மூதாதையர் கட்டிய ஆலயம் தேடி…

மூதாதையர் கட்டிய ஆலயம் தேடி…
Updated on
2 min read

மகாராஷ்டிர மாநிலம் எல்லோராவில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து, சமண ஆலயங்கள் குறித்த ஆவணப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தோம். ஆவணப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் பெரும்பாலும் நிறைவுற்ற நிலையில், அந்த நிலப்பரப்பை உள்ளடக்குமாறு ஒரு பரந்துபட்ட ஷாட் ஒன்றை கடைசியில் எடுக்கத் திட்டமிட்டேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எத்தனை பிரம்மாண்டத்தை நமது முன்னோர்கள் நிகழ்த்தியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான காட்சி அது. அந்த இடத்தில் இன்னும் பயணிகள் அலைந்துகொண்டிருந்தனர். அமைதி உறைந்திருக்கும் சூழலில் அந்த இடத்தைப் படம்பிடிக்கக் காத்திருந்தேன்.

எனது குழுவினரும் நானும் வெகுநேரம் காத்திருந்தும் சந்தடி அகல்வதாகத் தெரியவில்லை. சூரியன் அஸ்தமனமாகும் வேளையும் வந்தது. எனக்குப் பதற்றம் தொடங்கியது. இறுதியாக கூட்டம் கலைந்தது. பயணிகளை நாங்கள் படம்பிடிக்கும் தலத்தில் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு பணியாட்களை நியமித்துவிட்டு கேமராமேனைத் தயார்செய்யப் பணித்தேன். ‘ஸ்டார்ட்’ சொல்லி அவரைப் பார்த்தேன். அவர் கேமராவிலிருந்து தலையைத் தூக்கி என்னைப் பார்த்தார். நாங்கள் எடுக்கவேண்டிய ஆலயத்தைச் சுட்டிக் காட்டினார்.

திடீரென்று ஒரு பத்து பேர் கொண்ட பயணிகள் குழு ஆலயத்தின் நுழைவாயிலுக்கு வந்து நின்றனர். அவர்கள் ஒரு துணி மூட்டையை  படிகளில் வைத்துத் தலைவணங்கிப் பிரார்த்திக்கத் தொடங்கினார்கள். நான் அவர்களது பிரார்த்தனையைச் சீக்கிரமாக முடிக்கச் சொல்வதற்காக அப்பகுதிக்கு ஓடினேன். நாட்டின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்களது உடையைப் பார்த்தபோது தெரிந்தது. இங்கே ஏன் இவர்கள்? என்று எரிச்சல்பட்டேன்.

அவர்களுக்கு அருகில் சென்றேன். வேஷ்டி, குர்தா, தலைப்பாகையுடன் இரண்டு வயோதிகர்கள், சேலை கட்டிய இரண்டு மூதாட்டிகள் அந்தக் குழுவில் இருந்தனர். இரண்டு இளைஞர்கள் பேண்ட், சட்டை அணிந்தவர்கள். மூன்று சிறுவர், ஒரு சிறுமியும் அவர்களில் உண்டு. அவர்கள் கண்களை மூடி ஆழமான பிரார்த்தனையில் இருந்தனர்.

நான் அவர்களது பிரார்த்தனையை எப்படி துரிதப்படுத்த முடியும். அவர்கள் படிகளில் வைத்து வேண்டுவது எதற்காக?

கொஞ்ச நேரம் கழித்து, அவர்கள் கண்களைத் திறந்தார்கள். ஒரு முதியவரிடம், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“ராஜஸ்தானில் ஜெய்சால்மருக்குப் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து வருகிறோம்.”

அவர்கள் அங்கேயிருந்து இங்கே வருவதற்கு ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும். அவர்கள் இந்தக் கோயிலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகச் சொன்னார்கள். என்னிடம் பேசிய பெரியவரோடு மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இங்கே வருவதற்காக ஒரு வாரம் விடுமுறை எடுக்கின்றனர். மூன்று நாட்கள் பேருந்திலும் ரயிலிலும் பயணித்து இங்கே வந்து ஒரு நாளைக் கழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவது வழக்கமாம்.

“இங்குள்ள எல்லா ஆலயங்களுக்கும் போவீர்களா?”

“இந்த ஆலயம் மட்டும்தான். இதுதான் எங்கள் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.” என்றார் ஒரு இளைஞர்.

ஏன் என்று கேட்டேன்.

“எங்கள் மூதாதையர்கள் கட்டிய கோயில் இது. நாங்கள் கட்டிடக் கலைஞர்கள். இதைக் கட்டுவதற்காக எங்கள் மூதாதையர்கள் இத்தனை தூரம் பயணம் செய்து இங்கே வந்திருக்கின்றனர்” என்றார் அந்த இளைஞர்.

கதைகளின் வழியாக வரலாறு

நான் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து நின்றேன். “உங்கள் மூதாதையர்தான் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“நாங்கள் வழிவழியாக சிற்பிகளாக இருப்பவர்கள். நாங்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், எங்கள் வரலாற்றை தலைமுறைகளாக கதைகளின் வழியாகக் கடத்தி வருகிறோம்.” என்று பதில் சொன்னார். நான் அந்த மனிதனை ஒரு கணம் முழுமையாகப் பார்த்தேன். பின்னர் திரும்பி அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் பார்த்தேன். நான் பார்த்தவுடன் பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டுக் கொண்டனர். குழந்தைகளோ புன்னகைத்தனர். அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று சிரித்தபடி கேட்டேன்.

உளி, சுத்தியல், வெட்டுளி ஆகியவற்றை ஒரு கிழவர் திறந்து காண்பித்தார். அவர்களிடம் மர ஆப்புகளும் இருந்தன. “இவைதான் எங்களது கருவிகள். எங்கள் மூதாதையர்களிடம் இருந்த கைத்திறனை எங்களுக்கும் கொடு என்று வேண்டிக்கொள்வோம்.”

நான் அவர்கள் சொன்னதற்கு அமைதியாகத் தலையசைத்தேன். எனது அணியினரிடம் வந்தேன். எனது தயாரிப்பு மேலாளர், சூரியன் அஸ்தமிக்கப் போவதாகச் சொன்னார். இரண்டு நிமிடங்கள் அந்த மக்களை அகற்றிவிட்டால் கடைசி காட்சியை எடுத்துவிடலாம் என்றார்.

“நாளை அந்தக் காட்சியை எடுக்கலாம்” என்று நான் பதிலளித்தேன்.

எனது குழுவினர் 15 பேரும் ஆச்சரியப்பட்டனர். கருவிகளை எடுத்துவைக்க ஆரம்பித்தனர். நான் அந்தக் கோயிலின் மீது எனது பார்வையைப் பதித்தேன். அந்தக் கோயிலுக்கு முன்னுள்ள வெளியில் அவர்கள் உட்கார்ந்து தாங்கள் கொண்டுவந்த இரவுச் சாப்பாட்டை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களைச் சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தேன். உடனடியாக இருள் வந்துவிட்டது.
 

- சயீத் அக்தர் மிஸ்ரா
தமிழில் : ஷங்கர் | (ஆவணப்பட இயக்குநர் சயீத் அக்தர் மிஸ்ரா எழுதிய Memory In The Age of Amnesia’ நூலிலிருந்து)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in