Published : 09 Aug 2018 10:19 am

Updated : 09 Aug 2018 10:19 am

 

Published : 09 Aug 2018 10:19 AM
Last Updated : 09 Aug 2018 10:19 AM

ஆன்மா என்னும் புத்தகம் 15: உங்களுக்குள் இருக்கும் சித்தார்த்தன்

15

ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய பிரபல குறுநாவல் ‘சித்தார்த்தன்’. ஜெர்மானிய மொழியில் 1922-ம் ஆண்டு வெளியான இந்த குறு நாவல், 1951-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான், உலகம் முழுவதும் பிரபலமானது. தமிழில் இந்தப் புத்தகத்தை திரிலோக சீதாராம் மொழிபெயர்த்திருக்கிறார்.

பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது. கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. புத்த நிலையை அவரவர் வழியில் அனுசரித்தே அடைய வேண்டுமென்கிறார் நூலாசிரியர்.


தனிமனிதனின் தேடல்

வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப் பயணமாக இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார். அவரது பெரும்பாலான படைப்புகளை இந்த ‘அகப் பயண’க் கருவை அடிப்படையாக வைத்தே படைத்திருக்கிறார். இந்த ‘சித்தார்த்தன்’-ஐ அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக எழுதியிருக்கிறார். இந்தக் குறுநாவலின் முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை விளக்கியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே.

அந்தணர் குலத்தில் பிறக்கும் சித்தார்த்தன், அறிவின் மீதான தேடலுடன் வளர்கிறான். அவனது இந்த அறிவுத்தேடல் அவனுக்குள் ஒருவிதமான மன அமைதியின்மையை உருவாக்குகிறது. அனைவரும் பிரம்மத்தைப் பற்றியும் அதை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறார்கள், ஆனால், அந்த நிலையை மெய்யாகவே யாராவது அனுபவித்திருக்கிறார்களா என்று கேள்வி சித்தார்த்தனுக்கு வருகிறது.

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி, தன் தந்தையின் அறிவுரையைமீறி, சமணத் துறவிகளுடன் இணைந்து பயணம் செல்ல முடிவெடுக்கிறான் சித்தார்த்தன். இந்தப் பயணத்தில் அவன் நண்பன் கோவிந்தனும் அவனுடன் இணைந்துகொள்கிறான். இந்தத் துறவு வாழ்க்கையின் மூலம் ஆசைகள், அகந்தை, பசி, தாகம், சோர்வு, வலி போன்ற உணர்வுகளைத் துறக்கவும் முயல்கிறான். ஆனால் அனைத்து சாதனைகளும் அகந்தையை வளர்த்து கண்ணாம்பூச்சியே காட்டுகிறது.

புத்தருடனான சந்திப்பு

 நண்பர்கள் மீண்டும் வெளியேறி அலைகிறார்கள். கவுதம புத்தரின் உபதேசங்களைப் பற்றி கேள்விப்பட்டு, சித்தார்த்தனும் கோவிந்தனும் அவரைச் சந்திக்க செல்கிறார்கள். புத்தரின் பரிவான முகம் அவனை ஈர்க்கிறது. ஆனாலும் அவரை மற்றவர்களைப் போலத் தொடரும் எண்ணம் அவனுக்கு உருவாகவில்லை. குருவாலோ, குருவின் போதனைகளாலோ வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விமோசனம் அடைய முடியாது என்றும், அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கை பாதையின் மூலம் மட்டுமே விமோசனம் அடைய முடியும் என்பதை அவன் நம்புகிறான்.

அதனால், தன் வாழ்க்கைப் பாதையைத் தானே அமைத்துகொள்ள முடிவுசெய்து தன் பயணத்தைத் தொடர்கிறான். ஆனால், புத்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கோவிந்தன் புத்தருடனே தங்கிவிட முடிவுசெய்கிறான். புத்தரிடம் நட்புடன் விடைபெற்று தன் தேடலைத் தொடர்கிறான் சித்தார்த்தன்.

சம்சார வாழ்க்கை

காட்டிலிருந்து நகரத்துக்கு வரும் சித்தார்த்தன், தன் உயிரின் தாகம் எதுவரை அழைத்துச் செல்லுமோ அதைப் பின்தொடர முடிவுசெய்தான். கமலா என்ற தாசியின் அழகால் ஈர்க்கப்படுகிறான். அவளுடைய மனத்தை வெல்வதற்காக, துறவு வாழ்க்கையிலிருந்து விலகி, காமஸ்வாமி என்னும் தொழிலதிபரிடம் பணியாற்றி பணம் சம்பாதிக்கிறான்.

அவனது தொழிலை எந்தவொரு பதட்டமும் பயமும் பேராசையும் இல்லாமல் மேற்கொண்டதால், எளிதில் வெற்றிபெறுகிறான். கமலாவின் காதலையும் பெறுகிறான். ஆனால், ஒரு கட்டத்தில் சமண வாழ்க்கை நெறியிலிருந்து முழுமையாக விலகி சம்சார வாழ்க்கைக்குள் முழுமையாகச் சிக்கிக்கொள்கிறான். காமமும் போதையும் லாப வேட்கையும் அவனது ஆன்மாவைக் களைப்படைய வைப்பதை உணர்கிறான். கமலாவைப் பிரிகிறான்.

