Last Updated : 08 Nov, 2018 12:10 PM

 

Published : 08 Nov 2018 12:10 PM
Last Updated : 08 Nov 2018 12:10 PM

விவிலிய மாந்தர்கள்: அறிவே அழகு!

அவள் அழகின் மொத்த உருவமாக இருந்தாள். அவளது முகத்தில் தெய்வீகம் ஒளிர்ந்தது. உலகைப் படைத்த கடவுளாகிய பரலோகத் தந்தைக்கு உண்மை வணக்கம் செய்யும் யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய பெயர் எஸ்தர். அவளது பூர்வீகம் எருசலேம். தற்போது பெர்சியா நாட்டின் பட்டத்து ராணி. ஆம்! பூமியின் பெரும்பகுதி நிலத்தை ஆண்டுவந்த பெர்சியாவின் அரசன் அகாஸ்வேருவின் மனைவி அவள். அரசனுக்குப் பல மனைவிகள் இருந்தாலும் எஸ்தருக்கு தன் இதயத்தில் அவன் முக்கிய இடம் அளித்திருந்தான். எஸ்தர், ராணியாக ஆனதே எதிர்பாராத விபத்து போன்றது. அதை அறிந்துகொள்வதற்குமுன் எஸ்தரின் முன்னோர்கள் எருசலேமிலிருந்து எப்படி பெர்சியாவுக்கு வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அகாஸ்வேருவுக்கு முன் பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேஸர் எருசலேம் மீது படையெடுத்துச் சென்று, அந்த நகரத்தை அழித்தான். அங்கு வாழ்ந்துவந்த யூதர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் போர்க் கைதிகளாகப் பிடித்துகொண்டுவந்தான். அப்படியாக பாபிலோனுக்குப் பிடித்து வரப்பட்டவர்கள், பின்னர் கடவுளால் காப்பாற்றப்பட்டனர்.

மறைத்த யூத அடையாளம்

அவர்களில் பலர், யூதர்கள் என்ற தங்களின் பூர்வீக அடையாளத்தை மறைத்துக்கொண்டு பாரசீகத்தில் செல்வாக்குடன் வாழத் தொடங்கினார்கள். அப்படி யூத அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்த குடும்பங்களில் ஒன்றுதான் எஸ்தருடையது. அவள் அப்போது பெர்சியாவின் சூசான் நகரத்தில் இருந்த பிரம்மாண்ட அரண்மனையின் அந்தப் புரத்தில் வசித்துவந்தாள். அவளுடைய பெரியப்பா மகன் மொர்தெகாய் அவளை வளர்த்து ஆளாக்கியவர். அவர் அப்போதைய பெர்சிய ராஜாவான அகாஸ்வேருவின் ஆட்சி நிர்வாகத்தில் உயர்பதவி வகித்து வந்தார். “எந்தச் சூழ்நிலையிலும் உன்னை ஒரு யூதப் பெண்ணாக எங்கும் எவரிடமும் அடையாளம் காட்டிவிடாதே” என்று எஸ்தரிடம் பெரியப்பா மகன் மொர்தெகாய் எச்சரிக்கை செய்திருந்தார்.

செல்வாக்கும் செருக்கும்

பேரரசர்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம் என்ற நிலையில், அகாஸ்வேரு ராஜா தனக்குப் புதிய ராணி ஒருத்தியைத் தேர்தெடுத்து மணக்க விரும்பினான். அதனால், அவனது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் வாழ்ந்துவந்த மணமாகாத, மிக அழகான, நூற்றுக்கணக்கான பெண்களை அகாஸ்வேருவின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அப்படி நிறுத்தப்பட்டவர்களிருந்து எஸ்தரின் பேரழகைக் கண்டு வியந்த அரசன், அவளைத் தனது ராணியாக தேர்ந்தெடுத்தான்.

அப்போது அரசனுக்கு மிக நெருக்கமான ஆலோசகராகவும் முதன்மை அமைச்சராகவும் இருந்தவனின் பெயர் ஆமான். ஆட்சி நிர்வாகத்தில் இருந்த எல்லா அமைச்சர்களுக்கும் படைத் தளபதிக்கும் தலைவனாக இருந்தான். அதனால் தலைக்கனம் பிடித்தவனாக இருந்தான். அரசனுக்கு அடுத்து அனைவரும் தன் முன்னால் விழுந்து வணங்க வேண்டுமென்று விரும்பினான். ஒருமுறை எஸ்தரின் பெரியப்பா மகன் மொர்தெகாய் ஆமானை வணங்கவில்லை. அதனால், அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. மொர்தெகாயை அவனால் நேரடியாகத் தண்டிக்க முடியவில்லை. ஆனால், அவர் ஒரு யூதர் என்பதைத் தெரிந்துகொண்டான். அதையே காரணமாக வைத்து அவரையும் அந்தத் தேசத்தில் இருந்த எல்லா யூதர்களையும் கொன்றுகுவிக்கத் திட்டமிட்டான்.

