Published : 04 Oct 2018 11:54 AM
Last Updated : 04 Oct 2018 11:54 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 50: விண்ணரசு அவர்களுக்கு

 

 

களர்உழு வார்கள்

கருத்தை அறியோம்;

களர்உழு வார்கள்

கருதலும் இல்லை;

களர்உழு வார்கள்

களரின் முளைத்த

வளர்இள வஞ்சியின்

மாய்தலும் ஆமே.

(திருமந்திரம் 2880)

ஒன்றுக்கும் உதவாத களர்நிலத்தை உழுகிறார்கள் சிலர். களர்நிலத்தை உழுவதன் கருத்து என்ன? நல்லது; களர்நிலத்தை உழுகிறவர்கள் கருதிப் பார்த்து உழுகிறவர்கள் என்றா கருதுகிறீர்கள்? இல்லை. நிலம் ஒன்று இருந்தால் அது களரோ கரடோ உழுதல் உழவனின் கடமை என்ற கண்மூடி வழக்கத்தின்பேரில் உழுகிறார்கள். களர்நிலத்தை உழுவதால் விளைவது என்ன என்ற கருத்தே இல்லாமல் உழுகிறார்கள். அவர்களுக்குக் கடமை மட்டுமே தெரியும்; கருதத் தெரியாது. ஏன்? களர் நிலத்தை உழுதால் ஒன்றுமே நிகழாதா? உழுதாலும் உழாவிட்டாலும் களர்நிலத்தில் களைக்கொடிகள் வளரும்; களைக்கொடிகளையே தங்கள் உழவின் விளைவு என்று கருதிக் களித்திருந்தவர்கள் அறுவடைக்கு ஒன்றுமில்லாமல் அயர்ந்து போவார்கள்.

என்ன சொல்கிறார் திருமூலர்?

‘களர்நிலத்தை உழ வேண்டாம்; விளைநிலத்தை உழுக’ என்கிறார். பயிர்ப் புழக்கத்தில் எது களர்நிலம், எது விளைநிலம் என்று அறிவோம். ஆனால், உயிர் ஒழுக்கத்தில் எது களர்நிலம்? எது விளைநிலம்? புறத்தில் இருப்பது களர்நிலம்; அகத்தில் இருப்பது விளைநிலம். உயிர் ஒழுக்கத்தில் ஈடுபடுவோர் தாங்கள் கருதுவதைப் புறத்தே தேடித் திரிவதும், கருத்தூன்ற முடியாமல் கண் மூடித் தொழுவதும், கடமை என்று கருதிச் சடங்காற்றுவதும் வீண்வேலை. உழாத உழவெல்லாம் உழுதாலும் களர்நிலத்தில் பயிர் வளராததுபோலவே, ஆற்றாத சடங்கெல்லாம் ஆற்றினாலும் புறத்தில் உயிர் வளராது. உயிர் ஓர் அகக் குருத்து. உயிர் ஊன்றிய இடம் அகம்; வளரும் இடமும் அதுதான். எனவே, உயிர் வளர்க்க விரும்புகிறவர்கள் புறத்தில் உழவு செய்வதைவிட்டு அகத்தில் உழவு செய்யுங்கள் என்கிறார்.

உயிர் ஒழுக்கத்துக்கு நான்கு வழிகள்

உயிர் ஒழுக்கத்துக்கு நான்கு வழிகள் சொல்லப்படுகின்றன: கருமம், பக்தி, ஓகம், ஞானம். கடமையைப் பற்றிக்கொள்ளுதல், தலைமையைப் பற்றிக்கொள்ளுதல், தன்னையே பற்றிக்கொள்ளுதல், அறிவைப் பற்றிக்கொள்ளுதல் என்று விளக்கலாம். இவற்றில் முன் இரண்டு நெறிகள்தாம் மிகவும் எளிதான நெறிகள் என்று சமயங்களால் சிறப்பிக்கப்படுகின்றன. ஏன்? அவற்றைப் பின்பற்றுவதற்குப் பெரிய அறிவொன்றும் தேவையில்லை; பற்றியதை விடுவதில்லை என்ற முரட்டுத்தனம் இருந்தாலே போதுமானது என்று கருதப்படுவதால்.

