Published : 20 Dec 2018 10:23 AM
Last Updated : 20 Dec 2018 10:23 AM

பப்பா பானோவ் பார்த்த கிறிஸ்து

கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்ட முன்தின பின்மதிய வேளை அது. அந்தச் சிறிய ரஷ்ய கிராமத்தின் வீடுகள், கடைகளில் விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன. பண்டிகையின் சந்தோஷத்தால் குழந்தைகள் வெளிப்படுத்தும் எக்களிப்பும் அரட்டைகளும் வீடுகளின் மூடப்பட்ட ஜன்னல்களிலிருந்து கசிந்து கொண்டிருந்தன.

முதியவர் கண்ட கனவு

அந்தக் கிராமத்தின் செருப்பு தைப்பவரான கிழவர் பப்பா பானோவ், தன் கடைக்கு வெளியே இறங்கிவந்து கடைசியாக ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தார். மகிழ்ச்சியின் ஆரவாரச் சத்தங்கள், ஒளிமின்னும் விளக்குகள், காற்றில் வரும் கிறிஸ்துமஸ் உணவுகளின் சமையல் மணம் எல்லாம் அவருக்குத் தனது மனைவியோடும் குழந்தைகளோடும் கழித்த கிறிஸ்துமஸை ஞாபகப்படுத்தியது.

சிரிப்பால் சுருங்கும் அவரது வழக்கமான உற்சாக முகம், அவரது மூக்குக் கண்ணாடிகளுக்குப் பின்னால் தற்போது சோகமாகத் தெரிந்தது. ஆனாலும், அவர் வீட்டுக்குள் புகுந்து ஜன்னலின் ஷட்டர்களை உயர்த்திவிட்டு, கரி அடுப்பில் காபிக் குடுவையை ஏற்றினார். ஒரு முனகலுடன் தனது பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

பப்பா பானோவைத் தொடர்ந்து புத்தகம் வாசிப்பவர் என்று சொல்ல முடியாது. அன்றிரவு, வீட்டிலிருந்த பழைய அளவில் பெரிய குடும்ப பைபிளை எடுத்து கிறிஸ்துமஸின் கதையை வாசிக்கத் தொடங்கினார். பெத்லகேமுக்குச் செல்லும் பயணத்தின்போது மரியாளும் ஜோசப்பும் களைப்பாக இருந்ததைப் படித்தார். அவர்களுக்கு விடுதியில் தங்க ஒரு இடம் கூட இல்லாத நிலையில்தான், மரியாளின் குழந்தை மாட்டுத் தொழுவத்தில் பிறக்க நேர்ந்தது.

அச்சச்சோ என்று தன் துயரத்தை வெளியிட்டார் பப்பா பானோவ். “அவர்கள் இங்கே வந்திருந்தால் நான் ஒரு படுக்கையையும், குழந்தையைப் போர்த்துவதற்கு தைத்து வைத்திருக்கும் இறகு மெத்தையையும் கொடுத்திருப்பேன்.” 

குழந்தை ஏசுவைக் காண்பதற்காக அரும் பரிசுகளுடன் வந்த கிழக்கிலிருந்து வந்த ஞானிகளைப் பற்றிப் படித்தார். பப்பா பானோவுக்கு முகம் தொங்கிப்போனது. “அவருக்குக் கொடுக்க என்னிடம் எந்தப் பரிசும் இல்லை” என்று கழிவிரக்கப்பட்டார்.

அவரது முகம் திடீரென்று சுடர்ந்தது. பைபிளைக் கீழே வைத்தார். அறையின் மூலையிலிருந்த அலமாரிக்குப் போய்த் திறந்து அதன் மூலையில் இருக்கும் சிறிய தூசிபடித்த பெட்டியை எடுத்தார். அதில் குட்டி தோல் ஷூக்கள் ஒரு ஜோடி இருந்தன. அவர் செய்ததிலேயே சிறந்த ஷூக்கள் அவை. “நான் குழந்தை ஏசுவுக்கு இதைக் கொடுப்பேன்” என்று தீர்மானித்தபடி மீண்டும் தனது நாற்காலியில் அமர்ந்தார்.

