Published : 10 Jan 2019 10:55 AM
Last Updated : 10 Jan 2019 10:55 AM

மகராசன் பொங்கல்

போகிப் பண்டிகையை ‘போவிய…’ என்பார்கள். போகியின் சிறப்பு என்பது பொங்கலை வரவேற்கும் முதல் நிகழ்வு. வாழ்வின் அச்சாணியாக இருக்கும் நில மகளை அலங்கரிக்கும் திருநாள். “கோழிகூவ ஏந்திரிச்சி போவிய கொத்துபோட போவுணும்…” - தீர்மானத்தோடு படுத்தாலும் குளிரில் குறுக்கிக்கொண்டு கிடப்பதில், அதிகாலையில் எழுந்திரிக்க மனம் வராது.

“ஒரு நெல்ல நாளு, பெரிய நாள்லகூட எனுமா தூங்குதுவோ பாரு. ஏந்திரிச்சி போயி போவிய கொத்து போட்டுட்டு வாங்கட…” அம்மாக்களின் அதட்டல்களில், வீட்டுக்கு வீடு தூக்கம் கலைந்து வேட்டியை, புடவையை வாரிப் போர்த்தியபடி ஒழுங்கியில் கொல்லைக்கு ஓட வேண்டியதுதான்.

‘போவிய கொத்து’ என்பது மா, வேம்பு போன்ற தழைச் சிம்புகள், ஆவாரம் பூ, பூலாப் பூ, துவரைப் பூ போன்ற பூக்களின் இணுக்குகளைச் சேர்த்துப் பொங்கல் பண்டிகையை ஒரு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது மாதிரி, அவரவர் நிலங்களின் சனி மூலையில் போடுவதாகும். போகிக் கொத்தை போடுகிற மாதிரி, பொங்கல் பண்டிகையை வரவேற்று மகிழ்வில் சத்தமிடுவார்கள். “பொங்கலோ பொங்கலோ…  போவியோ பொங்கலோ….”

இந்தப் போகிக் கொத்துக்கு மா, வேம்பு என இரண்டும் எளிதில் கிடைத்துவிடும், என்றாலும் கிளைகளை வளைத்து ஒடிக்கையில்தான் சிக்கல். ‘மரமெல்லாம் குளிரும் மார்கழி மாசம், தரையெல்லாம் குளிரும் தைமாசம்’ என்ற மாதிரி ஊசியாய்க் குத்துகிற குளிர் ஒரு பக்கம் என்றால், இந்தக் கொத்துகளை ஒடிக்கத் தாவிப் பிடிக்கையில் சொடசொடவென மழை மாதிரி கொட்டுகிற பனித் தண்ணீர் இறங்கி, மேலும் வெடவெடக்கச் செய்துவிடும். பூக்களில் ஆவராம்பூ மட்டும் ஏரி, ஓடை, மறிச்சி எனச் சங்கமாய்க் கிடக்கும்.

எளிதில் கைக்குக் கிடைக்கிற மூன்றையும் சேர்த்துத்தான் போடுவார்கள். பூலாப் பூ ஒரு இழை  சேர்த்துப் போட்டால்தான் மனம் ஆறும். ஆனால், கிடைப்பதுதான் பெரிய பாடு. துவரை, கேழ்வரகு, நெல் எனப் பூங்கதிர்கள் விளைந்த காலத்தில்கூட சேர்த்துப் போட்டதுதான். இப்போதெல்லாம் கண்ணால் பார்ப்பதே அரிதாகிப் போய்விடுகிறது.

magarasanjpgright

எல்லாமே புதிதாய்

எவ்வளவு தூரத்தில் இருக்கிற கொல்லையாக இருந்தாலும் மெனக்கிட்டு போய் குறைந்தபட்சம் ஒரு வேப்பங்கொத்தையாவது போட்டு மனசுக்குள்ளே யாகவாவது “போவியோ பொங்கலோ…” சொல்லிவிட்டு வருவார்கள்.

இந்தப் போகிக் காலையில் தோட்டத்தில் நின்று கொல்லைவெளிப் பக்கம் காதைத் திருப்பினால், எங்கும் இப்பொங்கல் வரவேற்புக் குரல்களாகத்தான் கேட்கும். வீடு வந்து சேரும்போது வழக்கத்துக்கு மாறாய், வாசலில் பெரிய கோலம் வரவேற்கும்.

கொல்லையிலிருந்து கையோடு கொண்டு வந்திருக்கும் போகிப் பூங்கொத்து ஒன்றை நெற்றியில் பொட்டு வைத்தமாதிரி கூரையில் செருகி விடுவார்கள் (கல்வீடாக இருந்தால் தொங்கலில் கட்டிவிடுவார்கள்). கையைக் காலை கழுவிவிட்டு வந்து, சுடச்சுட சுட்டு வைத்திருக்கும் இட்லிகளைப் புட்டுப் போட்டால், போகிப் பண்டிகையைக் கொண்டாடிய மகிழ்வு மனத்தில் நின்றுகொண்டே இருக்கும்.

