Last Updated : 20 Dec, 2018 10:23 AM

 

Published : 20 Dec 2018 10:23 AM
Last Updated : 20 Dec 2018 10:23 AM

விவிலிய மாந்தர்கள்: பலகீனங்களால் வீழ்ந்த நசரேயன்!

இஸ்ரவேலர்கள் மத்தியில் பல மாவீர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் கடவுள் தந்த பெரும் பலத்தால் யாராலும் செய்யமுடியாத பல ஆச்சரியச் செயல்களைச் செய்தனர். இதனால் சொந்த மக்களுக்குத் தலைவர்களாகவும் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாகவும் விளங்கினார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் சிம்சோன். சிம்சோன் என்றால் 'சூரிய மனிதன்' என்பது அர்த்தம்.

இஸ்ரவேலர்களை அப்போது பெலிஸ்தியர்கள் ஆட்சிசெய்துவந்தார்கள்.  அவர்களது ஆட்சியில் இஸ்ரவேலர்கள் பல இன்னல்களைச் சந்தித்தனர். பெலிஸ்தியர்களைப் போன்ற அந்நியர்களிடமிருந்து கடவுளாகிய பரலோகத் தந்தை தங்களைக் காப்பார் என்று அவர்மீது முழுமையான நம்பிக்கைவந்து உண்மை வணக்கம் செய்துவந்த இஸ்ரவேலர்களில் ஒருவர் மனோவா.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் குழந்தை இல்லை. ஒருநாள் கடவுள் தனது தூதரை மனோவாவின் மனைவியிடம் நல்லச் செய்தி கூறிவர அனுப்பினார். அந்தப் பெண்ணிடம் வந்த தேவதூதர், “உனக்குப் பிறக்கப்போகும் மகன், பெலிஸ்தியர்களின் பிடியிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவான். அவனுடைய தலைமுடியை நீ வெட்டவே கூடாது. ஏனென்றால் அவன் ஒரு நசரேயனாக இருப்பான்” என்ற இறைச் செய்தியை அறிவித்தார். நசரேயர்கள் என்றால் கடவுளின் சிறப்புப் பணியாளர் என்று பொருள். அவர்கள் தலைமுடியை வெட்டுவதோ தாடியை மழிக்கவோ கூடாது.

கடவுளின் அருள் பெற்றவர்கள். அவர்களை கடவுள் இக்கட்டான சமயங்களில் அரணாக நின்று காப்பார். ஆனால் ஒரு நரசேயன் தாம் கடவுளின் ஆசிபெற்றவன் என்பதை உணர்ந்தும், அதன் கொடுப்பினையை அறியாமல் தடம் மாறினால் அப்போது கடவுள் கைவிட்டுவிடுவார்.

சிங்கத்தின் வாயைக் கிழித்த வீரன்

தேவதூதர் கூறியபடியே மனோவா தம்பதிக்கு சிம்சோன் பிறந்தார். வளர்ந்து வாலிபன் ஆனபிறகு சிம்சோன் பெரும் பலசாலியானான். சிம்சோனைப் பற்றிய செய்திகள் பெலிஸ்தர்கள் மத்தியில் பரவியிருந்தன. அவர்கள் பெருவாரியாக வசித்துவந்த திம்னா என்ற நகருக்குச் சென்றபோது வழியில் ஒரு திராட்சைத் தோட்டத்தைக் கடந்தபோது ஒரு சிங்கம் கர்ஜித்தபடி சிம்சோனுக்கு நேராகப் பாய்ந்து வந்தது.

அப்போது கடவுளாகிய யகோவா சிம்சோனுக்குச் சக்தியைக் கொடுத்தார். பாய்ந்து வந்த சிங்கத்தின் வாயைப் பிடித்து பிளந்து வெறுங்கையால் இரண்டாகக் கிழித்துப்போட்டார். அந்தக் கணமே அந்தப் பெரிய சிங்கம் இறந்துபோனது.

மற்றொரு சமயம் தன்னை எதிர்த்த 30 பெலிஸ்தியர்களை தன்னந்தனியாக எதிர்த்து நின்று அவர்களை அழித்தார். இதனால் சிம்சோனை நெருங்கவே பெலிஸ்தியர்கள் பயந்தார்கள். ஏதாவதொரு குறுக்கு வழியில் அவரைக் கொல்ல நினைத்து வழி தேடினார்கள்.

 மற்றொருமுறை சிம்சோன் காசா நகரத்துக்கு வந்து தங்கியிருந்தார். இம்முறை சிம்சோனை எப்படியாவது பிடித்துக்கொண்டுபோய்விடலாம் என்று  காசா நகரத்தின் கோட்டை வாயிலில் இரவு முழுவதும் காத்திருந்தார்கள். ஆனால், சிம்சோன் நடுஇரவில் எழுந்து நகரத்தின் கோட்டை வாயிலுக்குப் போனார்.

