Published : 29 Nov 2018 16:34 pm

Updated : 29 Nov 2018 16:34 pm

 

Published : 29 Nov 2018 04:34 PM
Last Updated : 29 Nov 2018 04:34 PM

தட்சிணாமூர்த்தி சிரசில் சிவலிங்கம்

பிரம்மாவின் மானசிகப் புதல்வர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் வேதத்தின் உண்மைப்பொருளை, சிவபெருமான் குருவாய் தென்முகமாக வீற்றிருந்து உபதேசித்த திருக்கோலமே தட்சிணாமூர்த்தி.

சிவனும் தட்சிணாமூர்த்தியும் ஒன்றின் பலப்பல வடிவங்கள் என்றபோதிலும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். ஆனால், மிக அபூர்வமாக தட்சிணாமூர்த்தியின் தலையில் சிவலிங்கம் வீற்றிருக்கும் விசித்திரக்கோலத்தை மாறாந்தை ஆவுடையம்மாள் உடனுறை கயிலாயநாதர் கோயிலில் தரிசிக்கலாம்.


இத்திருத்தலம், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும்வழியில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த இவ்வாலயம் ஈசன் விருப்பப்படி அமைக்கப்பட்டுள்ளது. தென்பாண்டி நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லபப் பாண்டியன் திக்விஜயம் செய்யும் வேளையில் இப்பகுதிக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அப்போது மாலை வேளை என்பதால் சிவ வழிபாட்டுக்காக அருகில் ஆலயம் ஏதுமுள்ளதா என்று வினவியுள்ளான். அங்கு ஈஸ்வரம் எதுவுமில்லாததால் களிமண்ணால் லிங்கம் அமைத்து பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள மன்னன் முன்வந்தான். சிவலிங்கம் செய்வதற்காக அப்பகுதிவாசிகள் அங்கிருந்த குளத்துக்குள் மூழ்கி களிமண் எடுக்க முனைந்தபோது, அவர்களின் கரங்களில் கல் விக்ரகம் தட்டுப்படவே, அதனையெடுத்து அரசனிடம் வழங்கியுள்ளனர்.

குளத்துக்குள் கிடைத்த சிவலிங்கத்தை வைத்து ஸ்ரீவல்லபன் பிரதோஷ வழிபாடு நடத்தினான். இதன்பிறகு அரண்மனை திரும்பிய அரசன் கனவில் ஈசன் தோன்றி, வழிபாடுசெய்த இடத்திலேயே கோயிலை அமைக்குமாறு கட்டளையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து திக்விஜயம் செய்த பகுதிக்கு வந்த ஸ்ரீவல்லபன் சிவாலயம் அமைத்து, குளத்துக்குள் கண்டெடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளான்.

கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்

வரலாற்றுப் பெருமைமிக்க இக்கோயிலில் கோமளவல்லி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளும் எழுந்தருளியுள்ளார். கற்கண்டு, பூந்தி, லட்டு படையலிட்டு, துளசி மாலை சாற்றி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்து இனிய இல்லறம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள அம்மையப்பரை வணங்குவோருக்கு தடைகள் நீங்கித் திருமணம் கைகூடுவதாகவும் குழந்தை வரம் கிட்டுவதாகவும் ஐதிகம். வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக இவ்வாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. பாலபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்குச் சிறந்த கல்வி, உயர்பதவி, தொழில் முன்னேற்றம் கிடைக்கின்றன.

ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் எழுந்தருளி தொழில், வியாபாரம் செழித்தோங்க அருள்பாலித்து வருகின்றனர். தேய்பிறை அஷ்டமி திதியன்று 60 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலமிட்டு, அதை நல்லெண்ணெய்யில் நனைத்து இரண்டு தீபமேற்றி, தயிர்சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி தொழில், வியாபாரத்தில் மிகுந்த லாபம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

புதிதாகத் தொழில், வியாபாரம் தொடங்குவோரும் இவ்விதம் வழிபட்டு ஏற்றம் பெறலாம் என்று நம்பப்படுகிறது. கைலாசநாதர் - ஆவுடையம்மாள்மாறாந்தை சிவன் கோயில் முகப்பு தட்சிணாமூர்த்தி

எப்படிச் செல்வது?

திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில் ஆலங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 11 கிலோமீட்டர் தொலைவில் மாறாந்தை உள்ளது. மாறாந்தைக்குப் பேருந்து வசதியும் உள்ளது.


கோயில் அறிமுகம்ஆலயம் அறிமுகம்திருத்தலம் அறிமுகம்தட்சிணாமூர்த்தி கோயில் விசித்திரக்கோலம் மாறாந்தை ஆவுடையம்மாள் உடனுறை கயிலாயநாதர் கோயில் ஈஸ்வரன் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x