

அளவற்ற சங்கீத ஞானம், பக்தியுடன் ஆன்மிகச் சொற்பொழிவுகளைத் தனது நகைச்சுவை உணர்வு கலந்து அளித்ததால் சிறந்த கதாகாலட்சேப சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார்.
சிறந்த முருக பக்தரான இவரது சொற்பொழிவுகளுக்குத் தமிழகம் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக அன்பர்களும் வரவேற்பை அளித்தார்கள். பெரும்பாலும் பேச்சு வழக்கையொட்டிய இவரது பிரசங்கங்கள் பாமர மக்களையும் வெகுவாக ஈர்த்தன.
அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லையென்றாலும், வாரியார் சுவாமிகளின் தம்பியான மயூரநாதசிவத்தின் மகன் கலைவாணனின் மகள் காயத்ரி – சீதாராமன் தம்பதியின் இரு மகள்கள் சீ. வள்ளி – சீ. லோச்சனா ஆகியோர் சிறிய வயதிலேயே திருமுறை இன்னிசை மற்றும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 162-வது மாத இசைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சீ. வள்ளி (14) – சீ. லோச்சனா (11) இருவரும் பங்கேற்றனர். விழாவில் ‘திருப்புகழ் இன்பம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவை நிகழ்த்தி, தேவாரம், திருப்புகழ் பாடல்களைப் பாடி, கைதட்டல்களை அள்ளினர்.
சிறுமிகள் என்றாலும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றில் தேர்ந்த ஞானத்தைப் பெற்றுள்ளனர் என்பதற்கு அவர்கள் நிகழ்த்தி வரும் இசை நிகழ்ச்சிகளே சாட்சிகளாகும். சிறுமி வள்ளி கூறுகையில், சிறு வயதிலிருந்தே வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை எங்க தாத்தா, அப்பா சொல்ல ஆர்வத்துடன் கேட்போம்.
நாங்கள் இருவரும் முதன்முதலில் பாடியது வாரியார் சுவாமிகள் அவதரித்த காங்கேயநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் விழாவில், 2010-ம் ஆண்டில் நடைபெற்ற திருமுறை இசை நிகழ்ச்சியில்தான். அப்போது எனக்கு 5 வயது, லோச்சனாவுக்கு 3 வயது.
என் மற்றொரு தாத்தா சுவாமிநாதன் (அப்பாவுடைய தந்தை) தேவாரம், திருவாசகம் குறித்து எங்களுக்குச் சிறுவயது முதலே பாடல்கள் பாடச் சொல்லிக் கொடுப்பார். சென்னை போரூர் ராமனாதீஸ்வரர் கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பன்னிரு திருமுறைகளை சங்கரி நந்தகோபால் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார். தருமமிகு சென்னை சிவலோகத் திருமடம் வாதவூர் அடிகளார் நடத்தும் திருவாசகம் விண்ணப்பித்தல் நிகழ்வுக்கும் சென்று இருவரும் கற்றுக்கொள்கிறோம்.
இருவருக்குமே தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பக்திப் பாடல்கள் என ஆயிரம் பாடல்களுக்கு மேல் தெரியும்.
தற்போது வரை சென்னை, மதுரை, கோவை, ஆத்தூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கோயில் விழாக்கள், இசை விழாக்கள் என ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
பள்ளிக்குச் சென்றுவந்த பிறகு தினமும் அரை மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பயிற்சி எடுத்துக் கொள்வோம். பள்ளிப் பாடங்களுக்கு இடையூறு இல்லாமல் இந்தப் பயிற்சியைத் திட்டமிடுவோம். பெரும்பாலும் பள்ளி விடுமுறை நாட்களில்தாம் நிகழ்ச்சிகளுக்கும் செல்வோம்.
வாரியார் தாத்தா போன்று கதாகாலட்சேபம் செய்யுமாறு பலரும் கேட்கின்றனர். அதற்கான தயாரிப்புகளை இப்போதுதான் கையில் எடுத்துள்ளோம். குறிப்பாக, சமயக் குரவர்கள் நால்வர் வாழ்க்கை வரலாறு, விநாயகர் வரலாறு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சொற்பொழிவுகளைத் தற்போது தயாரித்து வருகிறோம். விரைவில் திருமுறை இன்னிசையுடன் சொற்பொழிவையும் மேடையேற்றுவோம்.
வாரியார் தாத்தா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், அவரது ரசிகர்களுக்காக முடிந்தவரை நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்கின்றனர் உற்சாகத்துடன். யூ டியூப்பில் இச்சிறுமிகளின் வீடியோக்களை Variyarvalli என்ற இணைப்பில் காணலாம். முகநூலில் – Vst sabai & Variyarvalli.