காற்றில் கீதங்கள் 09: ரங்கபுர விமானத்தின் பிரம்மாண்டம்!

காற்றில் கீதங்கள் 09: ரங்கபுர விமானத்தின் பிரம்மாண்டம்!
Updated on
1 min read

பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகர் உளானே…

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்த பாசுரத்தைப் பாடியபின், பிருந்தாவன சாரங்கா ராகத்தின் மெலிதான ஆலாபனையைத் தொடர்ந்து ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் குரலில் ஒலிக்கிறது, முத்துசாமி தீட்சிதரின் `ரங்கபுர விஹாரா’.

சுவாமி சீதாராமனும் பிரவீன்குமாரும் பாடும் வார்த்தைகளைச் சேதப்படுத்தாமல் மயிலிறகின் வருடலாக கீபோர்ட், கிதாரில் மென்மையான முகப்பு இசையையும், கார்ட் புரமோஷன்களையும் இடையிசையையும் ஒலிக்கவிட்டிருக்கின்றனர்.

ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் ஆலாபனையும் உச்ச ஸ்தாயியை எட்டிப் பிடிக்கும் லாகவமும் மிகவும் இயல்பாக வெளிப்படுகிறது. சம்ஸ்கிருதமாக இருந்தாலும் வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாக இருக்கிறது. ரங்கனின் பெருமை பேசும் வரிகளும் அதன் அர்த்த சவுந்தர்யங்களும் கேட்பவரின் மனதை விசாலப்படுத்துகின்றன.

மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மூத்த கர்னாடக இசைக் கலைஞர்கள் பலரும் பாடியிருக்கின்றனர். முழுக்க முழுக்க கர்னாடக இசையின் பின்னணியில் இந்தப் பாடலைக் கேட்பது பரமானந்தம். ‘பிருந்தாவன சாரங்கா’ ராகத்தின் தன்மை மாறாமல் இந்தத் தலைமுறைக்கு ஏற்ப அதே பாடலை கேட்பதும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது.

அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இந்தப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையிலும் `ரங்கபுர விஹாரா’வைப் பாடியிருக்கிறார். தம்புராவின் ஸ்ருதியாக இருந்தாலும் சரி, கிதாரின் கார்ட்ஸாக இருந்தாலும் சரி ரங்கபுர விஹாரத்தின் பிரம்மாண்டம் அப்படியே இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in