

திருக்கோலக்கா, சீர்காழிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஓசை நாயகி அம்மன் கோயில் என்றால் குழந்தைக்குக்கூடத் தெரிகிறது. அந்த அம்மனும் அவள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் அற்புதங்களும்தாம் ராஜகோபுரம் சிறியதாக உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகள்.
ஞானப்பால் உண்டு தன தேவார இசையால் அமுதமெனத் தமிழை வளர்த்த சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. இத்தலத்தின் பெருமையை ‘கோலக்காவின் குருமணியை’ என்று அப்பரும் ‘குருமணி தன்னைக் கோலக்காவிற் கண்டுகொண்டென்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடிப் பரவசமுறுகின்றனர்.
அம்மை அப்பனிடமிருந்து அருள் பெற்ற பின் சம்பந்தர் தல யாத்திரை மேற்கொண்டார். அவர் தரிசித்த முதல் தலம் சீர்காழிக்கு மேற்திசையில் உள்ள கொன்றை வனமென வழங்கும் திருக்கோலக்கா. அந்த ஆலயத்தையும் அதன் முன் உள்ள குளத்தையும் அதில் நீராடிய மாந்தரையும் நீந்திக் கொண்டிருந்த வாளை மீன்களையும் கண்டு மனம் லயித்த சம்பந்தர், ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தைப் பாடினார்.
அவர் கைகளால் தாளம் போட்டுப் பாடியதைக் கண்டு இறைவன் குழந்தையின் கைகள் நோகுமே என்று பஞ்சாட்சரம் பொறித்த செம்பொற்தாளங்களை அருளினார். பொற்தாளங்கள் மதிப்பானவையே தவிர ஒலி எழுப்பாது. கருணை கொண்ட இறைவி அவற்றுக்கு ஓசை தந்தருளினார்.
விண்ணவரும் மண்ணவரும் அதிசயிக்க, மின்னும் மாசில்லா பொற்தாளங்களை ஒலி இசைக்க செய்த தேவி அன்று முதல் ஓசை கொடுத்த நாயகியானார். அய்யன் தாளபரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்ச்சியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகத்தில் ‘நாளு மின்னிசையால் தமிழ் பரப்பும் ஞான’ என்ற பாடல் மூலம் அறிய வைக்கிறார். பாடல் பெற்ற தலங்களில் இது 15-வது தலமாகக் கணக்கிடப்படுகிறது.
சோழற்காலத்தில் செங்கல் ஆலயம்
சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், பின் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுப் பொலிவுடன் விளங்குகிறது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே கோயில்கள் உள்ளன. மூலவர் தாளபுரீஸ்வரர். ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் வருவதற்கு முன்பாக ஆரக்வனேஸ்வரர் (கொன்றை நாதர்).
அம்பாள் அபிதகுசலாம்பாள். மூலவர், அம்மன் சன்னிதிகளுடன் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தக்ஷிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளன. சனி பகவானுக்கும் தனிக் கோயில் உண்டு. பஞ்சலிங்கங்களும் உண்டு. ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறாள்.
திருக்குளம் சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.
எப்படிச் செல்வது?
சென்னையிலிருந்து சீர்காழி 250 கி.மீ. காலையில் புறப்பட்டால் கோயிலைத் தரிசனம் செய்து இரவுக்குள் திரும்பி விடலாம். சீர்காழியில் மற்ற கோயில்களையும் பார்த்துவிட முடியும். விருப்பப்பட்டால் ஒரு நாள் தங்கலாம். தங்குவதற்கு வசதிகளும் உள்ளன. பேச்சுக் குறைபாடுள்ளவர்கள் பிரார்த்தனை செய்தால் குறை நீங்கப் பெறுவர்கள் என்பது நம்பிக்கை.
- வி.குகன்