Last Updated : 21 Nov, 2018 07:17 PM

 

Published : 21 Nov 2018 07:17 PM
Last Updated : 21 Nov 2018 07:17 PM

விவிலிய மாந்தர்கள்: அரசனைவிட, கடவுள் பெரியவர்!

இஸ்ரவேலர்களுக்கு கானான் நாட்டைத் தருவதாக கடவுள் வாக்களித்திருந்தார். அதை வெல்ல வேண்டுமானால், அதன், முதல் பெரிய பட்டணமாகிய எரிக்கோ நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். ஆனால் அது அத்தனை எளிதான காரியமல்ல. ஏனென்றால் ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்குமுன், அதன் மதில்சுவர், தகர்க்கமுடியாத உயரமும் அகலமும் கொண்டதாக இருந்தது.

எரிக்கோ நகருக்கு முன் யோர்தான் நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருந்தது. அதைக் கடந்து கரையேறுவது அத்தனை எளிதான காரியமல்ல. இவற்றைவிட மிகப்பெரிய சவால் ஒன்று இருந்தது. எரிக்கோ பட்டணத்துக்குள் வாழும் மக்களும் அவர்களது அரசனும் மனதளவில் இஸ்ரவேலர்களின் படைபலத்தைப் பார்த்து பயந்துபோய் இருக்கிறார்களா என்று தெரியவேண்டும். அப்போதுதான் இஸ்ரவேலர்கள் படையெடுத்துச் செல்லமுடியும். முதலில் அதைத்தான் அவர்கள் உளவு பார்த்து அறியவேண்டும்.

அப்போது இஸ்ரவேலர்களின் படை, சீத்தீம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் தலைவராக இருந்த ஜோசுவா இரண்டு உளவாளிகளைத் தேர்ந்தெடுத்து, “நீங்கள் போய் கானான் தேசத்தை உளவு பாருங்கள். முக்கியமாக எரிகோ நகரத்தை உளவு பாருங்கள்”என்று அனுப்பினார். அதனால், அவர்கள் எரிக்கோ நகருக்குப் பயணிகளைப்போல சென்று ராகாப் என்ற பெண்ணின் வீட்டில் சென்று அடைக்கலமாகத் தங்கினார்கள்.

அவர்கள் ராகாபின் வீட்டுக்குச் செல்ல ஒரு காரணம் இருந்தது. அவளது வீடு எரிக்கோ நகரத்தின் அந்தப் பிரம்மாண்ட கோட்டைச் சுவரின் மீது கட்டப்பட்டிருந்தது. அவள் முன்பு பாலியல் தொழில் செய்துவந்தவள். அவளது வீட்டுக்குச் சென்றால் எரிக்கோ காவலர்களுக்குச் சந்தேகம் வராது என்று நினைத்தார்கள்.

ஆனால் ராகாப் அந்தப் பாவத் தொழிலைக் கைவிட்டு, தற்போது கடவுளின் குழந்தையாக மாறியிருந்தாள். சணல் துணிகளைச் செய்து உழைத்து வாழத்தொடங்கியிருந்தாள். ராகாபின் வீட்டுக்குள் அன்னியர்கள் இருவர் நுழைந்த செய்தி எரிக்கோவின் அரசன்வரை சென்றடைந்தது. உடனே அவன், ராகாபின் வீட்டுக்குச் சென்று அந்த உளவாளிகளைக் கைதுசெய்வதற்காகத் தன் காவலர்களை அனுப்பினான். அவர்களும் ராகாப் வீட்டுக்கு விரைந்துவந்து கதவைத் தட்டினார்கள்.

“உன் வீட்டுக்கு வந்திருக்கிற ஆட்களை வெளியே கொண்டுவா, அவர்கள் நம்முடைய தேசத்தை உளவு பார்க்க வந்திருக்கிறார்கள்” என்று தலைமைக் காவலன் கடுங்கோபத்துடன் கத்தினான். ஆனால், ராகாப் அந்த இரண்டு பேரையும் ஒளித்துவைத்திருந்தாள். காவலர்கள் அவளிடம் “அந்த ஆட்கள் என் வீட்டுக்கு வந்தது உண்மைதான். ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. இருட்டிய பின்னர், நகரவாசல் அடைக்கப்படும் நேரத்தில் அவர்கள் இங்கிருந்து போய்விட்டார்கள்.

எங்கே போனார்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் உடனடியாகத் துரத்திக்கொண்டு போனால், அவர்களைப் பிடித்துவிடலாம்” என்று அவர்களைத் திசை திருப்பினாள். அவர்களும் அவள் கூறியதை நம்பி அங்கிருந்து அவர்களைப் பிடிக்க கோட்டை வாசல் நோக்கி ஓடினார்கள்.

