Last Updated : 08 Nov, 2018 12:12 PM

 

Published : 08 Nov 2018 12:12 PM
Last Updated : 08 Nov 2018 12:12 PM

ஆன்மா என்னும் புத்தகம் 25: மனிதத்துக்குக் கடமையாற்றும் ஜென்

ஒரு மீன், ராணி மீனிடம் போய்க் கேட்டது, ‘நான்  கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதென்ன கடல்? அது எங்கே இருக்கிறது?’ ‘நீ வாழ்வதும், அசைவதும், உன் உயிர் இருப்பதும் கடலில்தான். கடல் உனக்குள்ளும் இருக்கிறது, நீ இல்லாமலும் இருக்கிறது. நீ கடலால் ஆனவள், உன் முடிவும் கடலில்தான், கடல் உன் உயிரைப் போல உன்னைச் சூழ்ந்துள்ளது.’ சூபி துறவி இனாயத் கான், ஜென் என்பது என்ன என்ற கேள்விக்குப் பதிலாக இந்தக் கதையை முன்வைக்கிறார்.

ஜென் தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ‘ஜென் சதை, ஜென் எலும்புகள்’ (Zen Flesh, Zen Bones) புத்தகம் ஓர் அறிமுக  வழிகாட்டியாக அமையும். அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் பால் ரெப்ஸ், ஜென் ஆசிரியர் நியோஜென் சென்ஸகி இருவரும் இணைந்து தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் 1957-ம் ஆண்டு வெளியானது. தமிழில் இந்தப் புத்தகம், சேஷையா ரவி மொழிபெயர்ப்பில் 2016-ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. ‘101 ஜென் கதைகள்’ (101 Zen Stories), ‘வாசலற்ற வாசல்’ (The Gateless Gate), ‘10 காளைகள்’ (10 Bulls), ‘மையப்படுத்துதல்’ (Centering) ஆகிய நான்கு நூல்களின் தொகுப்பாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

ஜென் கதைகள்

இந்தப் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும் 101 ஜென் கதைகளும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வசித்த ஜப்பானிய ஜென் குரு முஜு என்பவரால் ‘ஷாஷேகி-ஷு’(தமிழில்: கல் மற்றும் மணலின் தொகுப்பு’) என்ற பெயரில் எழுதப்பட்டவையாகும். ஜென் தத்துவம், ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதி தர்மரால் அங்கு வேரூன்றியதாக இந்தப் புத்தகம் விளக்குகிறது. சீனாவில் ஜென் என்பது ‘சான்’ என்று அழைக்கப்படுகிறது. அங்கிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தத் தத்துவம் ஜப்பான் நோக்கி பயணமானதாக விளக்கப்படுகிறது.

ஞானத்தை அடைய விரும்பும் ஒருவனுக்கு, எந்தவிதச் சிறப்பான வேத நூல்களும் இல்லாமல், வார்த்தைகள் எழுத்துகளுக்கு அப்பால், ஒருவனின் மனதின் சாரத்தை நோக்கி ஒருவனின் உயிர் இயல்பை நேரடியாகப் பார்ப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதாக விளக்கப்படுகிறது. ஜென்-சான் துறவிகள், புத்தரின் மாணவர்களாக அவரைப் பின்பற்றுபவர்களாக மட்டுமல்லாமல், அவரது நண்பர்களாக இருப்பதற்கு முயல்கிறார்கள். புத்தரும், இயேசுவும் இந்தப் பிரபஞ்சத்துடன் உயிர்த் தூண்டல் கொண்ட பந்தத்தைப் பேணியதைப் போல அவர்களும் பேணுவதற்கு விழைகிறார்கள். ஜென் என்பது ஒரு மதம் அல்ல. அது ஓர் அனுபவம் என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 101 கதைகளும் உணர வைக்கின்றன.

ஜென்னை விளக்க முடியாது

ஜென் உயிர்ப்பு உங்களிடம் திகழும்போது, உங்களுக்கு அச்சம், சந்தேகம், தேவையற்ற ஏக்கம், அதீத உணர்வுநிலைகள் இருக்காது.  பண்பாடற்ற மனப்பான்மைகளோ தற்பெருமை கொண்ட செயல்களோ உங்களைப் பாதிக்காது. நீங்கள் மனிதத்துக்குப் பணிவுடன் கடமையாற்றுவீர்கள். அன்பு, கருணையுடன் இந்த உலகில் உங்கள் இருப்பை முழுமையடையச் செய்வீர்கள். ஒரு மலரின் இதழ் உதிர்ந்து விழுவதைப் போல நீங்கள் கடந்துசெல்வதை உங்களால் கவனிக்க முடியும். நீங்கள் வாழ்க்கையில் பேரானந்தமான அமைதியை அனுபவிக்க முடியும்.