கிழவருக்குத் தூக்கம் வந்தது. அவரால் பைபிளைப் படிக்க முடியாத அளவு கண்கள் சொக்கின. மார்பில் பைபிளை வைத்தபடியே உறங்கிப்போனார் பப்பா பானோவ்.

அவரது கனவில் அவர் படுத்திருக்கும் அறையில் யாரோ ஒருவர் வந்திருப்பதைப் பார்த்தார். யாரென்று உற்றுப் பார்த்தால் அவர் ஏசு என்று தெரிந்தது.

“என்னைப் பார்ப்பதற்கு நீ விரும்பினாயா, பப்பா பானோவ்.” என்று நேசத்துடன் கேட்டார். “நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் உன்னைப் பார்க்க வருவேன். ஆனால் நான் யார் என்று சொல்ல மாட்டேன். அதனால் கவனமாகப் பார்.” என்று கூறிவிட்டு ஏசு மறைந்துபோனார்.

பப்பா பானோவ் விழித்தெழுந்த போது, தேவாலய மணிகள் ஒலித்தன. மெல்லிய வெளிச்சம் ஜன்னல் ஷட்டர்களின் வழியாக அறைக்குள் கசிந்துகொண்டிருந்தது. “கர்த்தரே என்னை ரட்சியும். இது கிறிஸ்துமஸ் தினம்” என்று முணுமுணுத்தார் பப்பா பானோவ்.

கிறிஸ்து எப்படி இருப்பார்?

எழுந்து நின்று தன் கைகளை நெட்டி முறித்துக்கொண்டார். அவர் கண்ட கனவு ஞாபகத்துக்கு வந்தது. அவரது முகம் மகிழ்ச்சியால் நிறைந்தது. ஏசுவே அவரைக் காண வரவிருப்பதால் அது பிரத்யேக கிறிஸ்துமஸ்தான். அவர் குழந்தையாக இருப்பாரா, அந்த முதல் கிறிஸ்துமஸில் இருந்ததுபோல? தச்சராக இருப்பாரா? அந்த மகத்தான தேவனின் மகனாக ஒரு ராஜாவைப் போல இருப்பாரா?

அந்த தினம் முழுவதும் ஒவ்வொருவரையும் கவனிக்க வேண்டுமென்று முடிவுசெய்து கொண்டார். கிறிஸ்துமஸ் தின காலை உணவுக்காகச் சிறப்பாக காபி பானத்தைத் தயார் செய்தார். ஜன்னல் ஷட்டர்களை ஏற்றி வெளியே பார்த்தார். தெரு கூட்டுபவரைத் தவிர யாருமே இல்லை. தெரு கூட்டுபவர் எப்போதும் போல் பரிதாபமாகவும் அழுக்காகவும் இருந்தார். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.

பப்பா பானோவ் தனது வீட்டுக் கதவைத் திறந்து குளிர்காற்றை அனுமதித்தபடி, தெரு கூட்டுபவரிடம் “உள்ளே வா” என்றார்.

தெரு கூட்டுபவரால் நம்பவே முடியவில்லை. அவர் உள்ளே வந்து அடுப்புச்சூட்டின் தணுப்பில் அமர்ந்து, காபி பருகினார். பப்பா பானோவ், திருப்தியுடன் பார்த்தார். இருப்பினும், ஜன்னலை நோக்கி அவரது விழிகள் அலைந்தபடியிருந்தன. சிறப்பு விருந்தினரைத் தவறவிட அவர் விரும்பவில்லை.

leo-2jpgலியோ டால்ஸ்டாய்

“யாரையாவது எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார் தெரு கூட்டுபவர். பப்பா பானோவ் தனது கனவை அவரிடம் பகிர்ந்துகொண்டார்.

“உங்கள் கனவின்படி தேவன் வருவாரென்றே நினைக்கிறேன்” என்று தெரு கூட்டுபவர் சொல்லிவிட்டுப் புன்னகைத்தபடி சென்றார்.

