எறும்பின் வாழ்க்கை முறை

எறும்பின் வாழ்க்கை முறை
Updated on
1 min read

சர்க்கரையும் உப்பும் கலந்த வைக்கப்பட்ட மூட்டைக்குள் எறும்பு புகுந்தால் அது உப்பைத் தவிர்த்துவிட்டுச் சர்க்கரையை மட்டுமே எடுத்துச் செல்லும். இதுவே எறும்பின் வாழ்க்கை முறை. அதாவது, ‘அனாவசியமானவற்றைப் புறந்தள்ளிவிட்டு அவசியமானவற்றைத் தனதாக்கிக்கொள்ளுதல்’.

இந்த வாழ்க்கை முறையை யார் எறும்புக்குச் சொல்லித் தந்தது? சந்தேகத்துக்கே இடமின்றி அதுவே எறும்பின் இயல்பு. இயற்கை, எறும்புக்கு வழங்கிய பண்பு அது. அப்படியானால், ‘எறும்பின் வாழ்க்கை முறை’ வெறுமனே எறும்பின் குணம் மட்டுமன்று; அது தெய்வீகத்தன்மையின் ஒரு அம்சம். படைப்பின் ஒரு அங்கம். இயற்கை மனிதர்களுக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கும் பாடம் இது.

சுதந்திரத்தை மீட்டெடுக்கும் மனிதன்

தன்னுடைய உள்ளுணர்வை மட்டுமே எறும்பு பின்தொடர்கிறது. எறும்பைப் பொருத்தமட்டில் இதுவே அதனுடைய இயற்கையான பண்பு. அதற்கு வேறு மாதிரி நடந்துகொள்ளத் தெரியாது. ஆனால், மனிதர்களைப் பொருத்தவரை அவர்கள் சுயமாகத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்கள் மெனக்கெட்டுச் செய்ய வேண்டிய காரியமாக இருக்கிறது.

எவற்றையெல்லாம் விலங்குகள் தன்னியல்பில் செய்கின்றனவோ அத்தகைய செயல்களை மனிதன் தன்னுடைய சுதந்திர உணர்வை முன்னிறுத்திச் செய்ய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தன்னுடைய புத்திக்கூர்மையையும் சுதந்திர உணர்வையும் மீட்டெடுத்துத்தான் எறும்பின் வாழ்க்கை முறையை மனிதன் பின்தொடர்கிறான்.

கொஞ்சம் தீமை நிறைய நன்மை

இயற்கையின் நியதிபடி இந்த உலகம் நன்மையும் தீமையும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையே. இதில் தீமையை அகற்றிவிட்டு நன்மையைத் தேர்ந்துகொள்வது மானுடத்துக்கு முன்னால் நிற்கும் சவால். தனக்கு இருக்கும் சுதந்திரத்தை யார் ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறாரோ அவரே மகிழ்ச்சியில் திளைக்கிறார். அதற்கு நேர்மறையான சிந்தனை அவசியமாகிறது.

ஆனால், எறும்புகளுக்கோ இது போகிற போக்கில் செய்யும் காரியம். இது எத்தனை விந்தையானது!

சொல்லப்போனால் மனிதர்களாலும் எறும்பின் வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியும். அதற்கு முதலாவதாக இயற்கையின் நியதியை அவதானிக்க வேண்டும். இயற்கையின் நியதிப்படி எப்போதுமே நன்மையும் தீமையும் இந்த உலகத்தில் கலந்துதான் இருக்கும். அதே நேரத்தில் தீமையின் அம்சங்கள் குறைவாகவும் நன்மையின் அம்சங்கள் அதிகமாகவும் இருக்கவே செய்கிறது. இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் நம்மால் பக்குவமான மனநிலையை எட்ட முடியும். அதன்பிறகு நாமும் போகிறபோக்கில் தள்ளுவதைத் தள்ளிவிட்டு வேண்டியதைத் தனதாக்கிக்கொள்வோம்.

- மௌலானா வஹிதுதின் கான் | தமிழில்: ம. சுசித்ரா

(Leading A Spiritual Life, Maulana Wahiduddin Khan, GoodWord Publications,
தொடர்புக்கு: 9790853944, 9600105558)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in