சத்யம் தர்மம் தயை சாந்தி

சத்யம் தர்மம் தயை சாந்தி
Updated on
3 min read

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தம் அது. கேரளம் தீவிரமான மாற்றத்தை வேண்டி இருந்தது. பல நூறாண்டுகளாக அந்தச் சமூகத்தின் மீது பேய் போலப் படிந்திருந்த இருளை விரட்டுவதற்கும், மனிதாபிமானமற்ற நடைமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் மாற்றுவதற்கும் ஒரு மாறுபட்ட மனோநிலையும் சமூக சமத்துவம் குறித்த புதிய அணுகுமுறையும் தேவையாக இருந்தன.

அதுபோன்ற ஒரு சமூக மாற்றத்துக்கான போதகராக வந்தவர்தான் நாராயண குரு. உலகளாவிய பரிமாணங்களில் அவர் ஒரு மறுமலர்ச்சியைத் தொடங்கி தலைமை வகித்துப் பரப்பவும் செய்தார். அவர் ஆலயங்களுக்குள் நுழைவதற்கு வெகுமக்களைத் திரட்டி இயக்கம் ஒன்றையும் நடத்தவில்லை. அதற்குப் பதிலாக எல்லா மக்களும் நுழையக்கூடிய கோயில்களைக் கட்டினார். ஒருவர் தனக்குள் பார்க்க வேண்டியதன் தேவையை அவர் போதிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர் கண்ணாடிகளையும் விளக்குகளையும் விக்கிரகங்களாக நிறுவினார்.

கோயில்களில் பள்ளிகள்

ஆலயச் சுவர்களில் ‘ஓம் நம சிவாய’ என்று எழுதி  வைக்கவில்லை. கேரள ஆலயங்களில் தரப்படுவதுபோல அவர் கட்டிய ஆலயங்களில் சந்தனமும் தரப்பட்டதில்லை. அதற்குப் பதிலாக ஆலயங்கள் தங்கள் வளாகங்களில் பள்ளிகளைக் கட்டுவதற்கும், ஆலயத்தைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்குத் தேவையான மரபான கைவினைத் தொழில் மையங்களை உருவாக்கவும் ஊக்குவித்தார்.

சமயம், சாதி கடந்து எல்லாருக்குமான இடமாக ஆலயம் இருக்க வேண்டுமென்ற நாராயண குருவின் நோக்கம் தெளிவானது. அந்த சமத்துவத்தின் வழியாகத் தான் கலாச்சாரம், ஒழுங்கு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் மக்கள் மேம்பட்ட தரத்தை அடைய முடியும் என்று நம்பினார். சடங்கு, வாழுமிடம் இரண்டுக்குமான தொலைவு குறைவாக இருப்பதன் அடிப்படையிலேயே மக்களின் அந்தஸ்து தீர்மானிக்கப்பட்ட காலத்தில், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான வழியாக நாராயண குருவுக்கு தோன்றியது. ஆளும் அரச குடும்பத்தினரின் அரசியலைத் தாண்டிய முயற்சியாகவும் அவரது செயல்பாடுகள் ஆயின.

பிற்படுத்தப்பட்ட சாதியினராக அடையாளப்படுத்தப்பட்டு, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, வதைக்கப்பட்டு, சுரண்டப்பட்ட மக்களுக்கு நாராயண குருவின் அழைப்பு, அவர்களை மனித உயிர்கள் என்று அங்கீகரித்த முதல் குரலாக இருந்தது. தாங்களும் மரியாதைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் கண்டுணர்வதற்கான வாய்ப்பாக இருந்தது. அச்சமின்றி வழிபடுதவற்கான வசதியை அவர்களுக்கு அளித்தது, அவர்களது தன்னை உணர்தலுக்கு அடுத்தபடியாக அமைந்தது.

“தன்னை உணர்தல், சாதிரீதியான ஒடுக்குமுறைகளை ஒழிப்பதன் மூலம் சமூக அந்தஸ்தை உருவாக்குதல் ஆகியவற்றைப் போதிப்பதன் வாயிலாக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதல்ல என்று குருவுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர் ஒரு கோயிலைக் கட்டினார். மேம்பட்ட வழிபாட்டு வடிவங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி கல்வி வசதியை அளித்ததன் வாயிலாகவே கேரளத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அது மிக அரிதான புரட்சிகரத் தருணம்” என்கிறார் கேரளப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் ஞானேஸ்வரன்.