இந்த முன் இரண்டு நெறிகளையும் திருமூலர் பெரிதாகச் சிறப்பித்தவர் அல்லர். ஏன்? கருதியே பார்க்காமல், முரட்டுத்தனமாக ஒன்றைப் பற்றிக்கொள்வது மூடத்தனம் என்று அவர் கருதியதால். ஆராய்ச்சியே இல்லாமல் ஒன்றைச் செய்வதென்பது களர்நிலத்தை உழுத கதைதான். உயிர் முளைக்காது.

கடமையைப் பற்றிக்கொள்வது குற்றமா? அல்ல. தனக்கான கடமை எது, அதைக் கருத்தறிந்து செய்யும் வழி எது என்று தானே, தன் அறிவால் உணர்ந்து, தனக்கான கடமையைத் தேர்ந்துகொண்டு, அதைப் போற்றிப் பின்பற்றலாம்; ‘நீ வந்த வழி இது; எனவே நீ ஆற்ற வேண்டிய கடமை இது, அதை நீ செய்ய வேண்டிய முறை இது’ என்று பிறர் விதிக்கக் கடமையைப் பின்பற்றக் கூடாது. பிறர் விதித்த கடமையைப் பின்பற்றுவதாக இருந்திருந்தால் குந்தி மகன் கருணன் பாரதப் போர்க்களத்துக்குத் தேரோட்டத்தான் வந்திருப்பானே ஒழியப் போராட வந்திருப்பானா?

தலைமையைப் பற்றிக்கொள்வது குற்றமா? அல்ல. தனக்கான கொள்கை எது, அதற்கேற்ப வழிநடத்தும் தலைமை எது என்று தானே, தன் அறிவால் அடையாளம் கண்டு, தனக்கான தலைமையைத் தேர்ந்துகொண்டு, அதைப் போற்றிப் பின்பற்றலாம். ‘உன் வகை இது; எனவே நீ பற்ற வேண்டிய தலைமை இது’ என்று பிறர் திணிக்கத் தலைமையைப் பின்பற்றக் கூடாது. வழிநடத்தும் தலைமை பின்னடைந்தால், அதை ஆராயும் அறிவோடும், தவறும் தலைமையை இடித்துரைக்கும் துணிவோடும், தலைமையைப் பின்பற்றலாம். அறிவுடைமை தலைவனுக்குமட்டும் உரிய தனி உடைமை அன்று; தொண்டர்களுக்கும் உரிய பொது உடைமை. ‘பங்கம் உறச் சொன்னால் பழுதாமோ?’ என்று சிவனாரை இடிக்கவில்லையா நக்கீரர்?

அறிவைப் பற்றச் சொல்லும் திருமூலர்

திருமூலர் ஆதரிப்பது பின் இரண்டாகிய தன்னையே பற்றிக்கொள்ளுதல், தன் அறிவைப் பற்றிக்கொள்ளுதல் என்பவற்றைத்தான். ஏன்? கடமையைப் பற்றுதலும் தலைமையைப் பற்றுதலும் புறத்தைச் சார்ந்து நிற்பவை. எனவே, அவற்றில் ஏமாற்றின் விழுக்காடு கூடுதல். தன்னைப் பற்றுதலும் தன் அறிவைப் பற்றுதலும் தன் அகத்தையே சார்ந்து நிற்பவை. எனவே, இவற்றில் ஏமாற்றின் விழுக்காடு குறைச்சல்.

அகத்தைச் சார்ந்து நிற்பதிலும் ஒரு குற்றம் உண்டு. அகச் செயல்பாடுகளை அலைய வைக்கிறது மனம். மாடு நுகத்துக்குக் கட்டுப்பட்டால்தான் உழவோட்ட முடியும். மனம் வசப்பட்டால்தான் உயிராக்கம் நிறையும்.

கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து

ஆப்புஇடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு

நாள்பட நின்று நலம்புகுந்து ஆயிழை

ஏற்பட இல்லத்து இனிது

இருந் தானே.

