

குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் மகாலக் ஷ்மியின் இயல்பு. பெருமாளைச் சேவிக்க வரும் பக்தர்களின் குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அருள்பாலிக்க வேண்டும்; உலகில் தவறு செய்யாதவர் எவருமில்லை. மகாலக் ஷ்மியின் பரிந்துரைக் குணமே வாத்சல்யம். வத்ஸ: என்றால் குழந்தை என பொருள். அன்றே ஈன்றெடுத்த கன்றிடம் தாய்ப்பசுவுக்கு ஏற்படும் அளவற்ற பாசமே வாத்ஸல்யம். தன் குழந்தைகளின் குற்றங்கள், தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் நல்வழிப் படுத்திவிடுவாள் தாய்.
யசோதையோ, பிருந்தாவனத்துச் செல்லப்பிள்ளையாக விளங்கிய கிருஷ்ணனின் குறும்புத்தனத்தை, தம் மகன் என்றும் பாராது கடுமையாகவே தண்டித்தாள். கிருஷ்ணனைக் கட்டுப்படுத்த, அவன் வெளியில் செல்லாதபடி இடுப்பில் கயிறைச் சுற்றி ஒரு உரலில் கட்டிவைத்தாள்.
ஆனாலும் கிருஷ்ணன் உரலையும் சேர்த்து இழுத்துச் சென்று இரண்டு அசுரர்களுக்கும் விமோசனம் கொடுத்தான். கயிறு அழுத்தியதால் கிருஷ்ணனின் வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. எனவே, கிருஷ்ணன் தாமோதரன் என அழைக்கப்படுகிறான். ‘தாமம்’ என்றால் கயிறு, ‘உதரம்’ என்றால் வயிறு என்று பொருள். அழகாக, புன்னகை ததும்பக் காட்சி தருவதால் ‘சௌமிய’ தாமோதரப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
சப்த மகரிஷிகளுள் ஒருவர் அத்திரி. இவருடைய மகன் துர்வாச முனிவர். சூரபத்மன் தங்கை அசுமுகி. துர்வாசர் அசுமுகி தம்பதிக்கு வில்வலன், வாதாபி என்ற இரு வாரிசுகள். குழந்தைகள் இருவரையும் ஞானமார்க்கத்தில் வளர்க்க விரும்பினார். அசுர குலத்தில் பிறந்த, தாயோ அதை மறுத்தார். இதனால் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து காட்டுக்குள் சென்று துர்வாசர் தவத்தில் ஆழ்ந்தார். உடனே கணவர் மீதும், முனிவர்கள்மீதும் கோபம்கொண்ட அசுமுகி முனிவர்கள் அனைவரையும் பழிவாங்கும்படி தன் பிள்ளைகளிடம் கூறினாள்.
வேடம் பூண்ட பிள்ளைகள்
தாய் சொல்லைத் தட்டாத வில்வலன், வாதாபி இருவரும் சிவ பக்தர்களைப்போல வேடம் பூண்டனர். காட்டுக்குள் சென்று, கண்ணில்பட்ட முனிவர்களையெல்லாம் ‘வாருங்கள், அமுதுண்ணலாம்’ என்று வஞ்சகமாக அழைத்து, தந்திரமாக உணவு வழங்கி, அவர்கள் உணவருந்தியபின் கொன்று விடுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன்படி, வில்வலன் மாய சக்தியால் தன் தம்பியையே உணவாக சமைத்து ரிஷிகளுக்கு விருந்தளிப்பான்.
ரிஷிகள் சாப்பிட்டு முடித்ததும் ‘வாதாபி வெளியே வா!” என்று அண்ணன் அழைப்பான். அப்போது, உணவருந்திய முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தம்பி வெளியே குதிப்பான். உடனே ரிஷிகள் இறந்துவிடுவார்கள். இவ்வாறு தன்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பிள்ளைகளைப் பற்றிப் பெருமிதம் கொண்டிருந்தாள் அசுமுகி. அவளது பிள்ளைகளின் அட்டூழியம் குறித்து சிவன்வரை புகார் சென்றது. அதற்கு மறுமொழி உரைத்த ஈசன், அகத்தியர் பூலோகம் வரும்போது வில்வலன், வாதாபி செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று உறுதியளித்தார்.
அகத்தியரின் தந்திரம்
பின்பொருசமயம் அகத்தியர் தென்திசைக்கு செல்லப் பணிக்கப்பட்டபோது, வில்வலனும் வாதாபியும் வழக்கம்போல் வஞ்சத்துடன் விருந்துக்கு அழைத்தனர். தம்முடைய ஞானத்திருஷ்டியால் அசுரர்களின் சூழ்ச்சியை முன்பே அறிந்திருந்த அகத்தியர், விருந்துண்டதும் தம் வயிற்றைத் தடவி உணவைச் செரிக்கச் செய்துவிட்டார். அண்ணன், தம்பியின் சதி பலிக்கவில்லை.
கோபமுற்ற வில்வலன் அகத்தியரைத் துன்புறுத்தினான். அப்போது அகத்தியர் முருகன், சிவன், விஷ்ணுவைப் பிரார்த்திக்க, முருகப்பெருமானின் யோசனையின் பேரில் வில்வலன் அழிக்கப்பட்டான். இதனால் பிரம்மஹத்தி தோஷத்தைப் பெற்று அதைத் தீர்க்க படிகலிங்கத்தை வழிபட்டு பரிகாரம் அடைந்த தலம்தான் வில்லிவாக்கம் அமிர்தவல்லித் தாயார் உடனுறை சௌமிய தாமோதரப் பெருமாள் ஆலயம் ஆகும். இதனருகிலேயே அகத்தீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது.
ஊஞ்சல் சேவை
அறிந்தோ அறியாமலோ முற்பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவங்கள் இவ்வாலய சௌமிய தாமோதரப் பெருமாளை வழிபடுவதால் நீங்கிவிடும். தாமோதரப் பெருமாள் மூலவராக உள்ளார். இடுப்புகளில் கயிறு அழுந்திய தடம் இப்போதும் உள்ளது. இங்கு தாமோதரப் பெருமாளை குழந்தைக் கண்ணனாகவே பாவித்து வழிபடுகின்றனர்.
தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி, திதி ஆகிய நாட்களில் பெருமாளும் தாயாரும் தோட்டத்தில் உலாவந்து, மாலை 7 மணிக்கு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஊஞ்சல் சேவையைத் தொடர்ந்து ஐந்து வாரம் தரிசனம் செய்யும் திருமணமாகாத ஆண், பெண்களுக்குத் திருமணம் கைகூடும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. புதன்கிழமையும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் தாமோதரப் பெருமாளுக்குப் பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார அடிசல்) நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு வழங்கினால் சத்புத்திர பாக்கியம் வாய்க்கும் என்பது ஐதிகம்.