ஜென் என்பது பல அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனால், அவை அனைத்தையும் முழுமையாக விளக்கிவிட முடியாது. ஒருவேளை, அதை விளக்க முடிந்தால், அது ஜென் கிடையாது. ஜென்னைக் கற்பதற்கு ஒருவரின் இயல்பு மலர வேண்டும். ஆனால், அது எந்தக் காலத்திலும் இயல்பிலும், அவ்வளவு எளிது கிடையாது. எண்ணற்ற சாகசங்களிலிருந்தே இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஜென் கதைகள் உருவாகியிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தில் மற்றொரு புத்தகமான ‘வாசலற்ற வாசல்’, ஜென்னின் செவ்விலக்கிய நூல்களில் ஒன்று. சீன ஜென் குரு ஈகை என்பவரால் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட  இந்தப் புத்தகம், ஜென் குருவுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் உறவை விவரிக்கிறது. ஒருவரின்  உண்மையான இயல்பை உணர்தலின் படி நிலைகளை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பத்துக் காளைகள்’ விளக்குகின்றன. புத்தர் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னரே ஜென் தேடல் இருந்ததை இந்தப் புத்தகத்தில் கடைசிப் பகுதியான ‘மையப்படுத்துதல்’ விளக்குகிறது.

ஜென் தத்துவங்களைக் கற்க விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் தலைமுறைகள் கடந்து வழிகாட்டியாகத் திகழ்கிறது.

ஒவ்வொரு நிமிடமும் ஜென்

ஜென் மாணவர்கள் அனைவரும் தங்கள் ஆசிரியர்களிடம் பத்தாண்டுகள் பயிற்சிபெற்ற பிறகுதான், மற்றவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குவார்கள். தன் பயிற்சியை முடித்து அப்போதுதான் ஆசிரியராகியிருந்த  டென்னோ, நான்-இன் என்ற குருவைச் சந்திக்கச் சென்றார். அன்று மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், டென்னொ மரத்தாலான காலணிகளை அணிந்துகொண்டு, குடை ஒன்றையும் எடுத்துச் சென்றார். அவரை வரவேற்ற நான்-இன், ‘முன்னறையில் உங்கள் காலணிகளையும் குடையையும் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் குடையை மரக் காலணிகளுக்கு இடதுபுறம் வைத்திருக்கிறீர்களா, அல்லது வலதுபுறம் வைத்திருக்கிறீர்களா என்பதை அறிய விரும்புகிறேன்’ என்றார்.

டென்னோ குழப்பமடைந்தார். அவரால் ஒவ்வொரு நிமிடமும் ஜென்னைத் தன் உடன் எடுத்துச்செல்ல முடியவில்லை என்பதை உணர்ந்தார். அவர் நான்-இன் மாணவராக மாறி மேலும் ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்று ஒவ்வொரு நிமிடத்துக்குமான ஜென்னை அடைந்தார்.

விரல் அங்குலம் காலம் காலடி வைரம்

ஒருமுறை ஜென் ஆசிரியர் டாக்குவனிடம் ஒரு பிரபு, தன் நேரத்தை எப்படிக் கழிப்பது என்று ஆலோசனை கேட்டார். ஒருநாள் முழுவதும் அலுவலகத்தில் இறுக் கத்துடன் அமர்ந்தபடி மற்றவர் களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பதைக் களைப்பாக உணர்ந்தார் பிரபு.

டாக்குவன் எட்டு சீன எழுத்துருக் களை எழுதி அந்தப் பிரபுவிடம் கொடுத்தார்:

இருமுறை என்பது நாளில் இல்லை

விரல் அங்குலம் காலம் காலடி வைரம்

இந்த நாள் திரும்ப வராது

ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்ற வைரம்

பால் ரெப்ஸ்

இவர் 1895-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். ஓவியர், எழுத்தாளர், கவிஞருமான இவர், அமெரிக்காவின் தொடக்ககால ஹைக்கூ கவிஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஜென் பவுத்தத்தின் தாக்கத்தில் இவர் பெரும்பாலான ஓவியங்களைப் படைத்திருக்கிறார். இவரது எழுத்துகளோடு ஓவியங்களும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிரபலமாக இருக்கின்றன. ‘ஜென் டெலிகிராம்ஸ்’ ‘டென் வேஸ் டு மெடிட்டேட்’, ‘ஸ்குயர் சன், ஸ்குயர் மூன்’ போன்றவை இவரது புகழ்பெற்ற புத்தகங்களில் சில.

நியோஜென் சென்ஸகி

சைபீரியாவில் 1876-ம் ஆண்டு பிறந்த இவர், ஜப்பானிய பவுத்த துறவி ஒருவரால் வளர்க்கப்பட்டார். 1905-ம் ஆண்டு,  பவுத்தத் துறவி சோயன் ஷகுவின் உதவியாளராக இவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் முன்னணி ஜென் ஆசிரியர்களில் இவர் முக்கியமானவர். ‘தி அயர்ன் ஃப்ளூட்’, ‘புத்திஸம் அண்ட் ஜென்’ போன்றவை இவரது படைப்புகளில் சில.

கட்டுரையாளர் தொடர்புக்கு:

gowri.n@thehindutamil.co.in

ஜென் சதை, ஜென் எலும்புகள்

விலை: ரூ. 160

அடையாளம் பதிப்பகம்

தொடர்புக்கு: 04332 273444

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x