Published : 08 Nov 2018 11:54 AM
Last Updated : 08 Nov 2018 11:54 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 55: பிணைப்பது இனி எக்காலம்?

ஆற்றலைக் குதிரைத் திறன் கொண்டு அளக்கிறார்கள். குதிரையின் ஆற்றலுக்கு எது அடிப்படை? மூச்சுதான். ஐந்து பர்லாங்குகள், அதாவது ஒரு கிலோமீட்டர் அளவுள்ள பந்தயத்தில் ஓடுகிற குதிரை, ஓடி முடிக்கும்போது ஏறத்தாழ 1,800 லிட்டர் அளவுள்ள மூச்சுக்காற்றை உள்வாங்கியிருக்கும். கனபரிமாணத்தைக் கற்பனை செய்துகொள்ள வேண்டுமானால், ஆறு குளியல் தொட்டிகள் அளவிலான காற்று. மனிதனுக்கு நாள் ஒன்றிற்கு ஒன்பதாயிரம் லிட்டர் காற்று. மூன்று குளியல் தொட்டிகள்.

காற்றில் வெடிவளி (nitrogen) 78%; உயிர்வளி (oxygen) வெறும் 21%-தான்; எனவே குதிரை உள்ளிழுத்த 1,800 லிட்டர் அளவுள்ள காற்றில் உயிர்வளியின் அளவு வெறும் 380 லிட்டர்தான். இதிலும் காற்பங்குதான், அதாவது 95 லிட்டர் உயிர்வளிதான் குதிரையின் ரத்தத்தில் கலக்கும்.

ஆற்றலை உருவாக்க வேண்டுமானால் உடம்பின் கண்ணறைகளில் (cells) சேகரிக்கப்பட்டிருக்கும் மாவுச் சத்தை, கொழுப்புச் சத்தை எரிக்க வேண்டும். அவற்றை எரிக்க உயிர்வளி வேண்டும். உயிர்வளி காற்றிலிருந்து உறிஞ்சப்பட்டு, வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குச் செலுத்தப்பட்டு, நுரையீரல் படலத்தை ஊடுருவி, நுண்புழைக்குழாய்கள் வழியாக, ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, இதயத்துக்குச் செலுத்தப்பட்டு, இதயத்தால் உடம்பெல்லாம் பாய்ச்சப்பட்டு, கண்ணறைகளுக்குச் செலுத்தப்பட்டு, அங்கே எரிப்புவேலை நிகழ்ந்து ஆற்றல் உருவாக்கப்பட்டு, உடம்பின் இயக்கத்துக்கு வழங்கப்படுகிறது. எரிதலால் கண்ணறைகளில் உருவாகும் கரிவளி (carbon dioxide) ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, உள்வந்த முறையிலேயே வெளிமூச்சால் வெளியேற்றப்படுகிறது.

மூச்சில் மூன்று நிலைகள்

விலங்குகள் எல்லாவற்றுக்குமே இவ்வாறுதானே நிகழ்கிறது? இதில் குதிரைக்கு மட்டும் என்ன கூடுதல் ஆற்றல்? குதிரைகள் கும்பகம் செய்கின்றன. அதென்ன கும்பகம்? மூச்சு விடுதலில் மூன்று நிலைகள் உள்ளன: உள்வாங்குதல் (பூரகம்); நிறுத்தல் (கும்பகம்); வெளிவிடுதல் (ரேசகம்). இவற்றுக்குத் திருமூலர் தரும் சொற்கள் முறையே ஏறுதல், ஆறுதல், ஊருதல் என்பன. மூச்சுவிடுதலில் உள்வாங்குதலும் வெளிவிடுதலும் எல்லோரிடத்திலும் நிகழ்கின்றன. ஆனால் நிறுத்தல் பெரும்பாலும் நிகழ்வதே இல்லை.