இரண்டாம் நாளான பொங்கல் பண்டிகையைப் ‘பெரும் பொங்கல்’ என்பார்கள். தமிழக அரசு அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவித்திருந்தாலும், கிராமங்களில் ஒருசிலர்தான் சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலுமாய் வாசல் பொங்கல் வைத்துக் கொண்டாடு வார்கள். இதைச் சூரியப் பொங்கல் என்றும் சொல் வதுண்டு. சில ஊர்களில் குடும்பங்கள் எல்லாமும் சேர்ந்து போய் குலதெய்வ சன்னதிகளிலும் பொங்கல் வைத்துப் படைப்பார்கள்.

பொங்கலும் போச்சு பொண்ணு குட்றா

பொங்கல் திருநாளின் உச்சமாகக் கொண்டாடப் படுவது, மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல்தான். அன்றைய பொழுதுக்கு மாடுகள் எல்லாமும் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள்தாம். அவிழ்க்கும் போதோ ஓட்டும் போதோ எவ்வளவு இடக்கு மடக்கு பண்ணினாலும், மாடுகளை அடிக்கவே மாட்டார்கள்.

என்றைக்குமில்லாதபடிக்கு வயிற்றுக்கு மேய வைத்து, ஏரித் தண்ணீரில் குளிப்பாட்டி அந்திக்கு முன்னதாகவே கட்டுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். காலையிலேயே போய் காடுமேடெல்லாம் அலைந்து ஒடித்து வந்திருக்கும் ஆவாரம்பூ, பூலாப்பூ, நெல்லுப்பூ, கேழ்வரகுப் பூ எனக் கொத்துக்களோடு வேம்பு, மா தழைகளைக் கோத்துக் கட்டப்பட்டு மாலைகள் தயாராகக் காத்திருக்கும்.

கூடவே மாட்டு வண்டிகளும் கழுவிப் பூசை, பொட்டு எல்லாமும் வைத்து பூங்கொத்துக்கள், அலங்காரங்களுடன் அரசியம்மன் கோயில் பல்லக்காய் காத்திருக்கும்.

வாசலில் பொங்கவைத்து கருப்பங்கழிகளைக் கூரைகளில் சாத்திப் பலா இலைகளில் பள்ளையங்களை எடுத்து வைத்தபடி மேளக்காரர்களை எதிர்பார்த்தபடி தெருவைப் பார்த்தவண்ணமாய் இருப்பார்கள்.

பித்தளைத் தாம்பாளங்களைத் தட்டி சிறுவர்கள் ஓசையெழுப்பியபடி மாடுகளுக்குத் தீபாராதனை காட்டவும் மாடுகளுக்கு விபூதி போடவும் பொங்கலை ஊட்டவுமாய்க் கட்டுத்தறியே கோயில் சாலையாய்க் காட்சிகொள்ளும். பொங்கலை ருசித்த கையோடு, மாடுகள் கழுத்தில் போட்ட மாலைகளை வளைத்து வளைத்துக் கடிக்கத் தொடங்கும். படைத்து முடித்து பள்ளையத்தை எடுத்து வாயில் போடுவதற்குள் வண்டிகள் சவாரிக்குத் தயாராகிவிடும்.

pongal-malarjpgஇதுபோன்ற இன்னும் பல சுவாரசியமான கட்டுரைகள் ‘இந்து தமிழ் பொங்கல் மலரில்’ உள்ளன. விலை ரூ.120/-

சிறுவர்கள் எல்லாமும் வண்டியில் ஏறிக்கொண்டு பறக்கையில் அதம் கிளம்பும். ஊரைச் சுற்றிப் புள்ளையார் கோயிலுக்குக் கற்பூரம் கொளுத்தி கும்பிட்டுவிட்டு வண்டியின் ஓட்டம் வாசலில் வந்து நிற்கும். இப்போதெல்லாம் மாட்டுவண்டிகளுக்குப் பதில் பெட்டி மாட்டிய உழவுந்துகள் பறக்கின்றன.

காவல் தெய்வங்களுக்கு நன்றி

மாட்டுப் பொங்கலை ‘மாட்டுக்கடை’ என்பார்கள். இந்த மாட்டுப் பொங்கல் நாளில்தான் நாற்றாங்கால் ஓட்டிய மாடுகளுக்குச் சாமிகள் மோட்சம் கொடுக்கும் என்பது நம்பிக்கை. நாற்றாங்காலை ஓட்டி கடின வேலை செய்த மாடுகளைத் தேடித் தேடி சாமி மோட்சம் கொடுக்குமாம்.

விடிந்தால் கரிநாள். அதிகாலையிலேயே அய்யனார், மலையாத்தாள் எனக் கொல்லைகளுக்கு அருகிலேயே இருக்கும் காவல் தெய்வங்களுக்குப் போய்த் தேங்காய், வாழைப்பழம் வைத்துப் படைத்து, அந்த வருட மகசூல் காலத்தில் பயிர்களுக்கும் தங்களுக்கும் காவலாய் இருந்ததற்காய் நன்றி செலுத்திவிட்டு வருவார்கள்.

- கண்மணி குணசேகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x