Last Updated : 21 Nov, 2018 07:18 PM

 

Published : 21 Nov 2018 07:18 PM
Last Updated : 21 Nov 2018 07:18 PM

ஆன்மா என்னும் புத்தகம் 26: விடுதலைக்கான சாவி உங்களிடம்தான்

உலகின் சமகால ஆன்மிக ஆசிரியர்களுள் முக்கியமானவராக அறியப்படுபவர் எகார்ட் டோல். இவர் எழுதிய ‘தி பவர் ஆஃப் நவ்’ (The Power of Now: A Guide to Spiritua#Enlightenment) 1997-ம் ஆண்டு கனடாவில் வெளியானது. அதற்குப்பிறகு, 1999-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான பிறகு, இந்தப் புத்தகம் பிரபலமானது. தற்போது 33 மொழிகளில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இக்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, இந்தக் கணத்தில் நாம் எந்த மாதிரியான நபராக இருக்கிறோம் என்பதை ‘தி பவர் ஆஃப் நவ்’ புத்தகம் தீவரமாக அலசுகிறது. பவுத்தம், கிறித்துவம், தாவோயிஸம் போன்ற பாரம்பரியங்களிலிருந்து செறிவுபெற்ற புத்தகம் இது. அதேசமயம், சம்பிரதாய மத ரீதியான சிந்தனைகளைவிட்டு வெளியேற நினைக்கும் இருபத்தியோறாம் நூற்றாண்டின் சிந்தனைகளையும் இந்தப் புத்தகம் அங்கீகரிக்கிறது.

நீங்கள் மனம் அல்ல

மனித மனத்தின் சாதனைகளின் மீதுதான் நமது நாகரிகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் பலவும் குறிப்பிடத்தக்கவை என்று சொல்கிறார் எகார்ட் டோல். மனத்தை, அது தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையை, ‘நாம்’ தான் அது என்று குழப்பிக்கொள்கிறோம். ஆனால், மனத்துக்குப் பின்னால் ஒரு ‘இருப்பு’ இருக்கிறது. அதுதான் உண்மையான ‘நான்’. அதனுடன் இணைந்து செயல்படும்போது, நம் எண்ணங்களை, உணர்வுகளைச் சரியான கண்ணோட்டத்தில் அணுக முடியும்.

நாம் மனத்தைக் கட்டுப்படுத்தும்வரை, மனம் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். மனம், அதனுடன் தொடர்ந்து உரையாடலை நடத்திக் கொண்டிருக்கும். அதை நிறுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. மனத்திடம் நிறைய கருத்துகள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாமே நமக்குக் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றின் அடிப்படையிலேயே இருக்கின்றன.

நிகழ்காலத்தை எதிர்கொள்வதற்கு மனம் தன்னை ஆயத்தப்படுத்துவதாகத் தோன்றினாலும், அதனால் நிகழ்காலத்தை எதிர்கொள்ளவே முடியாது. அப்படியான சூழ்நிலையில் புதிதாக நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்கொள்வதும் அனுபவிப்பதும் கடினமானதாக ஆகிவிடுகிறது.

இப்படித் தொடர்ந்து சிந்தித்துகொண்டிருக்கும் குரல், ‘நம்முடையது’ தான் என்ற முடிவுக்கு நாம் வந்திருப்போம். ஆனால், அது நீங்கள் அல்ல. அது உங்களின் ஒரு பகுதி. மனம் என்ன சொல்கிறது, சிந்திக்கிறது என்பதை கவனிக்கத் தொடங்குவதுதான் மனத்தை ஆளுமை செலுத்துவதற்கான தொடக்கம்.

மனத்தை இப்படிக் கவனிக்கத் தொடங்குவதுதான் ஞானத்தை அடைவதற்கான முக்கியமான படி என்று சொல்கிறார் எகார்ட் டோல். தொடர்ந்து சிந்தித்துகொண்டிருக்கும் மனத்தை ஒரு நொடிக்காவது உங்களால் நிறுத்தமுடியும்போது நீங்கள் கனவுநிலைக்குச் செல்லமாட்டீர்கள். மாறாக, நிகழ்காலத்தின் ஏற்பைப் பெறுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவற்றிடம் திடீரென்று கூடுதல் இணைப்பை உணர்வீர்கள்.

