ஆன்மிக நூலகம்: மகாபாரதத்தில் மரணம்

ஆன்மிக நூலகம்: மகாபாரதத்தில் மரணம்
Updated on
1 min read

அபிமன்யுவின் மரணத்திற்கு பிறகு யுதிஷ்டிரர்  துக்கத்தில் மூழ்கிக் கிடந்தார். மரணம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்தார்.மரணம் நிகழ்வது எப்படி?மரணம் நிகழ்வது ஏன் ?என பல கேள்விகள் அவர் மனதை துளைத்தன. ஆறுதலாக பல கதைகளையும் சம்பவங்களையும் எடுத்துக் கூறி வியாசர் அவருக்கு மிருத்யு எப்படித் தோன்றியது என்று விளக்கமளித்தார் வியாசர். இந்த உலகத்தையும் ஜீவராசிகளையும் பிரம்மா உருவாக்கினார்.

இந்த ஜீவராசிகள் நெடுங்காலமாக தொடர்ந்து உயிர்வாழ்ந்து வந்தன. இவை சாகவே இல்லை. காலம் காலமாக காத்திருந்தார் பிரம்மா. ஒரு ஜீவராசிகூட மரணமடையவிலை அதை கண்டு கோபம் அடைந்த பிரம்மா தான் படைத்த உயிர்கள் அனைத்தையும் அழிக்க முனைந்தார். நல்ல வேளையாக அப்போது ருத்திரன் தலையிட்டு பிரம்மாவின் அழிவுச் செயல்களைத் தடுத்தார். பிரம்மாவுக்குச் சினம் தணிந்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட சினமும் சக்தியும் மிருத்யு என்ற பெண் வடிவமாக மாறியது.

குறிப்பிட்ட நேரத்தில் நோய்கள் மூலம் உயிரினங்களை அழிக்கும்படி பிரம்மா உத்தரவிட்ட போது மிருத்யு கண்கலங்கி அந்த மோசமான வேலையைச் செய்ய மறுத்தாள். மீண்டும் மீண்டும் பாண்டவர்களின் சாபத்துக்கும் பிரிவுத்துயரில் வாடுவோரின் சாபத்துக்கும் மிருத்யு ஆளாக விரும்பவில்லை.

எவ்வித வெறுப்புமின்றி அவளது கடமையை சரிவரச் செய்து வந்தாள். அவளுக்கு எவ்விதத் தீங்கோ அவப்பெயரோ சேராது என்று பிரம்மா உறுதியளித்தார். படைத்தவன் இடைவிடாமல் செய்த போதனைக்குப் பின்னர் மிருத்யு என்ற அழிவு செயலுக்கு ஒப்புக்கொண்டாள்.

(துரோண பர்வம்- மகாபாரதம்)

ஓயாமல் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வந்தான் ஒருவன். அவனது தீவிர பக்தியில் மனம் நெகிழ்ந்து தேவி அவனுக்கு தரிசனம் தந்தாள். ‘நான் தொடர்ந்து இதே நிலையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருக்கும் வரத்தை எனக்கு அருள வேண்டும், என்று முறையிட்டுக் கேட்டுக் கொண்டான் அவன். அவன் கேட்ட வரத்தைத் தந்தாள் தேவி.

உனது ஜபத்திற்கு காலமோ மரணமோ இயற்கையின் எதார்த்தமோ ஒரு தடையாக இராது என்று வரமளித்தாள் தேவி. சொர்க்கமே அவனிடம் வந்து, ‘நீ பிரபஞ்சக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாமா?’ என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. அவன் ஜபத்தில் திடமாக இருந்தான். அவன் சித்தம் சிதையவில்லை. லௌகீக ஆசைகளைத் துறந்து ஜெபத்தில் ஆழ்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன், விதியின் எல்லா விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் வெற்றி கண்டவன் ஆகிறான்.

(சாந்தி பர்வம், மகாபாரதம்)

நிருதிக்கும் அதர்மனுக்கும் மூன்று மகன்கள் உண்டு; பயன், மகாபயன், மிருத்யு என்பது அவர்களது பெயர்கள். மிருத்யு அனைத்தையும் அழிப்பவன் என்பதால் அவனுக்கு மனைவியோ குழந்தைகளோ இல்லை.

(ஆதிபர்வம், மகாபாரதம்)

இனி இல்லை மரணபயம்

உரையும் மொழிபெயர்ப்பும்

சந்தியா நடராஜன்

சந்தியா பதிப்பகம், விலை: 110/-

தொடர்புக்கு : 044- 24896979

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in