மலையாள ஆண்டு 1063-ல் ஸ்ரீநாராயண குரு கட்டிய முதல் ஆலயத்தின் வாயிலாக, கேரள சமூக சாதிய நடைமுறைகள் மீது முதல் பேரிடி விழுந்தது.அருவிப்புரத்தில் அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் வெறும் சடங்கு நடவடிக்கை அல்ல. நம்மில் எல்லாருள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது, விதிகளை மாற்றக்கூடிய ஆற்றல் நம்மிடம் உண்டு என்பதற்கான செய்தி.

79 ஆலயங்கள்

அருவிப்புரத்துக்கு அடுத்து அவர் கேரளத்திலும் வெளியிலும் பல ஆலயங்களை எழுப்பினார். அவர் உருவாக்கிய ஆலயங்கள் 35 என ஆவணங்கள் கூறுகின்றன. வைக்கத்தில் கட்டிய ஓம்காரேஸ்வர ஆலயம் தான் அவர் கட்டிய கடைசி ஆலயம் என்று கூறப்படுகிறது. ஆனால், பல ஆய்வாளர்களின் கருத்துப்படி அவரும் அவரது சீடர்களும் சேர்ந்து இந்தியா முழுவதும் 79 ஆலயங்களை உருவாக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில ஆலயங்களில் விளக்குகள், சிலவற்றில் கண்ணாடிகள் ஆகியவை விக்கிரகங்கள் ஆயின.

“நாராயண குரு வழிபாட்டை மூன்று நிலைகளில் அமைத்திருந்தார். மக்கள் தங்களோடு அடையாளம் காணும் தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது சங்கற்பத்தின் முதல் நிலை. அடுத்து தன்னை உணர்தலுக்கான தெய்வமான சாரதா போன்றவர்களை அறிமுகப்படுத்துதல், அதனூடாகவே கண்ணாடிகளையும் விளக்குகளையும். அடுத்த நிலைதான் ஞானத்தைக் குறிக்கும் அத்வைத ஆசிரமம். குருவைப் பொறுத்தவரை சடங்குகள் முக்கியமில்லாதவை. மேலான சக்தியுடனுடனான ஒருமையை மக்கள் உணர வேண்டுமென்பதை அவர் விரும்பினார்.” என்கிறார் ஆய்வாளர், எழுத்தாளர் கீதா சூரஜ்.

முரிக்கம்புழையில் உள்ள காலகண்டேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகம் இருக்கும் இடத்தில் நான்கு வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கும். சத்யம், தர்மம், தயா, சாந்தி.

நாராயண குருவால் கடைசியாகக் கட்டப்பட்ட ஓம்காரேஸ்வரர் ஆலயத்தில் மூலவராக இருப்பது கண்ணாடி தான். ஒரு பக்தனின் பயணம் கல்லிலிருந்து தொடங்கி சுயத்தை உணர்வதில் முடிவடைவதைக் குறிக்கிறது.

கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்பாடு அடைந்த சமூகத்தைக் கட்டுமானம் செய்வதற்கு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் வேண்டுமெ ன்பதில் நாராயண குரு திட்டவட்டமாக இருந்தார். பெண்ணின் ஊக்கமிக்க பங்கேற்பின்றி சமூக முன்னேற்றம் சாத்தியப்படாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

“அவரைப் போன்ற துறவிகளின் போதனைகள் கேரளாவிலேயே புறக்கணிக்கப்படுவதுதான் துரதிர்ஷ்டமானது” என்கிறார் சுரேஷ்.

பேரியக்கங்கள் தனிப்பட்ட செயல்பாடுகளாகவே தொடங்கு கின்றன. 1888-ல் நாராயண குரு தொடங்கிய ஒரு எளிய சடங் கினால்தான் சாதிய ஏற்றத்தாழ்வு மிக்க சமூகமொன்று, சமத்துவமிக்கதாக சமூகப் பொருளாதார மேம்பாட்டில் உலகளாவிய முன்மாதிரியாக கேரளா மாறியது.

- டி. எஸ். ப்ரீதா | (தமிழில்: ஷங்கர்)

sathyam-2jpg

நாராயண குரு குறித்த இதுபோன்ற அரிய கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள SREE NARAYANA GURU THE SAGE OF SIVAGIRI சிறப்புமலரை வாங்கிப் படியுங்கள்.

SREE NARAYANA GURU THE SAGE OF SIVAGIRI

தி ஹிந்து க்ரூப் பப்ளிகேஷன்ஸ் | 859-860, அண்ணா சாலை, சென்னை– 02

விலை : 299/-

334 ரூபாய் அனுப்பி தபாலில் சிறப்பு மலரைப் பெறலாம். தபால் கட்டணம் 35 ரூபாய்.

இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications

மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு மின்னஞ்சல் செய்க. மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in