Published : 31 Jan 2019 11:04 AM
Last Updated : 31 Jan 2019 11:04 AM

ஞானம் அருளும் சிவகாமி அம்மை

பிப்ரவரி 11 கும்பாபிஷேகம்

உலகை ஆக்கவும் காக்கவும் அழிக்கவும் வல்ல இறைவனான ஆனந்த நடராஜப் பெருமான் உறையும் அற்புதமான இடமே சிதம்பரம். உலகம் என்ற உடலில் இதயமாக இருப்பது சிதம்பரஷேத்திரம். இங்கு ஆனந்த நடனமாடும் ஐயனையும் அம்மையையும் வழிபட்டு உய்தோர் பலர். பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி, உபமன்யு போன்ற முனிவர்களும் யோகிகளும் நெக்குருகி வழிபட்டுப் பேரானந்தப் பெரும் பேற்றை அடைந்த தலம் இது.

சிவகாம சுந்தரியின் அருள் மழை பொழியும் அழகில் மயங்கி ஆனந்தமடைந்தோர் எத்தனை பேர்? ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நிற்கும் அன்னை குடிகொண்ட பகுதிக்குத் திருக்காமக்கோட்டம் என்று பெயர்.

சிவகங்கைத் தீர்த்தக்கரையின் மேற்கே நூற்றுக்கால் மண்டபத்துக்கும் பாண்டி நாயகம் என்னும் முருகக் கடவுளின் கோயிலுக்கும் நடுவே கம்பீரமாக அம்மை நிற்கிறாள். முன்னே சொக்கட்டான் மண்டபமும் கோபுரமும் இரண்டடுக்கு மாளிகைபோல் அமைந்த வெளிப்பிரகாரம், மகாமண்டபத்தோடு கூடிய கருவறையுடன் வீற்றுள்ளன. ஒட்டியாண பீடம் என்று போற்றப்படும் இந்த ஆலயம், எல்லையில்லா அழகு நிறைந்தது.

உள் பிரகாரத்தில் எங்கும் இல்லாத ஒன்றாக சித்திரகுப்தர் வீற்றிருக்கிறார். பயத்தை அறவே அகற்றும் நடுக்க தீர்த்த விநாயகர் சித்திர குப்தரைப் பார்த்தபடி தென்மேற்கு மூலையில் அமர்ந்திருக்கிறார். சித்திர குப்தர் எதைக் குறித்துக்கொண்டாலும் அதைத் தணிக்கை செய்து நடுக்கம் தீர்த்தருள்பவர் விநாயகர் போலும்.

வடக்குப் பக்கத்தில் சுகப்பிரம்ம மகரிஷி ஸ்தாபித்த சாளக்கிராமத்தினால் ஆன ஸ்ரீசக்கரம் விளங்குகிறது. பண்டைய தமிழர்களின் இசையறிவைப் பறைசாற்று விதமாகவும் நடன உயர்வைக் காட்டும் விதமாகவும் வெளிப்பிரகாரம் முழுவதும் எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. இங்கே காட்டப்பட்டுள்ள வாத்தியங்களைப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது.

விக்கிரமச் சோழனின் நிர்வாகத்தில் கி.பி. 1122-1135 காலகட்டத்தில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு சோழ மன்னனின் படைத்தலைவனாக விளங்கிய மணவிற்கூத்தன் காளிங்கராயன் காலத்தில் முற்றுப் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

அம்பிகையின் அற்புதமான இந்த ஆலயக் கொடி மண்டபத்தில் நாயக்கர் காலத்து ஓவியப் பொக்கிஷங்கள் நிறைந்துள்ளன. இவை தமிழ்நாட்டுக்கு அரும்பெரும் சொத்து.

அம்பிகை முன் நந்திதேவர்

அம்பிகையை வணங்கி உள்பிரகாரத்தை வலம் வரும்போது, சப்தமாதர்களும், அத்யயன கணபதியும் ஆறுமுக சுவாமியும் மிக அரிதாகவே காணப்படும் சண்டிகேஸ்வரியும் இத்தலத்தில் இருக்கின்றனர். விசேஷமாக அம்பிகை முன் நந்திதேவர் இருக்கிறார்.

ஜொலிக்கும் கிரீடமும் பளிச்சிடும் மூக்குத்திப் புல்லாக்கும் தங்கவளையும் தண்டையும் கொலுசும் மெட்டியும் வாசனை குங்குமமும் வலக்கையில் அட்ச மாலையும் இடக்கையில் கிளியும் தாங்கி மங்களமே வடிவாகவும் ஞானமே உருவாகவும் ஓங்கி நின்று அன்னை அருள்பாலிக்கிறாள். குமரகுருபரர் முதல் பலரும் பலதைப் பாடிவைத்துள்ளனர். அவற்றை நாமும் பாடி இன்புறலாம். சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, சிவகாமியம்மை அகவல், சிவகாமியம்மை கலிவெண்பா, சிவகாமியம்மை அந்தாதி, சிவகாமியம்மை ஊசல், சிவகாமவல்லி விருத்தம், சிவகாமியம்மன் துதி என்ற இவையெல்லாம் இன்பத்தமிழில் அன்னையைப் போற்ற நமக்களிக்கப்பட்ட செல்வங்கள்.

ஆதிசங்கரர், கௌடபாதர், சிரேதர், உமாபதிசிவம், அப்பய்ய தீக்ஷிதர் போன்றோர் பெற்ற அந்த ஆனந்தப் பரவச நிலையில் கொஞ்சமேனும் பெற்று உய்ய வாய்ப்பாக இவற்றைப் பாடுவோம். மனமுருகிப் பாடினால் அன்னையின் அருளமுதம் பாய்ந்திடும்.

ஆதிசங்கரரின் சந்தேகம் தீர்ந்தது

ஆதிசங்கரர் இந்த அம்மையின் சன்னிதி வந்தப்போது கேனோ உபநிடதத்தில் வரும் ‘உமாம் ஹைம வதீம்’ என்ற பதத்திற்கான பொருளில் அய்யமேற்பட்ட நிலையில் அம்பிகை அவர்முன் தோன்றி “நானே” என்று அருள்புரிந்தார்.

இத்தகைய பெருமைகளைக் கொண்டவளும் அருள் விளையாடல்களை நிகழ்த்தியவளுமாகிய அன்னை சிவகாம சுந்தரி உறையும் திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அம்மையும் அப்பனும் புரியும் அருள்விளையாடல்களை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது. ஆனந்த நடராஜ மூர்த்தியானவருக்கு கடந்த 1987-ம் வருடம் பிப்ரவரி 11-ம் தேதியில்தான் கோயிலுக்குப் பொன்வேய்ந்து கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.

புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன் மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, தீர்க்காயுள் ஆகிய பதினாறு பேறுகளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ சர்வ அருளையும் சிவகாம சுந்தரி அம்மை அருள்வாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x