மூச்சை உள்வாங்கும்போது இதயத் துடிப்பின் அளவு குறைகிறது; இதயத் தசைகள் ஓய்வுகொள்கின்றன; இதயம் விரிகிறது (diastole). உயிர்வளி நிரம்பிய இரத்தம் இதய அறைகளில் நிரப்பப்படுகிறது. ரத்தத்தை உடம்பினுள் சுழற்றுவதற்காக இதயம் அழுந்திச் சுருங்கும்போது (systole) ஓய்வுகிடைத்த உற்சாகத்தில் இதயம் புது வேகத்துடன் இயங்கும்; உயிர்வளி நிரம்பிய ரத்தம் உடம்பெங்கும் போதுமான அழுத்தத்தோடு பாயும்.

உயிர்வளி உள்வாங்கப்பட்ட நிலையில் மூச்சிழுத்தலை நிறுத்தினால், புதிய காற்று உள்ளே வராது. உயிர்வளி வரவில்லை என்றால் ரத்தத்தில் உயிர்வளியின் அளவு குறையும். உடம்பிலேயே மிகக் கூடுதலாக உயிர்வளித் தேவையுள்ள பகுதி மூளை. தனக்கு வரும் ரத்தத்தில் போதுமான அளவு உயிர்வளி கிடைக்காவிட்டால், கூடுதல் உயிர்வளியைப் பெறுவதற்காக, கூடுதல் ரத்தத்தைத் தன்னிடம் இழுக்கும். பயன்படுத்தாத பாதைகள் புதர் மண்டித் தூர்ந்து போவதைப்போல, போதுமான

ரத்த ஓட்டமின்மையால் தூர்ந்துகிடக்கும் ரத்தக்குழாய்கள் இந்தச் செயலால் திறக்கப்பட்டு மூளையின் எல்லாப் பாகங்களும் ரத்த ஓட்டம் போகும்; மூளைச் செயல்பாடு கூடுதலாகும். ஆனால் இது அளவுக்குக் கூடினால், தேவைக்குக் கூடுதலான ரத்தம் மூளைக்குப் பாய்ந்து மோசமான சேதாரங்களை ஏற்படுத்திவிடக்கூடும்.

திருமூலர் தரும் கணக்கு

மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேறவிடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும். அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும். தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும்போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு. கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் திருமூலர்:

ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;

ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;

ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

(திருமந்திரம் 568)

மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம். புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம். முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.

குதிரைகள் செய்யும் கும்பகத்துக்கு வருவோம்: குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன. ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன. மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது. ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்

கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;

துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;

உள்ளது சொன்னோம்,

உணர்வுஉடை யோருக்கே.

(திருமந்திரம் 566)

பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,

ஈர்ஆறு கால்கொண்டு

எழுந்த புரவியைப்

பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,

நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்

பேராது காயம் பிரான்நந்தி ஆணையே

(திருமந்திரம் 722)

என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது. பன்னிரண்டு கால்

புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை. இந்தச் சூத்திரத்தைப் பிடித்துக்கொள்ளும் பத்திரகிரியார்,

பன்னிரண்டு கால்புரவி

பாய்ந்துசில்லம் தப்பாமல்

பின்னிரண்டு சங்கிலிக்குள்

பிணைப்பதுஇனி எக்காலம்?

(பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்

புலம்பல், 141)

என்று ஏங்குகிறார். பன்னிரண்டு கால் குதிரை பாய்வதில் சிக்கலில்லை; பாயும் வேகத்தில் சிதறிச் சில்லாகிவிடாமல் கணக்காகப் பாயப் பழக்கவேண்டாமா? இடம் வா என்றால் இடம் வரவும், வலம் வா என்றால் வலம் வரவும், நில்லென்றால் நிற்கவும் வேண்டாமா? குதிரை பழக்கிக் கடிவாளம் போடுவது எக்காலம்?

(தொடர்ந்து பயில்வோம்) கட்டுரையாசிரியர்,

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x