Last Updated : 18 Oct, 2018 07:41 PM

 

Published : 18 Oct 2018 07:41 PM
Last Updated : 18 Oct 2018 07:41 PM

சரஸ்வதி எப்படி சாரதா ஆனார்?

ஆறு பிரிவுகளாக இருந்த சமயங்களை இந்து சமயமாக ஒருங்கிணைத்தவர் ஆதிசங்கரர். அவர்தான் சரஸ்வதி அன்னையை சாரதாம்பாள் என்று அழைத்து அவருக்காக ஆலயங்களையும் அமைத்தார். பேச்சுக்கு வேர், தர்க்கத்தின் களஞ்சியம், தீமையிலிருந்து நன்மையைப் பிரிக்க உதவும் சக்தி என்று சரஸ்வதியை அவர் கருதினார்.

சரஸ்வதிக்கு சாரதா என்று பெயர் ஏற்பட்டதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு. ஆதிசங்கரர் காலத்தில் தத்துவ விவாதங்களை நாடு முழுக்கச் சென்று நடத்தியே அவர் தனது கருத்துகளை ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. பிரம்மத்தின் அழியாமை, இருப்பின் தற்காலிகத் தன்மை குறித்தும் அவர் விளக்க வேண்டியிருந்தது. பிரம்மத்தின் வெளிப்பாடு சகல உயிர்களிலும் காணப்படுகிறது என்ற அத்வைத வேதாந்தத்தைப் பரப்புவதற்காக அவர் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் அக்காலகட்டத்தில் அசாத்தியமானது.

அப்படித்தான் அவர் பண்டிதரான மந்தன மிஸ்ராவையும் எதிர்கொண்டார். மந்தன மிஸ்ரா, ஆதிசங்கரரிடம் தோற்றார். அவரது மனைவியான சாரதாவும் கணவருக்குச் சமமான பண்டிதராக விளங்கினார். அவர் ஆதி சங்கரரை சம்வாதத்துக்கு அழைத்தார். யார் தோற்றாலும் அவர் வாழ்நாள் முழுவதும் ஜெயிப்பவருக்குத் தொண்டராக மாறிவிட வேண்டுமென்பதே பந்தயம்.

இந்த விவாதத்தில் சாரதா தோற்றார். அவர், ஆதிசங்கரரின் யாத்திரையில் அவருடன் காடுமேடு என அலைவதற்கும் தயாரானார். ஆதிசங்கரரோ பிரம்மசாரி; ஒரு பெண்ணை சீடராக ஏற்று தன் பயணத்தைத் தொடர அவர் விரும்பவில்லை. ஆனாலும் சாரதாவை எப்படி விடுவது என்றும் தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் சிருங்கேரியில் உள்ள துங்கபத்திரை நதியின் கரைக்கு அவர் வந்தார். துங்கபத்திரையின் கரையில் சாரதாவைக் காத்திருக்கச் சொன்னார். மறுகரையில் ஆசிரமம் அமைப்பதற்கு உகந்த இடம் தேடி திரும்ப வருவதாகவும் வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்துச் சென்ற ஆதி சங்கரர் திரும்ப வரவேயில்லை என்று கூறப்படுகிறது.

தனக்காக ஆற்றின் கரையில் காத்திருந்த சாரதாவுக்கு அவர் அமைத்த ஆலயமே சாரதா பீடமென்று கருதப்படுகிறது.

சிருங்கேரி சாரதாம்பாள் ஆலயத்தில், சாரதா தேவி ஸ்ரீசக்ர பீடத்தில் கையில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும் புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x