முதியவரைத் தேடி வந்த விருந்தினர்கள்

தனது இரவு உணவுக்கு முட்டைக்கோஸ்களை நறுக்கி சூப் செய்யத் தொடங்கினார். மீண்டும் வாசல் கதவுக்கு வந்து தெருவை நோட்டமிட்டார். ஒரு யுவதி மிக களைப்புடன் தெருவிலுள்ள வீடுகள், கடைகளின் சுவர்களைப் பற்றியபடி வந்துகொண்டிருந்தாள். அவளது கையில் ஒரு மெல்லிய துணியில் போர்த்தப்பட்ட குழந்தை ஒன்று இருந்தது. அவளது முகத்திலோ அத்தனை துயரம். அவர்களை நோக்கி பப்பா பானோவ் ஈர்க்கப்பட்டார். கதவை விரியத் திறந்து அவர்களைக் கூப்பிட்டு, உள்ளே வரச் சொன்னார். அந்த இளம்தாயை தனது நாற்காலியில் அமரச் செய்தார். அவள் நிம்மதியான பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

பப்பா பானோவ் அடுப்பருகே விரைந்து சென்று, கொஞ்சம் பாலை எடுத்துச் சுடவைத்தார். அடுப்பிலிருந்து பாலைக் கவனமாக இறக்கி, ஆறவைத்து ஒரு தேக்கரண்டியை எடுத்து குழந்தைக்குப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டினார். குழந்தையின் கால்கள் இதமாவதற்காக அடுப்புத் தணுப்பில் காட்டினார்.

அந்தக் குழந்தைக்கு உடனடியாக ஷூக்கள் தேவை என்று முடிவுசெய்தார். விரைவாக எழுந்து அலமாரிக்குப் போய், சிறிய பெட்டியை எடுத்து அந்தத் தாயிடம் கொடுத்துப் போட்டுப் பார்க்கச் சொன்னார். அந்தக் குழ்ந்தை புதிய ஷூ தந்த வெதுவெதுப்பில் களுக்கென்று சிரித்தது.

“நீங்கள் எங்களிடம் மிகுந்த கருணையுடன் நடந்துகொண்டீர்கள். கிறிஸ்துமஸ் தின விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்” என்றபடி அவர்கள் பப்பா பானோவை ஆசிர்வதித்துப் போனார்கள்.

பப்பா பானோவுக்கோ தனது பிரத்யேக விருப்பம் நிறைவேறும் என்று தோன்றவில்லை. வந்த விருந்தினரை அவர் பார்க்க முடியவில்லையோ என்ற சந்தேகமும் தோன்றத் தொடங்கிவிட்டது. அவர் மக்களால் நிறைந்திருந்த தெருவைப் பார்த்தார். அவருக்கு எல்லாருமே தெரிந்த முகங்கள்தாம். அவர் வீட்டைத் தாண்டிச் சென்ற யாசகர்களுக்கு அவர் தனது சூடான சூப்பையும் ரொட்டித் துண்டுகளையும் கொடுத்துவிட்டு வேகவேகமாக மீண்டும் வாசலுக்கு வந்தபடி இருந்தார்.

குளிர்மாதம் என்பதால் சீக்கிரத்திலேயே அந்தி வந்தது. தெருவில் நடமாட்டம் குறையத் தொடங்கியது. பப்பா பானோவ் சலிப்புடன் தனது அறைக்குள் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

எல்லாமே கனவுதான். கிறிஸ்து வரவேயில்லை.

சிறிது நேரத்தில் அறையில் தான் மட்டும் இல்லை என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அது கனவும் அல்ல. அவர் வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாருடைய முகங்களும் வரிசையாகத் தெரிந்தன. தெரு கூட்டுபவரைப் பார்த்தார். இளம் தாயை, குழந்தையை, யாசகர்களைப் பார்த்தார்.

அவர்களின் முகங்கள் கடந்துசென்ற பின்னர் ஒரு கிசுகிசுப்பு கேட்டது. “நீ என்னைப் பார்க்கவேயில்லையா, பப்பா பானோவ்”

- லியோ டால்ஸ்டாய் | தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x