ஆன்மிக நூலகம்: ஒரு மரம், சில சமாதிகள்

ஆன்மிக நூலகம்: ஒரு மரம், சில சமாதிகள்
Updated on
1 min read

சில ஆண்டுகளுக்கு முன்னர், கர்நாடகத்தின் குல்பர்கா மாவட்டத்தில் ஒரு புழுதி படிந்த சாலையில் காரில் போய்க் கொண்டிருந்தேன். தரிசாக நீண்டிருந்த வெட்டவெளியில் அளவில் பெரிய மரத்தின் நிழலுக்குக் கீழே சில சமாதிகளைப் பார்த்தேன். எதுவுமே முளைக்காதது போலத் தெரிந்த அந்த இடத்தில், அந்த மரம் மட்டும் செழித்திருக்கும் காட்சி

கனவுபோல இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து அந்த சமாதிகளைக் காப்பதற்காகவே அந்த மரம் அங்கு நின்றிருப்பது போலத் தோன்றியது. நான் எனது பார்வையை அதற்கும் அப்பால் செலுத்தினேன். ஒரு டிரக் வண்டி பழுதுபட்டு நிற்க அதை ஒரு சீக்கிய ஓட்டுநரும் க்ளீனரும் சேர்ந்து சரிசெய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அந்த ஒற்றை மரத்தையும் சமாதிகளையும் மீண்டும் பார்த்தேன். அந்த டிரக்குக்கு அருகில் போனவுடன் எனது சாரதி அயூப்பை காரை நிறுத்தி ரிவர்ஸ் எடுக்கச் சொன்னேன். காரின் பின்புற சீட்டிலிருந்த எனது மனைவி ஜெனிபர் வியப்படைந்தாள்.

“அந்த சமாதிகள் நினைக்க முடியாதளவு தனிமையில் உள்ளன. நான் அவர்களைச் சந்திக்கப் போகிறேன்”.

ஜெனிபரும் நானும் அந்த மரத்தை நோக்கி நடந்தோம். அயூப்பும் காரை விட்டு இறங்கி எங்களுடன் நடக்கத் தொடங்கினார்.

நான் அந்த சமாதிகளை சாந்தமாகப் பார்த்தேன்; பின்னர் அந்த மரத்தையும். இந்தப் பாழ்நிலத்தில் இந்த சமாதிகள் மட்டும் தேர்ந்த நிழலில் அமைந்துள்ளன. இங்கே யார் புதைக்கப்பட்டுள்ளனர்? அத்தனை புராதனமாகவும் இல்லை. ஒரே குடும்பத்து உறுப்பினர்களா அவர்கள்? இந்தக் காலியான, புழுதி பறக்கும் வயலுக்குச் சொந்தக்காரர்கள் யார்? அவர்கள் இந்தச் சமாதியில் உள்ளவர்களுக்கு வாரிசுகளாக இருப்பார்களா? கைவிட்டவற்றைப் போலத் தெரியும் இந்த சமாதிகளைப் பராமரிப்பவர் எவரும் உண்டா?

இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனத்தைக் கடக்கும்போது, சீக்கிய டிரைவரும் அவரது க்ளீனரும் எங்களுடன் வந்து சமாதிக்கு முன்னர் மௌனம் அனுஷ்டித்தனர். இன்னும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தோம். நானும் ஜெனிபரும் அயூபும் எங்கள் காருக்குத் திரும்ப நடக்கத் தொடங்கும்போது அந்த டிரைவர் கேட்டார். “சமாதிகள் உங்கள் உறவினருடையதா?”

நான் புன்னகைத்தபடி இல்லையென்று தலையசைத்தேன்.

ஓட்டுநர் சிரித்தபடி சொன்னார். “நீங்கள் சரியான காரியம் செய்தீர்கள். இதுபோன்ற காரியங்களைச் செய்யும்போது நமது மனம் அமைதியை உணர்கிறது.”

நானும் புன்னகைத்தேன்.

சயீத் அக்தர் மிஸ்ராவின் Memory In The Age Of Amnesia: A Personal History Of Our Times நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.


தமிழில் : ஷங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in