

‘உன்னிலும் என்னிலும் ஒரே சைதன்யம் பிரகாசிக்கின்றது. பிறகு எதற்குக் கோபம். எதற்குத் துவேஷம். இதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆகையால் எல்லாரிடமும் பிரீதியுடன் இருக்கவேண்டும்.’ என்ற சிருங்கேரி ஸ்ரீ சாரதா மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் அருளாசியுடன் வெளிவந்திருக்கிறது ‘அம்மன் தரிசனம்’ தீபாவளி மலர்.
ஆதிசங்கரர் தொடங்கி வைத்த நான்கு மடங்களில் தலையாயதாகக் கருதப்படும் சிருங்கேரி சாரதா பீடத்தின் சிறப்புகளை மையமாகக் கொண்டு வெளிவரும் இந்த இதழ் குழுவினரின் அர்ப்பணிப்பு இந்த மலரிலும் வெளிப்படுகிறது. பூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்த ஸ்வாமிகளின் தொடக்கக் கட்டுரையுடன் 240 பக்கங்களில் வண்ணப் புகைப்படங்கள், அரிய தகவல்களுடன் வெளியாகியிருக்கிறது.
கும்பகோணம் பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம கனபாடிகள், பகவானின் உள்ளம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். சுகி சிவத்தின் கட்டுரையான ‘சித்தம் சிவமானால்’ இந்த மலரின் சிறப்புகளில் ஒன்று. ‘விழிப்புணர்வு உடையவன் தவம் செய்ய வேண்டியதில்லை. அவன் எது செய்தாலும் அதுவே தவம்’ என்கிறார். டாக்டர் ஆர். தியாகராஜன், தாம்ரபர்ணீ புஷ்கரம் குறித்து எழுதியுள்ளார். பட்டினத்தார் பற்றி ‘காதற்ற ஊசி தந்த ஞானக்கவி’ கட்டுரை அற்புதமானது.