இப்பொழுதின் புது வாழ்க்கை

நாம் மனத்தின் செயல்பாட்டைப் பொதுவாகப் பார்க்கும்போது ‘இப்பொழுது’ என்ற நிலையை அடைவது கடினமாகத்தான் தெரியும். ஆனால், மனத்தின் செயல்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது, நம்மால் ‘விழிப்பு’டன் இருக்கமுடியும். “நாம் அன்றாட வாழ்க்கையின் செயல்களான கைகளைக் கழுவுவது, அமர்வது, நடப்பது, மூச்சுவிடுவது, உண்பது போன்ற செயல்களையும் விழிப்புடன் செய்யும்போது நம்மால் ‘இப்பொழுதில்’ கூடுதலாக.

ஒருவேளை, இவையெல்லாம் அனிச்சை செயல்களாகவும் இயந்திரத்தனமாகவும் இருந்தால், நாம் நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை என்றே அர்த்தம். தற்போதைய சூழலை ஏற்றுக்கொள்ளாமல் அதைத் தடுக்கும்போது, அது மேலும் வலியைத் தருகிறது” என்கிறார் அவர். நாம் பெரும்பாலும் ஒரு இலக்கை, ஒரு லட்சியத்தை அடைவதற்கான ஒரு பாலமாகவே நிகழ்கணத்தை வைத்திருக்கிறோம்.

இலக்கை அடைவதற்கு நாம் செய்யும் பயணத்தைப் பெரும்பாலும் தடையாகவே உணர்கிறோம் என்கிறார் எகார்ட் டோல். இலக்கோடு பயணக் கணங்களில் இழைவதும் அவசியம் என்கிறார்.

தற்போதைய இந்தக் கணத்தைப் பிரச்சினையில்லாததாகப் பார்க்கச் சொல்கிறார் அவர். பிரச்சினைகள் காலத்துடன் சேர்ந்தே உயிர்த்திருக்க முடியும். அதனால் நிகழ்கணத்தில் நாம் கவனம் செலுத்து ம்போதெல்லாம், பிரச்சினைகளின் அழுத்தத்தைக் குறைத்துவிடுகிறோம்.

நிகழ்காலத்தின் உறவுகள்

நாம் நேசத்தில் இருக்கும்போது, அந்த மற்றொரு நபர் நம்மை முழுமையானவராக உணரவைப்பதாகத் தோன்றும். ஆனால், அந்த நபருக்கு நாம் அடிமையாகி, அவரை இழந்தேவிடுவோமோ என்ற திகிலும் சேர்ந்து உருவாகும். நாம் அனைவருமே வலிகளாலான உடலை நமக்குள் கொண்டிருக்கிறோம். அது நாம் காதலில் இருக்கும்போது குணமடைவதாக உணர்கிறோம்.

ஆனால், வலி எப்போதும் இருக்கும் ஒன்று என்கிறார் அவர். உண்மையான நீண்டகால உறவுகளின் நோக்கம் என்பது நம்மை மகிழ்ச்சி யடையவைப்பதும், முழுமையடையச் செய்வதும் கிடையாது. அது நம்மிடம் இருக்கும் வலியை வெளியே கொண்டுவந்து, அதன் பண்பை மாற்றுவதாகும். இதை ஏற்றுகொள்ளும்போது நம் உறவுகள், தவறான எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இயல்பான புரிதலுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என்கிறார் அவர்.

இந்தப் புத்தகம், நிகழ்கணம் எப்படியான அர்த்தம் கொண்டது என்பதை விளக்குகிறது. வாழ்க்கையை இந்தக் கணத்தில் வாழ்வதற்கான பயிற்சியைப் பெற நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

எகார்ட் டோல்

இவர் 1948-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்றவர். தன் 29-வது வயதில் இவருக்குள் ஏற்பட்ட உள்ளார்ந்த மாற்றம், இவரது வாழ்க்கையை மாற்றியது. சில ஆண்டுகளுக்குத் தன் தீவிரமான உள்ளார்ந்த பயணத்தைத் தொடர்ந்த இவர், ஓர் ஆன்மிக ஆசிரியராக உருவானார். தற்போது கனடா, கலிஃபோர்னியா, ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘தி பவர் ஆஃப் நவ்’, ‘ஏ நியூ எர்த்’, ‘ஸ்டில்னெஸ் ஸ்பீக்ஸ்’ போன்றவை இவரது நூல்களில் முக்கியமானவை.

