Last Updated : 05 Dec, 2018 07:27 PM

 

Published : 05 Dec 2018 07:27 PM
Last Updated : 05 Dec 2018 07:27 PM

ஓஷோ சொன்ன கதை: பொன் இலைகள் எங்கே?

ஜப்பானைச் சேர்ந்த மன்னன் ஒருவனுக்கு ஜென் குரு ஒருவர் தோட்டக்கலையைப் பயிற்றுவித்தார். மூன்றாண்டு போதனைகளுக்குப் பிறகு, அரசனின் அரண்மனைத் தோட்டத்துக்கு வந்து பார்க்கப்போவதாகச் சொன்னார். “இங்கே கற்றுக்கொண்டதை உனது தோட்டத்தில் செய்துபார். நான் திடீரென்று ஒரு நாள் அங்கே வருவேன்.” என்றார்.

தனது ஆசிரியர் தோட்டத்துக்கு வந்து பார்க்கப் போகும் நாளை அரசன் மிகவும் எதிர்பார்த்தபடி தன் தோட்டத்தைத் தயார்படுத்தினார். தோட்டத்தின் ஒரு சின்ன மூலையைக் கூட விட்டுவைக்காமல் கண்ணும்கருத்துமாகப் பராமரித்தான். ஆயிரம் பணியாளர்களை அதற்காக இரவும் பகலும் ஈடுபடுத்தினான். அந்த நாளும் வந்தது. தோட்டம், துல்லியமாக மாசு மருவற்ற ஓவியம் போல எழிலுடன் காட்சி அளித்தது.

குரு வந்து தோட்டத்தைப் பார்வையிட்டார். தனது ஆசிரியரால் எந்தத் தவறையும் கண்டுபிடிக்க முடியாது என்று மன்னன் பெருமிதத்துடன் இருந்தான். ஆனால் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே வந்த குருவின் முகம் தீவிரமானது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் குருவின் முகம் இறுக்கமடைவதைப் பார்த்த மன்னனுக்குக் கலக்கம் ஏற்பட்டது. சூழலின் மௌனத்தைக் கலைக்க விரும்பிய அரசன், என்ன குறை குருவே என்று கேட்டேவிட்டான்.

“தோட்டம் அழகாகவே இருக்கிறது; ஆனால், பொன் இலைகள் எங்கே? இங்கே உதிர்ந்த இலைகளைக் காணவில்லை. காற்றில் படபடக்கும் மஞ்சள் பழுப்பு இலைகள் எங்கே? அவை இல்லாமல் தோட்டம் இறந்துபோனதைப் போலக் காட்சியளிக்கிறது. அங்கே பாடலே இல்லை, நடனமும் இல்லை. எல்லாம் செயற்கையாக தெரிகின்றன.” என்றார் ஜென் குரு.

மன்னர் உதிர்ந்த இலைகள் அத்தனையையும் அப்புறப்படுத்தச் சொல்லியிருந்தார். தரையிலிருந்த இலைகளை மட்டுமல்ல; செடிகள், மரங்களிலிருந்த வாடிய இலைகளையும் அப்புறப்படுத்தியிருந்தார். மரணமும் ஒரு அங்கம் என்பதை அவர் நினைக்கவேயில்லை. மரணமின்றிப் போனால் வாழ்க்கை என்பதே இருக்காது என்பதை அவர் கருதியிருக்கவேயில்லை. ஆம்! குரு சொன்னது சரிதான். அதனால் தான் இந்தத் தோட்டம் உயிர்ப்பு குன்றி காணப்படுகிறதென்பதை மன்னர் உணர்ந்தார்.

“தங்க இலைகளைப் போலவே தங்கமாய் ஒளிரும் காற்றையும் காணவில்லையே. அந்தக் காற்றைக் கொண்டுவர வேண்டும்” என்று ஜென் குரு சொன்னார். அவரே ஒரு வாளியை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வெளியே போய், பெருக்கி அப்புறப்படுத்தப்பட்டிருந்த இலைகளில் கொஞ்சம் அள்ளி எடுத்துவந்தார். அந்த இலைகளை தோட்டமெங்கும் தூவினார். காற்று அடிக்கத் தொடங்கியது. இலைகள் சரசரக்கத் தொடங்கின. இசை வந்தது. இலைகளின் நடனம் தொடங்கியது.

“இப்போது வாழ்வு வந்துவிட்டது. காற்றில் பொன் மின்னுகிறது” என்றார் குரு.

எல்லா எண்ணங்களும் உங்கள் மனத்திலிருந்து உதிர்ந்து விழத் தொடங்கும் போது, உங்கள் பிரக்ஞை வெறுமனே நிர்வாணமாக நிற்கிறது. வெகு ஆழத்தில் உங்கள் வேர்களுக்கருகில் காற்று சுழன்றடிக்க, உங்கள் அனைத்து எண்ணங்களும் உங்களிடமிருந்து சுழன்றடித்து வெகுதூரம் சென்று விடுகின்றன.

அவை உங்களில் ஒரு பகுதியாக தற்போது இல்லை. அவை அங்கே தான் சுழல்கின்றன. ஆனால் அவை உங்களின் ஒரு பகுதியல்ல. நீங்கள் கடந்துவிட்டீர்கள். நீங்கள், மலையிலிருந்து பார்ப்பதைப் போல அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் தியானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x