும் யோசேப்பும் ஓட்டமும் நடையுமாக ஜெருசலேம் நகருக்குத் திரும்பிச் சென்றார்கள். நகர் முழுவதும் மூன்று நாட்கள் தெருத் தெருவாக இயேசுவைத் தேடினார்கள். இறுதியில் உடலும் மனமும் சோர்வுற்று மரியாள் மனம் கனத்து தேவாலயத்துக்குள் நுழைந்தாள். அங்கே இயேசுவைக் கண்டு அவளுக்கு உயிர்வந்தது. பாலன் இயேசு போதகர்கள் நடுவில் உட்கார்ந்துகொண்டு, அவர்கள் சொல்வதைக் கவனித்தபடி அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தார்.

அந்தக் காட்சியைச் சிறிது நேரம் விலகி நின்று அந்த எளிய பெற்றோர் பார்த்தார்கள். இயேசுவின் புத்திக்கூர்மையைப் பார்த்தும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த போதகர்கள் பிரம்மித்துப்போனார்கள். கேட்பதை, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் திரும்பப் பதில் அளிப்பதையும் பாலகன் இயேசு நிறுத்துகிற மாதிரி இல்லை.

மரியாள் இயேசுவை நெருங்கி “ மகனே, ஏன் இப்படிச் செய்தாய்; உன் அப்பாவும் நானும் எவ்வளவு பதற்றத்தோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம் தெரியுமா?”என்றாள். அதற்கு அவர், “அம்மா.. நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் அப்பாவின் வீட்டில் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அவர் அப்படித் திரும்பக் கேட்டதை, உடனடியாக அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

பின்பு  இயேசு தன் பெற்றோருடன் புறப்பட்டபோது தேவாலயத்தில் இருந்த போதகர்கள் வியப்புடன் அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களது உள்ளம் பரவச உணர்வால் நிறைந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x