படகோட்டியின் வாழ்க்கை

சம்சார வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காக காட்டுக்கு ஓடிவரும் சித்தார்த்தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்து இறப்பதற்குத் தயாராகிறான். அப்போது, எதிர்பாராதவிதமாகத் தன் நண்பன் கோவிந்தனைச் சந்திக்கிறான் சித்தார்த்தன். அவனைப் பார்த்தவுடன், தான் விலகி வந்த வாழ்க்கை பாதையின் நினைவுகள் அவனைத் துரத்துகின்றன. சம்சார வாழ்க்கையின் அம்சங்களான செல்வம், காதல், காமம் போன்றவை அவனைத் திருப்திபடுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறான். ஆறு அவனுக்கு ஒன்றைப் போதிக்கிறது.

எந்த ஆற்றைக் கடந்து நகரத்துக்குச் சென்றானோ, அந்த ஆற்றங்கரைக்கு மீண்டும் வருகிறான் சித்தார்த்தன். அந்த ஆற்றங்கரையில் வசித்துவரும் படகோட்டி வாசுதேவனின் உதவியாளனாகச் சேர்ந்து அங்கேயே தங்கிவிடுகிறான். அது ஒரு எளிமையான வாழ்க்கை. படகோட்டிச் செல்லும் சித்தார்த்தனிடம் தினசரி ஆறு உரையாடுகிறது. எந்தவொரு குருவாலும் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை ஆறு அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

நீண்ட காலத்துக்குப்பிறகு, அவன் வாழ்க்கையில் அமைதி திரும்புகிறது. ஒருநாள், புத்தரைச் சந்திப்பதற்காக ஒரு தாயும் மகனும் ஆற்றங்கரைக்கு வருகிறார்கள். அப்போது ஒரு பாம்புத் தீண்டியதால், அந்தத் தாய் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அங்கே வரும் சித்தார்த்தன், அந்தப் பெண் தன் முன்னாள் காதலி கமலா என்றும், அந்தச் சிறுவன் தன் மகன் என்பதையும் தெரிந்துகொள்கிறான்.

மீண்டும் மகனின் வழியாக சித்தார்த்தனுக்கு வாழ்க்கை கடைசித் தேர்வொன்றை வைக்கிறது. அந்தப் பரிட்சையை சித்தார்த்தன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதன் மூலம் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. ‘ஆயிரம் மடிப்புகளாலான ஆற்றின் பாடல்’ தனக்கு வாழ்க்கையைப் பற்றிய உண்மையான விழிப்பை ஏற்படுத்துவதாக இறுதியில் சித்தார்த்தன் கூறுகிறான். இன்பத்துக்குள்ளேயே துன்பத்தின் விதை உள்ளது. வாழ்வு- மரணம், இளமை- முதுமை, காதல்- பிரிவு என நாம் எதிர்வு என்று நினைக்கும் எல்லாமும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்துள்ளதை ஆறு தனது ஒருமையால் சித்தார்த்தனுக்கு உணர்த்துகிறது.

விமோசனத்தை அடைவதற்காக உலகியலிலிருந்து பின்வாங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை; மாறாக, வாழ்க்கையைவிட்டு விலகி ஓடுவதைவிட அதன் முழுமையோடு அரவணைத்து, அறிவதே சிறந்த வழி என்பதை இந்தச் ‘சித்தார்த்தன்’ குறுநாவலில் விளக்கியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே.

ஹெர்மன் ஹெஸ்ஸே

hessejpgright

ஹெர்மன் ஹெஸ்ஸே, நோபல் பரிசுபெற்ற ஜெர்மன் கவிஞர், எழுத்தாளர், ஓவியர். 1877-ம் ஆண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த கால்வ் நகரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கிறிஸ்தவ மதபோதகர்களாக இந்தியாவில் சில காலம் பணியாற்றியதால், இவருக்கு கிழக்கு ஆன்மிக இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. 1911-ம் ஆண்டு, இந்தியாவுக்கு வந்த இவர், ‘ரோஷால்டே’ என்ற நாவலை 1914-ம் ஆண்டு வெளியிட்டார். ‘டெமியன்’ (1919) நாவல் இவரது முதல் வெற்றி பெற்ற நாவலாகக் கருதப்பட்டது.

முதலாம் உலகப் போரின்போது ஸ்விட்சர்லாந்தின் மோன்டாக்னோலா கிராமத்தில் குடியேறிய இவர், ஜெர்மன் போர்க் கைதிகளுக்கான பத்திரிகையைத் தொகுத்தார். ஜெர்மனியின் ராணுவ, தேசியவாதக் கொள்கைகளையும் போரையும் தொடர்ந்து எதிர்த்துவந்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியை வலியுறுத்தினார். ‘தி ஜர்னி டு தி ஈஸ்ட்’ (1923), ‘நார்சிஸ் அண்ட் கோல்முன்ட்’ (1930), ‘தி கிளாஸ் பீட் கேம்’ (1943) போன்றவை இவரது முக்கியமான சில படைப்புகள். 1946-ம் ஆண்டு, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1962-ம் ஆண்டு மறைந்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x