

சிவ ஒளி ஆன்மிக மாத இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான தீபாவளி மலரில் கதை, கட்டுரை, கவிதைகள் என 52 படைப்புகள் பக்தி மணம் கமழ தொகுக்கப்பட்டுள்ளன. குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள ‘ஏறு தழுவிய மாயவன்’ கட்டுரையில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கடந்த கால மனித வாழ்வை படம்பிடிப்பதுபோல நயம்பட விளக்கியுள்ளார்.
‘இன்றும் பொருந்தும் விதுர நீதி’ என்கிற தமது கட்டுரையில் நல்லி குப்புசாமி செட்டியார், மகாபாரதத்தில் நீதியையும் தர்மத்தையும் மீறாமல் வாழ்ந்த விதுரனின் புகழையும், விதுர நீதியெனும் படைப்பிலக்கியம் மனோதத்துவ பின்னணியைக் கொண்டிருக்கிறது என்றும் சுவைபட எழுதியுள்ளார்.
இம்மலருக்கு ஆலந்தூர் மோகனரங்கனின் மரபுக் கவிதை சிறப்பு சேர்க்கிறது. சென்னிமலை தண்டபானியின் ‘தாயுமானவர் தருகிற திறவுகோல்’ எனும் கட்டுரையில் ‘நின்னைச் சரண்புகுந்தால்/நீ காக்க வேண்டுமல்லால்/ என்னைப் புறம் விதல்/ என்னே பராபரமே!’ போன்ற தாயுமானவ சுவாமிகளின் பாடல்களை எல்லாம் தொட்டுக்காட்டுகிறார்.
பிருஹதாரண்யக உபநிடதத்தில் இருந்து யாக்ஞவல்கியர் தனது மனைவி மைத்ரேயியிக்கு வழங்கிய இறையனுபூதி விளக்கக்கதையை டாக்டர் சதாசிவம் ‘மைத்ரேயி பிராம்மணம்’ எனும் கட்டுரையில் அழகுற வெளியிட்டுள்ளார். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளது இந்த பக்தி மலர்.
- நிலமங்கை