வாயிலின் பிரம்மாண்டமான கதவை அப்படியே சுவரிலிருந்து பெயர்த்து எடுத்து தன் தோள்களில் தூக்கிக்கொண்டு எப்ரோனுக்குப் பக்கத்தில் இருந்த மலையின் உச்சிக்குப் போனார். யானைகளாலும் உடைக்கமுடியாத கோட்டைக் கதவை பெயர்த்து தோள்களில் சுமந்த சிம்சோனின் வீரத்தைக் கண்ட பெலிஸ்தியர்கள் மிரண்டுபோய் நாலாபக்கமும் தலைதெறிக்க ஓடினார்கள்.

இன்னொரு முறை சொந்த உறவுகளாகிய இஸ்ரவேலர்கள் சிம்சோனிடம் பணிந்து மன்றாடி, பெலிஸ்தியர்களிடம் சரணடையும்படிக் கேட்டார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்ற சிம்னோனின் கை, கால்களைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் சிம்சோன் ஒரேயொரு முறை மட்டுமே திமிறியபோது நெருப்பு பட்ட நூல்போல் பலமான முறுக்குக் கயிறுகள் அறுந்து, கீழே விழுந்தன.

அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார். உடனே, அதை எடுத்து  தன்னைக் கொண்டுபோக வந்திருந்த ஆயிரம் பெலிஸ்தியர்களையும் தனியொரு ஆளாக அவர் கொன்றுபோட்டார்.

காதலால் வீழ்ந்த நசரேயன்

அதன்பின்னர், சோரேக் பள்ளத்தாக்கில் சிம்சோன் வசித்து வந்தபோது ஒரு பெண்ணை அவர் காதலித்தார். அவள் பெயர் தெலீலாள். அவள் ஒரு பெலிஸ்தியப் பெண். இதை அறிந்துகொண்ட பெலிஸ்திர்களின் தலைவர் அவளிடம் வந்து, “அவனுக்கு எப்படி இவ்வளவு பலமும் வீரமும் வந்தது என்பது பெரிய ரகசியமாக இருக்கிறது. அந்த ஒன்றை மட்டும் அவன் வாயிலிருந்தே தந்திரமாக வர வைத்து எங்களிடம் கூறிவிடு.

நாங்கள் அவனை எப்படியும் பிடித்துக் கொண்டுபோய் அடக்கிவிடுகிறோம் . இதை நீ நமக்காகச் செய்தால்  நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு 1,100 வெள்ளிக் காசுகள் தருகிறோம்”என்று ஆசை காட்டினார்கள். தெலீலாள் பணத்துக்காகவும் தன் இன மக்களுக்காகவும் காதலனைக் காட்டிக்கொடுக்க சம்மதித்தாள்.

சிம்சோன் தனது பலத்துக்கான ரகசியத்தை தெலீலாள் நச்சரித்துக்கேட்டும் முதலில் சொல்லவில்லை. ஆனால் ஒரு தருணத்தில் “நான் ஒரு நசரேயன். அதனால், என்னுடைய தலைமுடியை இதுவரை வெட்டியதே இல்லை. முடியை வெட்டிவிட்டால் என்னுடைய பலமெல்லாம் போய்விடும்” என்று சிம்சோன் அந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டார்.

உடனே தெலீலாள் சிம்சோனை தன்னுடைய மடியில் தூங்க வைத்து அவருடையத் தலைமுடியை வெட்டினாள். பிறகு, அவன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழும்விதமாக “ சிம்சோன், பெலிஸ்தியர்கள் வந்துவிட்டார்கள்!” என்று அலறினாள். வேகமாக எழுந்து பார்த்து சிம்சோன் தனது பலமெல்லாம் போயிருந்ததை கண்டார்.

தெலீலாள் தனது துரோகம் செய்துவிட்டதை உணர்ந்து வருந்தினார். ஆனால் காலம் கடந்துவிட்டிருந்தது. பெலிஸ்தியர்கள் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் கண்களைச் சிதைத்து குருடாக்கி சிறையில் தள்ளினார்கள்.

பின்னர் ஒருநாள், ஆயிரக்கணக்கான பெலிஸ்தியர்கள் ஒன்றுதிரண்டபோது சிம்சோனை கேலிசெய்ய விரும்பினார்கள். அதனால் சிறையிலிருந்து அவரை இழுத்துவரச் செய்து தங்களது கோயிலின் பிரம்மாண்ட மண்டபத்தின் இரண்டு பெரிய தூண்களுக்கு நடுவில் சங்கிலியால் பிணைத்து வைத்து அவரைக் கேலி செய்தார்கள். அப்போது சிம்சோன்,  “ பரலோகத் தந்தையே… இந்த ஒருமுறை மட்டும் எனக்குப் பலம் தாருங்கள்” என்று கடவுளிடம் கெஞ்சினார்.

அவர் கேட்டபடியே கடவுள் அவருக்குப் பலத்தைத் தந்தார். அப்போது முழு பலத்தோடு அந்தத் தூண்களைத் தள்ளினார். அப்போது, அந்தக் கோயில் அப்படியே இடிந்து விழுந்தது. அங்கே இருந்த எல்லாரும் நசுங்கி இறந்தார்கள். அவர்களோடு சிம்சோனும் இறந்தார். ஒரு மாவீரன் அருட்கொடையாக தனக்குக் கிடைத்த பலத்தை இழந்து, தன் பலவீனங்களால் வீழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x