

இறைவனுடைய அடிமை அப்துல்லாஹ் என்று பெயரிட்டால் மட்டும் போதுமா? இறைவனுடைய அடிமையாக வேண்டுமானால் இறைவனைப் பற்றி அறிய வேண்டும் என்பதுதானே முதல் படி?
எப்படி அறிவது?
தன்னை அறிவதுதானே அடுத்த படி. தன்னை அறிவது என்றால்? நான் இதற்கு முன் குழந்தையாக இருந்தேன். அதன் முன்பு தந்தை தாயின் சத்துப் பொருளாக இருந்து தாயின் கருவறையில் ஒன்று சேர்ந்தேன். சத்துப் பொருள்கள் தாய், தந்தைக்கு உணவிலிருந்துதானே கிடைத்தன.
உணவு எப்படி உற்பத்தியானது? பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவைகளின் ஒன்று கூடல்தானே. பஞ்ச பூதங்களுக்கு முன்பு எப்படி இருந்தேன்? இவை அனைத்தையும் தன்னுள் அடக்கிய “அமா”வாகிய அல்லாஹ்வுடன் அல்லவா இருந்தேன் என்பது புலனாகிறதல்லவா!
இதைத்தான் மார்க்கமும் தெளிவாக ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’ இறைவனிடத்திலிருந்தே வந்தோம், அவனிடமே மீளுவோம் என்று கூறுகிறது.
உடம்பாகிய மனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு சிந்தித்தால் தான் ஒரு முழுப் பிரபஞ்சமாகவல்லவா இருப்பது தெரிகிறது. உடம்பு மட்டும் நாம் என்றால், உயிர் இழந்த உடம்பு இயங்க முடிவதில்லையே? உடல் இயங்க உயிர் அடிபடையல்லவா? இதைத் தான் திருமறை மனிதனை களிமண்ணால் படைத்து எனது ரூஹினை ஊதினேன் என்பதாகக் கூறுகிறதோ.
உடல் இருக்க இடமும், அதைத் தாங்க பூமியும், உடல் இயங்க உணவும், நீரும், காற்றும் இல்லாமல் முடியுமா? பூமி நிற்க சூரியக் கோள்களின் ஈர்ப்பு சக்தியும் அத்துடன் இணைந்த மற்ற கோள்களும் அல்லவா சேர்ந்துள்ளன. எனவே இந்த உடல் இயங்க முழுப் பிரபஞ்சமும் சேர்ந்து உயிராக அல்லவா செயல்படுகின்றன. எனவே இந்த உடல் முழுப் பிரபஞ்சத்தின் அடிமைதானே? நான் என்று உடல் சார்ந்த ஆணவம் தன்னை அறியாத மூடத்தனத்தின் விளைவல்லவா? எனவே இப்படி அறிந்து முழுமையாக இயங்கும் போதுதான் அல்லாஹ்வின் முழுக் கருணையும் நம்மீது இலங்கும். அவனின் முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும்.
தொழுகையில் முழுமையும் சேர்ந்து இருப்பதை உணரும் போது, தொழுகை முஃமின் களின் மிஃராஜ் என்ற நாயக வாக்கியமும் நன்கு உணரப்படும். இந்த நிலையில்தான் நபிமார்கள் இருந்தனர் என்றாலும் இதில் முழுவதும் விலகாது தம் வாழ்வின் எல்லா நிலையிலும் வழுவாது வாழ்ந்த வள்ளல் நபிகள் தம் அல்லாஹ்வின் இறுதித் தூதரும் அவனுடைய வேதத்தைப் பெற்றுத் தரும் ரஸுலாகவும் விளங்கி என்றுமே உலக மாந்தர் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய ஒளி விளக்காக, ரஹ்மத்துன் லில் ஆலமீனாக, நித்திய ஜீவனாக, நூரே முஹம்மதிய்யாகவாக விளங்க முடியும்தானே? அவர்கள் வழியில் அதே உண்மையை அவர்களின் திருக்குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துகள் உலகத்தாருக்கு வாழ்ந்து காட்டி வருவதும் மனித நேயத்தினால் தானே!
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், நடைமுறைகளை பின்பற்றும் அவர்களின் உயர் அடிமைகளாகவோம். அதன் மூலம் இறைவனின் அருளைப் பெறும் அடிமைகளாவோம்.
- ‘பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை’ நூலில் இருந்து.
புத்தகம்: பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை
வெளியீடு: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபை - ஐக்கிய அரபு அமீரகம், ஜமாலியா பதிப்பகம், திருச்சி.
விலை: ரூ. 500.
தொடர்புக்கு: s_sharfuddeen@yahoo.com.