கடவுளை நம்பிய பெண்

அரசனுடைய காவலர்கள் அங்கிருந்து சென்றதும் அவசர அவசரமாகத் தனது வீட்டின் மொட்டைமாடிக்கு ஓடினாள். அங்கே பரப்பி வைக்கப்பட்டிருந்த ஆளிவிதைச் செடியின் தட்டைகளுக்குள்ளே அவள் ஒளித்துவைத்திருந்த இஸ்ரவேல் உளவாளிகள் இருவரையும் வெளியே வரச்சொன்னாள்.அவர்களிடம்,“ இந்தத் தேசத்தை கடவுள் உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்தத் தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள். ஏனென்றால், நீங்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து அவரால் மீட்டு அழைத்துவரப் பட்டபோது உங்கள் முன்னால் இருந்த செங்கடலை கடவுள் இரண்டாகப் பிரித்து வற்றிப்போகச் செய்து வழி ஏற்படுத்திக் கொடுத்ததையும் எமோரியர்களின் இரண்டு அரசர்களான சீகோனையும் ஓகையும் யோர்தான் நதியின் கிழக்கே நீங்கள் படுதோல்வி அடையச் செய்ததைக் கேள்விப்பட்டபோது, நாங்கள் வெலவெலத்துப் போனோம்.

இப்போது உங்களை எதிர்க்க யாருக்குமே துணிவு இல்லை. மேலே வானத்திலும் சரி, கீழே பூமியிலும் சரி, உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தை உங்களைக் காக்கிறார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். நான் விசுவாசமாக, ஆதரவாக இருந்தது போல எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் விசுவாசமாக இருப்பீர்கள் என்று கடவுளின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்து கொடுங்கள். என் பெற்றோரையும் எனது சகோதர சகோதரிகளையும் அவர்களுக்குச் சொந்தமானவர்களையும் நீங்கள் கொல்லக் கூடாது. எங்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டாள் ராகாப்.

காப்பாற்றி அனுப்பினாள்

ராகாப் இப்படிக் கேட்டதும், “எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உன்னையும் உனது சுற்றத்தாரையும் காப்பாற்றுவோம்” என்று உறுதிகொடுத்தார்கள். உடனே அவள் தனது வீட்டின் ஜன்னலில் ஒரு சிவப்புநிற நூல் கயிற்றைக் கட்டி அவர்களை இறக்கிவிட்டாள். அப்போது அவர்களிடம், “நீங்கள் மலைப்பகுதிக்குப் போய் அங்கே மூன்று நாட்களுக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.

அப்போதுதான் உங்களைத் தேடுகிறவர்களால் உங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் திரும்பி வந்த பின்பு, நீங்கள் உங்களுடைய படைமுகாமுக்குப் போகலாம்” என்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்தாள். அவர்கள் நன்றியுடன் விடைபெறும் முன்பு, “நாங்கள் எரிக்கோவின் மதில்களைத் தகர்த்து உள்ளே நுழையும்போது எங்களை இறக்கிவிட்ட ஜன்னலில் இந்தச் சிவப்புநூல் கயிற்றைக் கட்டித் தொங்கவிடுங்கள். உங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், அவர்களைச் சார்ந்த அனைவரையும் இந்த வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றார்கள்.

ராகாபின் நம்பிக்கை வென்றது

எரிக்கோ நகரத்தில் வாழ்ந்தாலும், வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த நகரத்தின் அரசனைவிடக் கடவுளே பெரியவர், அவரை யாராலும் தோற்கடிக்கமுடியாது என்பதை ராகாப் முழுமையாக நம்பினாள். அதனால் தனது அரசனுக்கோ அவளது காவலர்களுக்கோ அவள் பயப்படவில்லை.

அவளது நம்பிக்கை வீண்போகவில்லை. இஸ்ரவேலர்கள் கடவுளின் துணையோடு யோர்தானைக் கடந்துவந்து, எரிக்கோவை வீழ்த்தி அழித்தபோது ராகாபின் குடும்பத்தினரை வாக்களித்தபடியே இஸ்ரவேலர்கள் காப்பாற்றினார்கள். ராகாப்பை நினைவு கூறும்விதமான கிறிஸ்துமஸ் மரத்தில் சிவப்புநிற நூல் கயிற்றைத் தொங்கவிட்டு அலங்கரிக்கும் பழக்கம் இன்றும்கூட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x