Last Updated : 24 Jan, 2019 10:25 AM

 

Published : 24 Jan 2019 10:25 AM
Last Updated : 24 Jan 2019 10:25 AM

உட்பொருள் அறிவோம் 02: ஆஞ்சனேயரின் சக்தி

ஆஞ்சனேயருக்குத் தன் சக்தியைப் பற்றி ஏதும் தெரியாது என்கிறது கதை. மற்றவர்கள் எடுத்துச் சொல்லும்போதுதான் அவருக்கே அது தெரியும். சிறுவயதில் அபாரமான தன் சக்தியால் பெரும் விருட்சங்களை வேரோடு பெயர்த்தெடுத்து தூரத்து மலைமுகடுகளின்மேல் எறிவது அந்தச் சிறுவனுக்குப் பிடித்தமான விளையாட்டு. காட்டின் அமைதியில் தவம் புரிந்துவரும் முனிவர்களுக்கு அது மிகவும் இடையூறாக இருந்தது.

மரங்களின் வேர்களிலிருந்து விழும் மண்ணும் சிறு கற்களும் அவர்களின் தியானத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. அதனால் 'ஆஞ்சனேயனுக்குத் தன் சக்தி தெரியாமல் போகட்டும்' என்று சாபம் கொடுத்தனர் முனிவர்கள். 'மற்றவர் எடுத்துச் சொல்லும்போதுதான் ஆஞ்சனேயனுக்குத் தன் சக்தி தெரியும்' என்றும் அவர்கள் விதித்தார்கள்.

சீதையைத் தேடி யாராவது இலங்கைக்குச் செல்லவேண்டி வரும்போது ஒவ்வொரு வானரமும், ‘என்னால் பத்து யோசனை தாண்ட முடியும்‘; ‘என்னால் முப்பது யோசனை தாண்ட முடியும்,' என்று சொல்லும்போது, அங்கதன், ‘என்னால் நூறு யோசனை போக முடியும். ஆனால் திரும்பவரும் சக்தி எனக்கிருக்கிறதா என்று தெரியவில்லை,‘ என்கிறான்.

‘ஆஞ்சனேயனால் இது முடியும்,’ என்று சொல்லிய ஜாம்பவான் ஆஞ்சனேயரிடம், ‘வெறும் நூறு யோசனை தூரம் உனக்குப் பெரிதா என்ன? சிறுவயதில் சூரியனைப் பழம் என்று நினைத்துப் போய்ப் பிடித்து உண்ணப் பறந்தவன்தானே நீ? உன்னால் முடியாதது உண்டா, ஆஞ்சனேயா? உன் சக்திக்கு எல்லை ஏது?' என்று புகழ்ந்ததும் ஆஞ்சனேயர் உடல் விம்மி வளர்ந்து, மகேந்திர பர்வதத்தின் உச்சியிலேறி அவர் இலங்கைக்குப் பறந்து சென்றார் என்பது கதை.

நமக்கு என்ன சொல்கிறது இந்தக் கதை?

நமக்கு உள்ளே உறைந்திருக்கும் எல்லையற்ற சக்தியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. பிறந்து, வளர்ந்து, சில காலத்துக்குப் பின் மறைந்து போகும் ஒரு அற்ப ஜீவன் என்றுதானே நம்மைப் பற்றி நாம் நினைத்துக்கொண்டு வாழ்கிறோம்? இப்படித் தவறான முடிவுடன் வாழ்வதால் வாழ்க்கை துயரமும் சிக்கலும் நிறைந்ததாகப் போய்விட்டிருக்கும் நிலைமையும் இருக்கிறது.

நமக்குள்ளே பொதிந்திருக்கும் அபாரமான சக்தியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதை யாராவது நமக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. யார் அதை நமக்குச் சொல்கிறார்கள்?

குருவின் பங்களிப்பு

அங்குதான் குருவின் பங்கு வருகிறது. உண்மையான ஒரு குரு நமக்குச் சொல்லக் கூடியது எல்லாம் ஒன்றுதான். 'நீ வெறுமனே பிறந்து, இருந்து, இறந்து போகும் அற்ப ஜீவனல்ல. இந்த அண்டமெல்லாம் நிறைந்திருக்கும் சக்தி உனக்குள் உறைந்திருக்கிறது. அதை அறிந்து, உன் வசப்படுத்திக்கொள்ள, நீ அறிந்துகொள்ள வேண்டும். நீ உண்மையில் அழிவற்ற பரம்பொருளின் அம்சம். நீ பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவன்/அப்பாற்பட்டவள்.

உனக்கு உள்ளே இருந்து உன் புலன்கள் வழியாக வீசும் ஒளியின் வழியாகத்தான் இந்த உலகத்தைக் காண்கிறாய். உன் பிரக்ஞை புலன்களையும், புலன்களால் நீ அறியும் உலகத்தையும் கடந்தது. நீயே பரப்பிரும்மம். விழித்துக் கொள். தேகாத்ம புத்தியை (இந்த உடல்தான் நான் என்னும் நம்பிக்கை) விட்டுவிட்டு உன்னை அறிந்து கொள். தூக்கத்திலிருந்து எழுந்து கொள்.'

