Published : 08 Nov 2018 12:04 PM
Last Updated : 08 Nov 2018 12:04 PM

எப்போதும் பித்ரு தர்ப்பணம்

ஆண்டுமுழுவதும் பித்ரு வழிபாடு செய்யும் இடமாக திருவனந்தபுரம் திருவல்லத்தில் உள்ள பரசுராமர் கோயில் திகழ்கிறது. வடதிசை நோக்கியமைந்துள்ள இக்கோயிலின் கோபுரத்தின் மேல் மழுவேந்திய  பரசுராமர் உருவச்சிலை உள்ளது. கரமனையாறு, நெய்யாறு, கிள்ளியாறு ஆகியவை சேருமிடத்தில் ஆற்றின் கரையில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில்  ஓடுமேய்ந்த சிறு கட்டிடமாக எழிலுடன் உள்ளது.

அனந்த பத்மநாபனின் தலை

வல்லம் என்றால் தலை என்பது பொருள். அனந்தபத்மனாப சுவாமியின் தலைப்பகுதியானது இவ்விடம்வரை நீண்டிருந்ததால் இத்தலம் திருவல்லம் என்றழைக்கப்பட்டது. திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பெருமாளின் உடல்பகுதியாகவும், திருவல்லம் பரசுராமா் கோயில் பெருமாளின் தலைப்பகுதியாகவும், திருப்பாபுரம் கோயில் பெருமாளின் கால்பகுதியாகவும் விளங்குவதாக கருதப்படுகிறது. ஆகவே, ஒரே நாளில் இம்மூன்று கோயில்களையும் தரிசிப்பது உத்தமம்.

பரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். பரசுராமரின் தோஷம் நீக்கிய தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. அவரது பாதம் இங்கே பொறிக்கப்பட்டுள்ளது. இப்பீடத்தில் தினமும் பூஜை செய்யப்படுகிறது. பீடத்தினருகே பரசுராமன் கோடாரியுடன் நிற்கும் சிலையும் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் இங்கு தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். இங்கு காணப்படும் சிவபெருமானை பரசுராமனும் மகாவிஷ்ணுவின் அம்சமான வேதவியாசரை வியாகரண முனிவரும் பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கு பரிவார தெய்வங்களாக கணபதி, பரமேஸ்வரன், கிருஷ்ணன், அய்யப்பன், மகிஷாசுரமர்தினி போன்றோர் உள்ளனர்.

ஆயிரக்கணக்கில் பலிதர்ப்பணம்

அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கிலும் ஆடி அமாவாசை தினத்தில் பல்லாயிரக்கணக்கிலும் பலிதர்ப்பணம் நடைபெறும். இங்கு பலியிடவருவோர் முன்தினமே இங்கே வந்து தங்கி, விரதமேற்கொண்டு பலியிட வேண்டும் என்பது முறை. இறந்த நம் முன்னோர்கள் பசியில்லாமல் ஒளி உலகில் இன்புற்றிருக்கவும் தோஷம் நீங்கவும் பித்ரு வழிபாட்டை பக்தர்கள் நடத்துகிறார்கள். இங்கு அத்தகைய தோஷம் நீங்குவதற்காக தில ஹோமம் நடத்துவர். ஒரு பலிக்கு ஒரு ஹோமம் என்ற கணக்கில் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை ஹோமம் நடைபெறும்.

சிறுவர்கள் முதல் முதியோர் வரையுள்ள இருபாலினத்தவரும் அவர்களது  பித்ருகளுக்கு அர்ச்சகர்களின் உதவியுடன் மந்திரங்கள் உருவிட்டு பலிகர்மம் செய்து பித்ருக்களை வேண்டும் காட்சியைக் காணமுடியும். பலிச்சோற்றினை அருகிலுள்ள பீடங்களில் வைப்பார்கள். உடனே காகங்கள் அதனை எடுத்துச்செல்லும். பலிதர்ப்பணத்திற்காக எள், சர்க்கரை, கதலிப்பழம், நெய் போன்றவை பயன்படுத்தப்படும். இங்கு சுவாமி பலிச்சோறு உண்ணுவதாக ஒரு நம்பிக்கை. அதன் பின் பலியிடுவோர் குளித்து மூலஸ்தானத்திலுள்ள பரசுராமரை வணங்கிச் செல்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x