 

இப்பொழுதின் அருமை

#உங்கள் பயணத்தின் இறுதியான உண்மை என்பது இந்தக் கணத்தில் நீங்கள் எடுத்துவைக்கும் அடிதான். அதுதான் எப்பொழுதுமே இருக்கிறது.

#எங்கிருந்தாலும் அங்கே முழுமையாக இருங்கள். இங்கே மற்றும் இப்பொழுது உங்களால் தாங்கமுடியாமல் இருக்குமானால், மகிழ்ச்சியின்மையைக் கொடுக்குமானால், உங்கள் முன் மூன்று வாய்ப்புகளே உள்ளன: அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியேறுவது, அந்தச் சூழ்நிலையை மாற்றுவது, அந்தச் சூழ்நிலையை முழுமையாக ஏற்றுக்கொள்வது.

#சோகத்துக்கும் துயருக்கும் உறவுகள் காரணமாக இருப்பதில்லை. உறவுகள் உங்களுக்குள் ஏற்கெனவே இருக்கும் சோகத்தையும் துயரத்தையுமே வெளிக்கொணருகின்றன.

#உங்களுக்கு ஏதாவது எதிர்மறையாக நிகழும்போதெல்லாம், அந்த நேரத்தில் உங்களால் அதை உணரமுடியாவிட்டாலும், அதில் ஆழமான பாடமொன்று ஒளிந்திருக்கிறது.

#ஆன்மிகப் பரிமாணத்தை வந்தடைவதற்கு நீங்கள் ஏதோவொரு கட்டத்தில் ஆழ்ந்த தோல்வியையோ, இழப்பையோ, துயரத்தையோ எதிர்கொண்டிருப்பீர்கள். அப்படியில்லாவிட்டால், உங்களது வெற்றியே வெறுமையாகவும் அர்த்தமற்றதாகி தோல்வியாக மாறக்கூடும்.

#வருங்காலத்தில் மனத்தை வைத்திருப்பதாலும், நிகழ்காலத்தில் கால்கள் ஊன்றாமல் இருப்பதாலுமே அமைதியின்மை, கவலை, பதற்றம், மன அழுத்தம், பயம் போன்றவை அதிகமாக ஏற்படுகின்றன. குற்றவுணர்வு, வருத்தம், சினம், மனத்தாங்கல், சோகம், கசப்புணர்வு, மன்னிக்கவே முடியாத சூழ்நிலைகள் கடந்த போன்றவை காலம் தொடர்பான அதீதப் பிடிப்பாலேயே ஏற்படுகின்றன.

#கடந்த காலத்தில் எதுவுமே நடக்கவில்லை. அது தற்பொழுதில்தான் நடந்தது. வருங்காலத்தில் எதுவும் நடக்கப்போவதில்லை. அதுவும் தற்பொழுதில்தான் நடைபெறப் போகிறது.

#வாழ்க்கை இப்பொழுதுதான். உங்களது வாழ்க்கை இப்பொழுதில் இல்லாத காலமொன்று இருந்ததே இல்லை. அப்படி ஒரு காலம் வரப்போவதுமில்லை.

#இந்தக் கணத்திடம்தான் விடுதலைக்கான சாவி இருக்கிறது. ஆனால், நீங்கள் மனமாக இருக்கும்போது உங்களால் இந்தக் கணத்தைக் கண்டடைய முடியாது.

#யாருடைய வாழ்வும் முழுமையாகத் துன்பமும் வலியும் இல்லாமல் இருப்பதில்லை. அப்படியிருக்கும்போது, அவற்றைத் தவிர்க்க முயற்சிப்பதைவிட, அவற்றுடன் வாழக் கற்றுகொள்வதுதானே சரியானதாக இருக்கும்?

கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x