

ஒவ்வொரு தாயும் தன் மகனை உலக தரிசனத்தின் உருவாகப் பார்க்கிறாள். ஒவ்வொரு தாயும் தன் மகனிடம் பிரம்மத்தைப் பார்க்கிறாள்.
யசோதையால், மொத்த உலகத்தையும் தெய்வீகத்தின் பிரபஞ்ச வடிவையும் கிருஷ்ணனின் வாயில் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு தாயுமே இந்த அனுபவத்தைக் குறைவாகவோ கூடுதலாகவோ அடைகிறார்கள். யசோதா பரிபூரண அன்னையாக இருந்ததால் அதை அவள் முழுமையாகப் பார்க்க முடிந்தது. கிருஷ்ணனும் அதற்கான சரியான வாகனமாக முடிந்தது.
ஏனெனில், அவன் முழுத் தகுதியை அடைந்த மைந்தன். இதில் எந்த அற்புதமும் இல்லை. நீங்கள் என்னை நேசத்தின் கண்களால் பார்த்தால் என்னிடமும் தெய்வீகத்தைக் காணமுடியலாம். தேவையெல்லாம் உங்களுக்கு அந்தக் கண்கள் வேண்டுமென்பதுதான். இரண்டாவது அதற்குரிய ஊடகமும் அவசியம்.
அப்போது, ஒரு சின்னஞ்சிறிய கனியில், மலரில் பிரபஞ்சத்தின் முகத்தைப் பார்க்க முடியலாம். இங்கே, அந்த முழுமையும், அந்த அளப்பரிய தன்மையும் ஒவ்வொரு அணுவிலும் மறைந்திருக்கிறது. சமுத்திரம் மொத்தமும் ஒரு துளி நீரில் அடைக்கலமாகியுள்ளது.
அர்ஜூனனாலும் பார்க்க முடிந்தது. ஏனெனில், கிருஷ்ணனிடம் அவனுக்கு ஆழமான நேசம் இருந்தது. அவனுக்கு கிருஷ்ணனுடன் நிலவிய நட்பு மிகவும் அரியவகையிலானது. கிருஷ்ணனுடனான ஆழ்ந்த ஆத்மார்த்தத் தருணத்தில் அவனால் தெய்வீகத்தின் பேருருவைக் காணமுடிந்ததில் விந்தையேயில்லை.
தெய்வீகத் தரிசனம் பரிசாகத் தரவோ திரும்பப் பெறவோ இயலாதது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சில தருணங்களில் நிகழும் அது ஒருபோதும் தொலைந்து போவ தில்லை. அது உண்மையில் நிகழவே செய்கிறது. சில தருணங்களில் நாம் நமது பிரக்ஞையின் சிகரத்தைத் தொடுகிறோம்;
அப்போது எல்லாமே தெள்ளத்தெளிவாக இருக்கிறது. ஆனால், அந்தச் சிகர முனையிலேயே தங்குவது பெரும் சிரமமாக உள்ளது. இந்த ஆசிர்வாதத்தைச் சம்பாதிப்பதற்கு அதற்குத் தகுதியாக்கிக்கொள்வதற்கு லட்சக்கணக்கான பிறப்புகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் தினசரி விழுகிறார்கள். ஆனால், அவர்களது எலும்புகள் உடைவதேயில்லை. ஆனால், கீழே விழும் முதியவர்கள் மருத்துவமனைக்குத் தான் போகவேண்டும். ஏன் இப்படி நடக்கிறது? குழந்தை, வளர்ந்தவரை விட வலுவாக உள்ளதா? இல்லை, குழந்தை காயப்படாமல் இருப்பதற்குக் காரணம் அது அந்த நிகழ்ச்சியை எதிர்ப்பதில்லை.
அது விழும் நிகழ்விடம் தன்னை ஒப்படைத்து விடுகிறது. இந்த ஏற்பு நிலைதான், குழந்தைக்கு உதவிகரமாக இருக்கிறது. ஜூடோ சண்டை முறையில், தாக்குவதோ தடுப்பதோ கிடையாது. எதிராளியைத் தாக்குவதற்குப் பதிலாக அவனைத் தாக்குதலுக்கு நீங்கள் தூண்ட வேண்டும். அந்தத் தாக்குதலை முழுமையாக ஏற்பதற்கும் உள்வாங்குவதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கிருஷ்ணன் எப்போதும் ஆக்ரோஷத்தைக் காண்பித்தவன் அல்ல. அவனுக்கு வெல்லும் நோக்கமும் கிடையாது. முகம்மது அலி போன்ற குத்துச் சண்டை வீரர் குழந்தை போன்ற கிருஷ்ணனுடன் சண்டையிட்டால் அவர் தோற்கவே செய்வார்.
கிருஷ்ணனின் வெற்றிக்குக் காரணம் அவர் ஒரு குழந்தையாக மென்மையோடு இருந்ததே. சண்டையில் அவருக்கு விருப்பமோ தோற்கடிப்பதில் ஆசையோ இருந்ததில்லை. அவரது முழுமையான பற்றில்லாமையில் வெற்றி அடங்கியுள்ளது.
கிருஷ்ணனுக்கோ எல்லாமே விளையாட்டு. பெரும் அரக்கர்களுடன் அவன் போரிடும்போதும் அது அவனுக்கு விளையாட்டே. பெரும் அசுரர்கள் அவனோடு வெற்றிபெறுவதற்காகப் போரிட ஒரு கள்ளமற்ற, பலவீனமாகத் தெரியும் குழந்தையாக கிருஷ்ணன் வெற்றி, தோல்வி குறித்து விளையாடிக் கொண்டிருந்தான். அரக்கர்கள் அவன் கைகளில் நொறுங்கினார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் அது.
(© கிருஷ்ணா: தி மேன் அண்ட் ஹிஸ் ஃபிலாசஃபி நூலிலிருந்து)
தமிழில்: ஷங்கர்