

சந்தோஷத்தைக் கொடுக்கும் பொருள் அல்லது நபரை நோக்கிய நமது உணர்வுதான் நேசம் என்பது. மகிழ்ச்சியைத் தருபவர்கள் என்பதற்காகவே மனிதர்கள் பிறரை நேசிக்கிறார்கள்.
தத்துவ அறிஞர் ஸ்பினோஸா இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் உள்ளீடற்றதன்மை, வியர்த்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட மனிதன் நிலைத்ததும் நித்தியமானதுமான மகிழ்ச்சியை மனிதன் நாடுகிறான் என்கிறார்.
நாம், நம்மைக் கடப்பதைத் தான் தீர்வாகப் பரிந்துரைக்கிறார் ஸ்பினோஸா. நாம் பிறக்கிறோம்; தற்காலிகமான சந்தோஷங்கள், வலிகளை அனுபவிக்கிறோம்; வயதாகி, நோயுற்று இறந்துபோகிறோம். பெரும்பாலானவர்களின் வாழ்க்கை இப்படியாகத்தான் இருக்கிறது.
எளிய பயிற்சியிலிருந்து தொடங்கலாம். நமது உணர்வு இயல்பு, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நாம் அளிக்கும் எதிர்வினைகளை சற்று தள்ளி நின்று புரிந்துகொள்ளும் பயிற்சிதான் அது. தமது உணர்வு இயல்பின் மீது ஆளுமை செலுத்த முடியாத ஒரு நபர், அந்த உணர்வு இயல்பின் சிறைக்கைதி ஆகிவிடுகிறார் என்கிறார் ஸ்பினோஸா.
உணர்வுகளால் ஒருவர் தின்று செரிக்கப்படாமல், உணர்வுகளின் இயல்பைப் புரிந்துகொண்டு அவற்றைக் கடக்கும் திறனை ஒருவர் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது உணர்வு இயற்கைக்கும் தமது புரிதலுக்கும் இடையில் மூச்சுவிடக்கூடிய வெளியைப் படைத்துவிடுகிறார். இது தொடக்கம் மட்டுமே.
பிறர், பிற விஷயங்கள் மீது சரியான கவனம், அறிவார்ந்த அணுகுமுறையைக் கையாள உதவும். தன்னிலை அடிப்படையிலான அனுபவத்துக்கு அப்பாற்பட்டு நமது நோக்கு, புரிதலை நீட்டிக்க தற்சார்பற்ற அறிதல் தேவையாக இருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் ஒட்டுமொத்த இருப்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வதற்கு அதுவே உதவியாக இருக்கும்.
சந்தோஷத்தை அளிக்கும் விஷயத்தை மட்டுமே நாம் தொடர்ந்து பயில முடியும். நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிலையில் நமது புரிதலை நாம் நேசிக்கத் தொடங்கிவிடுவோம். நமது தற்காலிகமான, வலிமிகுந்த இருப்பு தொடர்பான அலைக்கழிப்புகளோடு, அடையாளம் காணாமல் நம்மைவிட மகத்தான ஒன்றுடன் நாம் அடையாளம் காணத்தொடங்குகிறோம். மனித இருப்பு தொடர்பான ஒரு பார்வையும் கிடைக்கிறது. நடைபெறும் நிகழ்ச்சியை ஒரு கண்ணாடிபோலப் பார்க்கத் தொடங்கி விடுவோம்.
நமது மொத்த கவனமும் நம்மில் குவியும்போது தாறுமாறான சந்தோஷத்தின் அம்புகளும் உண்டிவில் கற்களும் உங்களைத் தாக்கத் தொடங்கும். எந்தப் பெரிய முக்கியத்துவமும் அற்ற உங்கள் இருப்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் நீங்கள் சந்தோஷத்தைக் காண்பீர்கள்; இதைத்தான் ஐன்ஸ்டீன்:
“நம்மால் அனுபவிக்கப்படக் கூடியதிலேயே அதிகபட்ச அழகுடன் கூடிய உணர்வுநிலை என்பது பகுத்தறிவுக்கு எட்டாத வினோதம் கொண்டது. அதுதான் கலை, அறிவியலின் உண்மையான சக்தியும் கூட. யாருக்கு இந்த உணர்வுநிலை அன்னியமாக இருக்கிறதோ, யாருக்கு அதன் விந்தையுணர்வோ திகைப்போ இல்லையோ, அவர்கள் இருந்தும் இறந்துபோனவர்களே.
நம்மால் ஊடுருவ முடியாத ஒன்று இருக்கிறது என்பதை உணர்வதும் அதுவே உயர்ந்த ஞானமாகவும் அதுவே அற்புத வசீகரமாகவும் இருக்கிறது என்பதை அறியும்போது, நமது தற்போதை அறிவைக் கொண்டு அதைப் புரிந்துகொள்ள இயலாது என்பதும் தெரியவரும். இந்த அறிவும் இந்த உணர்வும்தான் உண்மையான சமயத்தன்மையின் மையம். இந்த அடிப்படையில் மட்டுமே நான் சமயத்துவம் கொண்ட மனிதன்.”
- மார்டின் பட்லர் | தமிழில்: ஷங்கர்
(http://corporealfantasy.com இணையத்தளத்திலிருந்து)