(திருமந்திரம் 2881)

நிலைகொள்ளாமல் உழன்றுகொண்டே இருப்பது குள்ளநரி. அதைக் கூகூவென்று கூவி அழைத்தாலும் வருமா? நாய் வரும்; நரி வருமா? வராது. கைக்கு வசப்படாத குள்ளநரி சுதந்திரமாகச் சுற்றித் திரிகிற கொட்டகைக்குள் உங்களைக் கயிற்றால் கட்டி வைத்துவிட்டால் என்னவாகும்? குள்ளநரி உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிறாண்டித் தின்றுவிடும். குள்ளநரியிடமிருந்து பிழைக்க வேண்டுமானால் கட்டவிழ்க்க வேண்டும். மெல்ல உருண்டு கொட்டகையில் எரியும் விளக்கிடம் போங்கள்; கட்டியிருக்கும் கயிற்றை விளக்கின் நெருப்பில் காட்டுங்கள்; கயிறு பொசுங்கும்; கட்டவிழும். வீட்டுக்குப் போங்கள். தொழில்நிமித்தமாகப் பிரிந்துபோன நீங்கள் பத்திரமாகத் திரும்பி வந்ததற்காக உங்கள் மனைவி மகிழ்வாள். மனைவியோடு இனிது இருங்கள்.

இறைமையோடு கலந்திருங்கள்

குள்ளநரி என்பது மனம். உழன்றுகொண்டே இருக்கிறது. வருந்தி அழைத்தாலும் வர மறுக்கிறது. கொட்டகை என்பது உடல். கொட்டகையாகிய உடலுக்குள் பற்றுதல் என்னும் கயிற்றால் கட்டப்பட்டுக் கிடக்கிறது உயிர். மனம் என்னும் குள்ளநரியும் உள்ளேதான் திரிகிறது. உயிரைக் கட்டி வைத்திருக்கும் பற்றுதல் என்னும் கயிற்றைப் பொசுக்கி உங்களை விடுவிக்கும் நெருப்பு அறிவு. விடுபட்டு வீட்டுக்குப் போகும் கணவனாகிய உயிரை வரவேற்கக் காத்திருக்கும் மனைவி இறைமை. அவளோடு கலந்திருங்கள்; மகிழ்ந்திருங்கள்.

இறைமையோடு ஒன்றிக் கலக்கும் நிலையைப் புலப்படுத்துவதற்குப் பொதுவாகச் சமயங்கள் முன்வைக்கும் எடுத்துக்காட்டு நாயக-நாயகி பாவனை. நாயகனும் நாயகியும் ஒன்றிக் கலப்பதுபோல இறையும் உயிரும் கலக்கின்றன என்பது. இதில் நாயகன் இறைவன். நாயகி உயிர். ஏன் மாற்றி நிகழக் கூடாது? இறை பெண்ணாகவும் உயிர் ஆணாகவும் ஏன் இருக்கக்கூடாது? யார் ஆணாக இருந்தால் என்ன? யார் பெண்ணாக இருந்தால் என்ன? காணப்பட வேண்டியது கலப்புத்தானே? ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்’ பால்வேறுபாடற்ற இறைமையை ஆணாக, புருடோத்தமனாக மட்டுமே ஏன் கற்பிக்க வேண்டும்? நாயகனாகக் கற்பிக்காமல் நாயகியாக, மனைவியாகக் கற்பித்தால் என்ன? அயராமல் கற்பிக்கிறார் திருமூலர்.

என்னைவிட்டால் மாப்பிள்ளைமார்

எத்தனையோ உன்றனுக்கே;

உன்னைவிட்டால் பெண்எனக்கும்

உண்டோ மனோன்மணியே?

(குணங்குடியார் பாடற்கோவை, மனோன்மணிக் கண்ணி, 73)

என்று அடியொற்றிப் பாடுகிறார் குணங்குடி மஸ்தான் சாகிபு. ஆண்பாலுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பால்வேறுபாடற்ற கடவுளைப் பெண்பாலாகவும் இருக்க வாய்ப்பாய் விடுவித்தவர்கள் அறிவர்கள் பேறு பெற்றவர்கள்; விண்ணரசு அவர்களுடையது.

(விண்ணரசை நமதாக்குவோம்) கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x