Published : 23 Aug 2018 10:51 am

Updated : 23 Aug 2018 10:51 am

 

Published : 23 Aug 2018 10:51 AM
Last Updated : 23 Aug 2018 10:51 AM

விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் வரதராசப் பெருமாள்

ஏழைகளின் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது இந்த வரதராசப் பெருமாள்கோயில்.

ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்தக் கோயில் பெருந்திருவிழாவில் வெளி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாநிலத்திலிருந்தும் அதிகப்படியான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

அரியலூருக்குக் கிழக்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள கலியுக வரதராசப் பெருமாள் கோயில்தான் ஏழைகளின் திருப்பதி என அழைக்கப்படும் தலம்.

‘கதை' இல்லாத ஆஞ்சநேயர்

1751– ம் ஆண்டு, அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் என்பவருக்கு மாடுகள் நிறைந்த மந்தை இருந்தன. அவற்றில், நிறைவயிறாக இருந்த அழகிய பசு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் காணாமல் போனது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்த மங்கானுக்குத் தூக்கத்தில், அவரது கனவில் பெரியவர் வடிவில் வந்த ஒருவர், "கவலைப்படாதே மகனே காணாமல் போன பசு இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ளது சங்கு இலைப் புதரில் கன்றுடன் நிற்கிறது " என்று கூறி மறைந்துள்ளார்.

மறுநாள் காலை எழுந்தவுடன், தன் பணியாட்களுடன் கனவில் சொல்லப்பட்டுள்ள இடத்துக்குச் சென்றடைந்துள்ளார் மங்கான் படையாச்சி.

கன்றுடன் பசு நின்றிருந்த அவ்விடத்தில் சாய்ந்துகிடந்த கல் கம்பத்தில் (கல்தூண்) பசு தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அந்தக் கம்பத்தைக் கண்டு வியந்து தொட்டு வணங்கிச் சென்றுள்ளார். பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் கனவில் தோன்றிய பெரியவர், “கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன்னுடைய பசுவை மறைத்துவைத்தேன்.

உன்னையும், வழித்தோன்றியவர்களையும், ஊர் மக்களையும் காக்கவந்தவன் யான் என்பதை அறிக. கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என்பெயர் கலியுக வரதராசப் பெருமாள்" எனக் கூறி மறைந்துள்ளார்.

பின்னர், மங்கானால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி எனும் கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது. அந்தக் கல்கம்பத்தில் பெருமாள் நாமத்தோடு காட்சியளிக்கிறார்.

எல்லாக் கோயில்களிலும் உருவத்தோடு இருக்கும் பெருமாள், இந்தக் கோயிலில் மட்டும் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். பெருமாளை ஆஞ்சநேயர் பெருமைபடுத்துவதற்காக எந்த வைணவக் கோயில்களிலும் இல்லாத சிறப்பு இங்கு அமைய பெற்றுள்ளது.

மகா சிவராத்திரி அன்று திருமாலுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக விளங்குகிறார். ‘கதை’யில்லாத வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயர் இவர். விவசாயம் செழிப்பதற்கும், நோய் தீரவும், குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கும் தீர்வை அளிப்பவராகப் பெருமாள் கருதப்படுகிறார்.

300 வருடம் பழமையான தலவிருட்சமான மாவிலங்கை மரம் கோயில் உட்புறத்தில் உள்ளது. இந்தப் பெருமாளை விவசாயிகள் ஆண்டுதோறும் வேண்டி விவசாயம் செய்து, அறுவடை முடிந்து நெல், கம்பு, சோளம், மிளகாய், பருத்தி, கடலை, புளி, வாழை எனவும், கறவை பசு, கன்று, ஆடு, கோழி என காணிக்கையாகப் பெருமாளிடம் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்.

காணிக்கைகளைப் பெறக் கோயிலில் தனித்தனி காணிக்கை அறைகள் உள்ளன. கோயிலில் தினமும் மதியம் 12 மணிக்கு நடைபெற்றுவரும் அன்னதானம் முழுக்க முழுக்க பக்தர்கள் செலுத்தும் அன்னதான நன்கொடையைக் கொண்டே நடத்தப்படுகிறது.

எப்படிப் போவது...

அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு பகுதியில் கல்லங்குறிச்சி எனும் கிராமத்தில் இந்த வரதராசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அரசு, தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களிலிருந்து வந்து செல்ல அரியலூருக்கு ரயில் வசதியும் உள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


கோயில் அறிமுகம்ஆலயம் அறிமுகம்வரதராசர் கோயில்ஏழைகளின் திருப்பதி க்ஷ்வரதராசப் பெருமாள்கோயில்கல்லங்குறிச்சி கோயில் கலியுக வரதராசப் பெருமாள் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author