இதுதானே குருவின் உபதேசம்? அடிப்படையில் இதைவிட ஒரு குரு என்ன சொல்லிவிட முடியும்?

கனிந்து இருக்கும் நிலையில் உள்ள சீடனுக்கு இந்த வார்த்தைகள் போதாதா? உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் ஆத்ம சக்தியைத் தூண்டி உடனே எழுப்பிவிடாதா இந்தச் சொற்கள்?

யார் என்று தெரியாது?

உண்மையில் நமக்கு நாம் யார் என்று தெரியாது. தகுந்த நேரத்தில் ஒரு குரு வந்து நமக்கு அதை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் நாமாக, 'ஆஹா, நம் சக்திதான் என்னே?' என்று நினைத்துக் கொள்வது அல்ல அது. எப்போது நமக்கு நம்மைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும், எப்போது நமக்கு அந்தப் பக்குவம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சொல்வதுதான் குருவின் வேலை. தகுந்த நேரத்துக்கு முன்னால் சொல்வதால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். அதற்குப் பிறகு சொன்னால்கூட பயன் இல்லாமல் போய்விடும்.

உண்மையான குரு என்பது இந்த உலகத்தில் மிகவும் துர்லபமான விஷயம். அதைவிட துர்லபமானது உண்மையான சீடன். தகுந்த நேரத்துக்கு முன்னால், 'நீ பரப்பிரும்மம்,' என்று சொன்னால் அதைக் கேட்டுக்கொள்வது நம் ஆன்மாவல்ல. வெறும் அகங்காரம் (Ego). அது வெறும் அழிவுக்குத்தான் கொண்டு சேர்க்கும்.

மனத்தின் தன்மையான அகங்காரத்தின் பார்வையில் வாழ்க்கையை வாழ்ந்து, அந்தப் பொய்யான வாழ்வு தரும் வலியையும் மனச் சோர்வையும் அனுபவித்து, 'இவ்வளவுதானா வாழ்க்கை? இதற்குமேல் ஒன்றும் கிடையாதா? நிலைத்து நிற்கும் சந்தோஷம் என்பது ஒன்று இல்லவே இல்லையா? யார் நான்? என்ன இந்த உலகம்? ஏமாற்றமும் வலியும் துயரமும் தவிர இந்த வாழ்க்கைக்கு ஏதும் பொருள் இல்லையா? இறப்பைத் தவிர இதற்கு முடிவேதும் இல்லையா? அப்படியென்றால் ஏன் இந்த நாடகம்?

என் பிறப்புக்கு முன்னால் நான் இருந்திருக்கிறேனா? என் இறப்புக்குப் பின்னால் நான் தொடர்ந்து இருப்பேனா? என் புலன்கள் காணும் இந்த உலகத்துக்குப் பின்னால் இருந்து, இதை இயக்கும் சக்தி ஏதாவது உண்மையில் இருக்கிறதா? கடவுள் என்பது உண்மையில் என்ன? அப்படி ஏதாவது உண்மையில் உள்ளதா இல்லையா? அல்லது மனம் இட்டுக்கட்டிய வெறும் கற்பனைதானா அது? உள்ளே கடந்து சென்றால் என்ன இருக்கும்?' என்று மனத்தைத் தாண்டிய நம் ஆழத்திலிருந்து கேள்விகள் எழும்போதுதான், நமக்கு ஓரளவுக்காவது பக்குவம் வந்திருக்கிறது என்று சொல்ல முடியும்.

உண்மையில் அப்படி வாழ்க்கையின் வலியை அனுபவித்த பிறகுதான் குரு வருவார். அப்போது அவர் சொல்லும் உபதேசம்தான் நம் மனத்தை கடந்து நம் ஆத்மாவின் ஆழத்தில் புதியதொரு விதையாக ஊடுருவிச் சென்று வேர் கொள்ளும்.

இருளை நீக்குபவர்

‘குரு‘ என்னும் சொல்லுக்கு ‘இருளை நீக்குபவர்‘ என்று பொருள். குரு என்பது ஒரு ஆள் இல்லை. அது ஒரு செய்தி. அந்தச் செய்தி ஒரு புத்தகத்திலிருந்து வரலாம். அது ஒரு ஒற்றைச் சொல்லாக இருக்கலாம். ஒரு காட்சியாகக்கூட இருக்கலாம். ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு ஆன்மாவைத் தீண்டி எழுப்பியது மேகங்கள் அடர்ந்து கறுத்து இருந்த வானவெளியில் பறந்துகொண்டிருக்கும் இரண்டு அன்னப்பறவைகள். அவ்வளவே.

ஆஞ்சனேயருக்குத் தன் சக்தி தெரியாது என்பதன் பொருள் இதுதான். நம் புராணங்கள் எல்லாம் நம்மைப் பற்றிய உண்மைகளை நமக்கு எடுத்துச் சொல்பவைதான். ஆனால் தகுந்த பக்குவ நிலையில் நாம் இருக்கும்போதுதான் அவற்றின் பொருள் நமக்குத் தெளிவாகப் புரியும். உட்பொருள் வெளிப்படையாகத் தெரியும்.

(தொடர்ந்து அறிவோம்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x