அரசன் அளித்த ஒப்புதல்

ஆமான், நேரே அரசனிடம் சென்று “அரசே, யூதர்கள் நம் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களை ஒழித்துக்கட்டிவிடுவது உங்கள் ஆட்சிக்கு நல்லது” என்று சொன்னான். அதைக் கண்மூடித்தனமாக நம்பிய அரசனாகிய அகாஸ்வேரு, “அதற்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாயோ அதைச் செய்” என்று கூறி, யூதர்களைக் கொன்றொழிக்க அவனுக்குச் சிறப்பு அதிகாரத்தைக் கொடுத்தார். உடனே ஆமான், அந்த தேசத்தில் வாழ்ந்த யூதர்கள் அனைவரையும் ஆதார் மாதம் 13-ம் தேதி கொன்றுவிடும்படி ஒரு சட்டம் போட்டு, அதை மக்களுக்கு அறிவித்தான். இதைக் கேட்டு யூத மக்கள் நடுங்கிப் போனார்கள். அரண்மனைக்குள் இருந்த எஸ்தருக்கு இந்தச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால், மொர்தெகாய் அந்தச் சட்டத்தின் நகலை எஸ்தருக்கு அனுப்பி வைத்து, “ நீ போய் அரசனிடம் கூறி நம் மக்களைக் காப்பாற்று” என்றார். ஆனால் அரசன் அழைக்காமல், பட்டத்துராணி உட்பட யார் அவனது முன்னால் போய் நின்றாலும் உடனே மரண தண்டனை கிடைக்கும். முப்பது நாட்களாக அரசன் எஸ்தரை அழைத்துப் பேசவில்லை. அப்படியிருக்க எப்படித் திடீரென்று அவனுக்கு முன்னால் போய் நிற்பது! இருப்பினும் தன் மக்களைக் காப்பதற்காக எது நடந்தாலும் நடக்கட்டும் என்று தனது அரச உடையை அணிந்துகொண்டு துணிவுடன் கிளம்பிச் சென்றாள்.

புத்தசாலிப் பெண்

அழைப்பு இல்லாமல், அரண்மனையின் தர்பார் மண்டபத்துக்குள் நுழையும் அந்தப் பெண் யார் என அரசன் ஆச்சரியமாகப் பார்த்தான். அரச உடை சரசரக்க. தன்னை நெருங்கி வருவது எஸ்தர் என்று தெரிந்ததும் அவனது மனம் மலர்கிறது. அரசன் தனது செங்கோலை நீட்டி அழைப்பில்லாமல் வந்த அவளை மன்னித்தான். உயிர் பிழைத்த மகிழ்ச்சியுடன் எஸ்தர் அரசனின் செங்கோலை நன்றியுடன் தொட்டு வணங்கி மன்னிப்பைப் பெற்றுக்கொண்டாள். எஸ்தர் மீதிருந்த காதலை வெளிப்படுத்தும்விதமாக, “எஸ்தரே.. ராஜாத்தியே! உனக்கு என்ன வேண்டும் கேள்..  நீ கேட்டால் எனது ராஜ்ஜியத்தில் பாதியைக் கூட உனக்குக் கொடுப்பேன்” என்று உருகினான். ஆனால், எஸ்தர் புத்திசாலிப் பெண்ணாக இருந்தாள். உணர்ச்சிவசப்பட்டு, அனைவரும் கூடியிருந்த அந்த தர்பார் மண்டபத்தில் ஆமான் மீது குற்றம் சாட்டி அவள் காரியத்தைக் கெடுக்கவில்லை. மாறாக, “மாமன்னர் விரும்பினால், இன்று நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு உங்களின் தலைமை அமைச்சர் ஆமானுடன் வருகை தர வேண்டும்”என்று தலைபணிந்து கேட்கிறாள். அரசன் ஒப்புதல் அளித்ததோடு, விருந்துக்குச் செல்ல ஆமானையும் வரவழைக்கிறார். அதுவரை அரசன் அப்படியொரு விருந்தையும் உபசரிப்பையும் பார்க்கவில்லை. மகிழ்ந்துபோகிறான்.

எஸ்தரின் அழைப்பை ஏற்று இரண்டாம்நாள் விருந்துக்குச் சென்ற அரசன் மகிழ்ந்து “உனக்கு என்ன வேண்டும், தயங்காமல் என்னிடம் கேள்”  என்றான். அப்போது அவள், “என்னையும் இந்த தேசத்தில் வாழும் என் மக்களையும் உங்கள் அருகில் இருக்கும் ஒருவன் கொல்லத் துடிக்கிறான். தயவுசெய்து, எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கண்ணீர் சிந்தினாள். அதற்கு அரசன்  “உங்களைக் கொல்ல நினைப்பவன் யார்?” என்று கேட்டார். உடனே ஒரு கணமும் தயங்காமல் “ இதோ உங்கள் நிழல்போல அருகிலேயே இருக்கும் இந்தக் கெட்ட மனிதனாகிய ஆமான்தான்”என்று சொன்னாள். அரசன் கோபம் கொண்டு ஆமானைக் கொல்ல உத்தரவிட்டார். ஆனால், ஆமான் போட்ட சட்டத்தை மாற்ற அரசனாலும் முடியாதே. அதனால், உடனடியாக எஸ்தரின் பெரியப்பா மகன் மொர்தெகாயை எல்லா அமைச்சர்களுக்கும் தலைவராக்கினார். யூதர்களைக் கொல்ல யார் வந்தாலும், அவர்கள் திருப்பித் தாக்கி தங்களைக் காத்துக்கொள்ளலாம் என்ற புதிய சட்டத்தைப் போடவும் மொர்தெகாய்க்கு அனுமதி அளித்தார். ஆதார் மாதம் 13-ம் தேதி, யூதர்கள் தங்களைக் கொல்லவந்த எதிரிகளைத் தோற்கடித்தார்கள். எஸ்தர் தனது புத்திசாலித்தனத்தால் அறிவே அழகு என்பதைக் காட்டினாள். கிடைத்த அந்த வெற்றியை ஆண்டுதோறும் கொண்டாடினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x