Published : 01 Nov 2018 11:04 AM
Last Updated : 01 Nov 2018 11:04 AM

எங்கும் சுடரும் நித்தியப் பேரொளி

சுயம் என்பது தன்னிலேயே சோதிப் பிரகாசத்தை வைத்திருக்கும் தூய்மையான பிரக்ஞை. தூய பிரக்ஞையின் ஒளியிலிருந்துதான் அனைத்து வஸ்துகளும் அறியப்படுகின்றன என்று பிருகதாரண்யக உபநிடதம் சொல்கிறது. ஒரு விளக்கின் தீபத்தைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம். ஏற்றிய முதல் விளக்கின் தீபமும் அது கொடுக்கும் ஒளியும் அப்படியேதான் இருக்கும். ஒளி எத்தனை ஒளிகளை ஈன்றாலும் மூல ஒளிக்கு ஒரு குறைவும் ஏற்படுவதில்லை.

பிரம்மம்தான் எல்லாவற்றுக்கும் தாய் ஒளி. அது பிறப்பிக்கும் குழந்தைகளே உயிர்கள் என்பதை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் தீபாவளி.

அகத்தின் நித்திய ஒளி

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், நெருப்பு எல்லாமும் ஒளியில் சுடர்விடு கின்றன. வாழ்க்கை என்னும் அகண்ட வெளியில் அனைத்துப் படைப்புகளிலும் பிரம்மமே சுடர்விடுகிறது; அதனால் அந்தப் பிரம்மத்தின் வெளிப்பாடாகவே அனைத்து உயிர்களையும் வணங்கி மதித்துப் போற்றுவதையும் தீபாவளி நமக்குப் போதிக்கிறது.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல் என இந்த உலகத்தின் ஒளி அனைத்தும் சுயத்தின் அக ஒளியின் ஒற்றைக் கீற்றுடன்கூட ஒப்பிட முடியாதவை. அக ஒளியின் பொருளுணர்ந்து புற ஒளியைக் கொண்டாடுவதும் தீபாவளி உணர்த்தும் தாத்பரியங்களில் ஒன்று. ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருப்பவனின் இதயத்தில் சுயத்தின் அக ஒளி தடையின்றிச் சீராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அந்தப் பிரம்மத்தைத் தீபாவளித் திருநாளில் மனத்தால் நினைத்து, புலன்களை அடக்கி அந்தப் பேரொளியோடு ஒன்ற முயல வேண்டும்.

தீயதை நல்லது அழிக்கும் என்பதை உணர்த்தும்விதமாகத் தீபாவளியன்று வீடுகளில் தீபங்களை ஏற்றுகிறோம். மனத்தில் உள்ள இருட்டை விரட்ட, தியானம் மற்றும் அறிவின் விளக்கை ஏற்றுவதற்குத் தீபாவளி நமக்கு ஞாபக மூட்டுகிறது. அப்படி அகத்தில் நாம் அறிவென்னும் விளக்கை ஏற்றிவிட்டால், அந்தத் தீப ஒளி அணையவே அணையாது. வைராக்கியம், பந்தமின்மை இரண்டும் சேர்ந்த எண்ணெய்யால் எரியும் தீபம் அது. மெய்யையும் பொய்யையும் அகற்ற உதவும் ஒளி அது.

உனக்கு நீயே ஒளி

கும்மிருட்டு நிலவும் அமாவாசை நாளில் வரும் பண்டிகை தீபாவளி. கற்ற எதையும் நாம் மறப்பதில்லை. கற்ற எதையும் நம்மால் மறுக்கவும் முடியாது. அதேபோலத்தான் மனத்தின் இருட்டு அகல்வதும். அங்கே சுதந்திரத்தின் ஒளி ஏற்றப்பட்டுவிட்டால் அது மேலும் சுதந்திரத்துக்கும் உண்மையான சந்தோஷத்துக்குமே இட்டுச்செல்லும். உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபாவளி உணர்த்துகிறது.

தீபம் எப்போதும் மேல்நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள் களோடும் அணுகவும் இந்தத் தீபாவளி தூண்டுகோலாக அமைகிறது. காந்தியின் வார்த்தைகளில் சொல்வ தென்றால், “நீ காண விரும்பும் மாற்றத்தை உன்னிடமிருந்தே தொடங்கு”.

பிறர் செய்த தவறுகளை மன்னிக்கவும் மறக்கவுமான நாளாகவும் தீபாவளி திகழ்கிறது. சுதந்திர மும் கொண்டாட்டமும் நட்புணர்வும் நிறையப்பெற்ற திருவிழா இது. அன்பைப் பரிமாறும் வாழ்த்துகளின் அதிர்வலைகள் காற்றில் வியாபித்து, பலத்தைக் கூட்டும். உலகத்து உயிர்கள் அனைத்தையும் அன்பென்ற கயிற்றில் இணைக்கிற விழாவாகவும் தீபாவளி திகழ்கிறது. இறுகிப்போன இதயங்களையும் இளகச் செய்து கொண்டாட்ட மனநிலைக்கு அது இட்டுச் செல்கிறது.

பேரிருளை அகற்றுவோம்

தீபாவளியன்று நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் ஒவ்வொரு நற்பண்பின் அடையாளம். சிலரிடம் பொறுமை, அன்பு போன்றவை இருக்கும். இன்னும் சிலரிடம் அரவணைக்கும் தன்மையும் தாராள குணமும் மிகுந்திருக்கும். மேலும், சிலரிடமோ அனைவரையும் ஒருங் கிணைத்து வழிநடத்திச் செல்லும் குணம் இருக்கும். ஒளியேற்றுவதன் வாயிலாக இந்த நற்குணங்கள் விழிப்படைந்து பூரணத்துவம் அடை கின்றன. ஒரு குணத்தை மட்டுமே ஒளிபெறச் செய்து என்ன பலன்? ஓராயிரம் தீபமேற்றி, உள்ளத்து ஒளியை எல்லாம் விழிப்படையச் செய்வோம். அந்த ஒளியில் உலகின் காரிருள் மட்டுமல்ல அகத்தின் பேரிருளும் அகன்றுவிடும்.

உலகத்து உயிர்கள் அனைத்தையும் காண்கிறவர், எவரோ அவரை நம்மால் காண முடியாது. அறிவையும் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் அவை உள்ளடங்கிய இந்தப் பிரபஞ்சத்தையும் அவரே ஒளிரச் செய்கிறார். அவரன்றி அவற்றுக்குத் தன்னொளி இல்லை. அவரே பிரம்மம்; அவரே அகம். பிரம்மத்தை உணர்ந்து வாழ்வதன் வழியாகத் தீபாவளியைக் கொண்டாடுவோம். அதன் வழியாக ஆன்மாவின் நித்யானந்ததைக் கண்டடைந்து களிப்புறுவோம்!

- கதிர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x