Last Updated : 25 Oct, 2018 11:39 AM

 

Published : 25 Oct 2018 11:39 AM
Last Updated : 25 Oct 2018 11:39 AM

விருப்பமுள்ளவர்கள் பின்தொடரலாம்

‘யார் அந்த கபீர்தாஸ்?’

‘மிகப் பெரிய சேவகன்!’ என்பதுதான் அந்தக் கேள்விக்கான பதில்.

ஆம்… அரபு மொழியில் ‘கபீர்’ என்ற சொல்லுக்கு ‘மிகப் பெரிய’ என்று பொருள். சம்ஸ்கிருதத்தில் ‘தாஸ்’ என்ற சொல்லுக்கு ‘அடிமை அல்லது சேவகன்’ என்று பொருள். அரபும் சம்ஸ்கிருதமும் சேர்ந்த பெயரைப் போலவே, இஸ்லாமியரையும் இந்துக்களையும் இணைக்கிற ஒரு புள்ளியாக கபீர் வாழ்ந்தார்.

மீராபாய், சுர்தாஸ் போன்று வட நாட்டில் பிறந்து, அங்கே பக்தி இயக்கத்தை வளர்த்த மிக முக்கியமான ஆளுமையான கபீரின் வாழ்க்கை வரலாறு துல்லியமாக ஆவணப்படுத்தப்படவில்லை.

எனினும், கபீர் குறித்து ஆய்வு செய்த ஹசாரி பிரசாத் துவிவேதி, டேவிட் லாரென்சென், வெண்டி டோனிகர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தரும் தகவல்படி, வாராணசியில், ஜுலாஹா எனும் இஸ்லாமிய நெசவாளர் குடும்பம் ஒன்றில் பிறந்தார் கபீர். அவரைத் தலைவராகக் கொண்டு அவருடைய சீடர்களால் பின்னாளில் உருவாக்கப்பட்ட ‘கபீர் பந்த்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர் 120 வருடங்கள்வரை வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால், ஆய்வாளர்களோ 1448 முதல் 1518 வரையிலான காலகட்டத்தில்தான் கபீர் வாழ்ந்தார் என்கிறார்கள். அவர் 1518-ல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மகார் எனும் இடத்தில் மறைந்தார். என்றால், இந்த ஆண்டு அவர் இறந்து 500 ஆண்டுகள் ஆகின்றன!

கபீர் இஸ்லாமியராகப் பிறந்திருந்தாலும், அவர் எப்போதும் இஸ்லாமியராக வாழ்ந்தது கிடையாது. அவருடைய ஆசிரியராக, ராமானந்தர் என்ற வைணவர் இருந்தாலும், கபீர் இந்துவாகவும் தன்னைக் காட்டிக்கொண்டதில்லை. என்றாலும், கபீரின் முன்னோர்கள் நாத யோகி வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்றும், மத்தியில் அவருடைய பெற்றோர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டார்கள் என்றும் சிலர் கூறுவதுண்டு.

இஸ்லாம், இந்து மதப் பாரம்பரியங்களிலிருந்து கபீர் தன் ஆன்மிக அறிவுக்கான அடித்தளத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால், கபீரின் கடவுள் எந்த ஒரு மதத்தையும் சாராதது. ‘கல்லை வணங்கினால் கடவுள் தெரிவார் என்றால், நான் கல்லுக்குப் பதிலாக மலையை வணங்குவேன். ஆனால் பாருங்கள், மாவு அரைக்கும் என் வீட்டு ஆட்டுக்கல், கடவுளை விடவும் பயனுள்ளதாக இருக்கிறது’ என்றவர் கபீர்.

கபீர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில், மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் பெரிதாகப் பாராட்டப்பட்டன. ‘பிராமணரும் களிமண்தான், பனியாவும் களிமண்தான். இந்த உலகில் உள்ள அனைத்துமே களிமண்தான். இந்தக் களிமண்ணில்தான் நாம் எல்லோரும் சந்திக்கிறோம்’ என்று சொல்லி, சாதிப் பெருமைகளைத் தகர்த்தார் கபீர்.

‘அடுக்கடுக்காகப் புத்தகங்களைப் படித்துவிட்டு, மாண்டு போகிறார்கள். யாரும் ஞானமடையவில்லை. மூன்றெழுத்தை மட்டும் படியுங்கள். ஞானம் உமதாகும். அன்பு!’.

‘கபீர்தாஸ் யாருக்கு மிகப் பெரிய அடிமை?’ அன்புக்கு!

பூனையை எலி காதலிக்கும்

‘யோகம், சடங்குகள், விரதம், தானம் போன்ற எவையும், உள்ளம் உருகிப் பாடும் ஒரு பாட்டுக்கு ஈடாகாது’ என்று சொன்ன கபீருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்றால், அவரது உபதேசங்கள் எப்படி மக்களைச் சென்றடைந்தன? பாடல்கள் மூலமாகத்தான். அவதி, ப்ரஜ், போஜ்பூரி போன்ற பல மொழிகள் கலந்த ஒன்றாக அந்தப் பாடல்கள் இருந்தன. தவிர, பாமர மக்களுக்குப் புரியும்படியான எளிய மொழியில், அனாவசியமான அலங்காரங்கள் இல்லாது அவர் பாடினார்.

அவரது பாடல்களில் சில, ‘உல்டா பானி’ (இது ‘உலாட் வன்சி’ என்றும் அழைக்கப்படும்) எனும் ‘தலைகீழ் கவிதை’யாக உள்ளன. அவற்றை வாசிக்கும்போது, முட்டாள்தனமாகத் தோன்றினாலும் ஆழ்ந்து யோசிக்கும்போது பல அர்த்தங்கள் வெளிப்படும்.

கடவுளுக்கு எதிராக இந்த உலகம் இப்படித்தான் சண்டையிடுகிறது:

கருடனைப் பாம்பு கவ்வும்

பூனையை எலி காதலிக்கும்

சிங்கங்களைக் குள்ளநரிகள் ஏய்க்கும்

என்ன அற்புதமான உலகம் இது

இங்கு யானைகளை நாய்கள் வெற்றிகொள்ளும்!

கபீர் சொல்கிறான், கவனியுங்கள் சகோதரர்களே:

மிகவும் அரிதானவர்களே

இதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்வார்கள்.

17-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை, கபீர் பாடிய பாடல்கள் எல்லாம், அவருக்குப் பின்னால், அவருடைய சீடர்களால் வாய்மொழியாகவே கொண்டு செல்லப்பட்டன. அந்த நூற்றாண்டில்தான் முதன்முதலாக எழுத்து வடிவில் அவரது பாடல்கள் ‘ஆதி கிரந்தம்’ எனும் சீக்கியர்களின் புனித நூலில் ஆவணப்படுத்தப்பட்டன. தன் வாழ்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கபீர் பாடியிருக்கலாம்.

ஆனால், அவற்றில் பாதிக்குப் பாதி, பிற்காலத்தில் வந்த அவருடைய சீடர்களால் எழுதிச் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் என்று சொல்பவர்களும் உண்டு. எனினும், ‘ஆதி கிரந்த’த்தில் கபீர் பாடியதாக 227 பாடல்களும், 17 ராகங்களும் மற்றும் 237 ஸ்லோகங்களும் உள்ளன.

அதற்குப் பிறகு, 1915-ல், பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் தாய் வழித் தாத்தா ஷிட்டிமோகன் சென், வட இந்தியா முழுக்க, அலைந்து திரிந்து, வாய்மொழியாகப் புழங்கும் கபீரின் பாடல்களைச் சேகரித்து ‘சாங்ஸ் ஆஃப் கபீர்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

அந்த நூல், அதே ஆண்டில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘கபீரின் நூறு கவிதைகள்’ எனும் தொகுப்பாக வெளியானது. அதற்குப் பிறகு எத்தனையோ மொழிபெயர்ப்பாளர்களால் கபீரின் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. என்றாலும், சமகாலத்தில், கவிஞர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ராவின் மொழிபெயர்ப்பு நம்பகமானதாக இருக்கிறது.

கபீர் காட்டும் ஆன்மிகம்

‘பூக்களைப் பறிக்காதே, வலிக்கும் அதற்கும் எனக்கும்’ என்று பாடும் அளவுக்கு, அகிம்சையைப் போதித்தவர் கபீர். அதுதான் அவரது ஆன்மிகமாக இருந்தது.

பிரபல ஆங்கில எழுத்தாளர் கிரண் நகர்கர் எழுதிய ‘தி ஆர்சனிஸ்ட்’ சிறுகதையில், கபீர் இறந்தவுடன், அவரைப் புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற சச்சரவு, அவருடைய சீடர்களுக்குள் வரும். ஏனெனில், அவருடைய சீடர்களில் இஸ்லாமியர்களும் இருந்தனர், இந்துக்களும் இருந்தனர். இவர்கள் இப்படிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, சிதையில் இருந்து மீண்டும் உயிர்பெற்று வந்துவிடுவார் கபீர். அதிர்ச்சி அடைந்த சீடர்கள், அவரை விசாரிக்க, தன் கையில் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு இப்படிச் சொல்வார்:

என் வீட்டை நான் கொளுத்திவிட்டேன்

என் கையில் தீப்பந்தம் உள்ளது

நான் இப்போது யாருடைய வீட்டையும் கொளுத்துவேன்

விருப்பமுள்ளோர் பின் தொடரலாம்

‘வீடற்று, கடந்த காலங்களை மறந்து, ‘நான்’ என்ற எண்ணத்துக்கு முடிவு கட்டி, நாம் அநாதரவாக நிற்கும்போது, கடவுளின் வீடு நமக்குச் சொந்தமாகும்’ என்பதுதான் அந்தப் பாடலின் பொருள்.

கதை இன்னும் முடியவில்லை.

அதற்குப் பிறகு, அவருடைய சீடர்கள், ‘உங்கள் வேலை முடிந்துவிட்டதா?’ என்று கேட்டபோது, அவர் சொன்னது: “இப்போது நாம் சொர்க்கத்தையும் நரகத்தையும் எரித்து, அந்தப் புகையில் கடவுளை ஊதித்தள்ளுவோம் வா. ஏனென்றால், கடவுள் உனக்குள் இருக்கிறார்!”

இந்தக் காட்சிதான் சேவகனாக்கியது

நனவு

நனவிலி

இரண்டு கம்பங்களுக்கிடையே

மனம் ஒரு ஊஞ்சலை இடுகிறது

அங்குதான் எல்லா உயிர்களும்

எல்லா உலகங்களும் தொங்குகின்றன

அவற்றின் அலைவோ தீராதது

சூரியன் மற்றும் சந்திரனின்

போக்கும் வரவும் அங்கேதான்

லட்சக்கணக்கான யுகங்கள்

      கடந்துபோகின்றன

ஊஞ்சல் ஆடுகிறது.

எல்லாம் ஆடுகின்றன!

வானமும் பூமியும் காற்றும் நீரும்கூட

மற்றும் பகவானும் அங்கேதான்

      வடிவமெடுக்கிறான்

இந்தக் காட்சிதான் கபீரை

ஒரு சேவகனாக்கியது.

- ஆங்கிலத்தில் ரவீந்திரநாத் தாகூர் | தமிழில் : ஷங்கர்

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x