Last Updated : 23 Aug, 2018 10:53 AM

 

Published : 23 Aug 2018 10:53 AM
Last Updated : 23 Aug 2018 10:53 AM

தியானமும் மூச்சும்: அமைதி தரும் விபாசனா

அமைதியும் ஒற்றுமையும் நம் எல்லோருக்குமே தேவைப்படுகின்றன. இன்றைய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் அவற்றை நாம் இழந்து நிற்கிறோம். எந்நேரமும் எரிச்சல், பதற்றம், வேற்றுமை உணர்வால் தவிக்கிறோம். இத்தகைய நிலைக்கு ஆட்கொள்ளப்படும்போதெல்லாம் அவற்றை நம் சூழலுக்கும் பிறருக்கும் நம்மை அறியாமல் பரப்புகிறோம்.

பரிதாபகரமான சூழ்நிலையில் இருப்பவரைச் சுற்றிலும் மனக்கசப்புதான் எஞ்சி நிற்கிறது. அத்தகைய நபருடன் நெருக்கமாக இருப்பவர்களையும் எதிர்மறை உணர்வும் துயரமும் தொற்றிக்கொள்கின்றன. நிச்சயமாக வாழும் முறை இதுவல்ல.

நமக்குப் பிடிக்காத சூழலில் சிக்கிக்கொண்டால் உடனடியாகக் கோபத்தையும் பயத்தையும் எதிர்மறைச் சிந்தனையையும் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மனத்தைத் திசைதிருப்புவதே ஆகச் சிறந்த தீர்வாகப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, கோபம் தலைக்கேறும்போது ஒன்றிலிருந்து பத்துவரை மனத்துக்குள் எண்ணலாம், ஒரு குவளைத் தண்ணீரைக் குடிக்கலாம் என்பது போன்ற எளிய தீர்வுகள் நமக்குச் சொல்லப்படுகின்றன. அல்லது நமக்கு இஷ்டமான பெயரையோ மந்திரத்தையோ உச்சாடனம் செய்யும்போது கோபம் அகலும் எனச் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் புத்தர் முன்வைக்கும் ஆலோசனை வேறுவிதமானது.

மனத்தைத் திசை திருப்புவது பிரச்சினையில் இருந்து ஓடி ஒளிவதாகும். அதனால் பிரச்சினை தீர்ந்துவிடாது. சிக்கலை எதிர்கொள்ளாமல் அமிழ்த்தும்போது மேலும் மன அழுத்தத்துக்கே அது இட்டுச்செல்லும். இதற்குப் பதிலாக,  ‘உங்களுடைய பிரச்சினையை அவதானியுங்கள்’ என்கிறது விபாசனா. நமது கோபத்தையும் பதற்றத்தையும் நாமே உற்றுக் கவனிக்கத் தொடங்கும்போது அது வலுவிழந்து தானாகவே உதிர்ந்துபோகும் என்கிறது.

கோபத்தைக் கொட்டித் தீர்ப்பது அல்லது கோபத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துத் குமுறுவது என்ற இரண்டு தீவிர நிலைகளுக்கு மாற்றான மத்திய நிலை இது. மனம்நிறை கவனத்துடன் தன்னைத் தானே உற்றுக்கவனிக்கும்போது உண்மையின் இரண்டு தோற்றங்கள் நமக்குத் தென்படும். அவற்றில் ஒன்று அகம் சார்ந்தது, மற்றொன்று புறவயமானது.

அகத்தில் தேடுவோம்

இதுவரை நம்முடைய மனவருத்தத்துக்கான காரணங்களை வெளியில் மட்டுமே தேடினோம். பழியை வேறொருவர் அல்லது சூழலின் மீது சுமத்திவிட்டு அதைச் சரிசெய்வதற்கு முயன்றோம். ஆனால், உண்மையில் நம்முடைய வருத்தத்துக்குக் காரணம் பிரச்சினை அல்ல, அதை எதிர்கொள்ளும் நம்முடைய மனோபாவம்தான் என்பதைப் புரிந்துகொண்டால் அதை லாவகமாகக் கையாளலாம் என்பதுதான் விபாசனா.

விபாசனா பயிற்சியின் மூலம் நாணயத்தின் இன்னொரு பக்கத்தைக் காணமுடியும். நம்முடைய சுவாச ஓட்டத்தை அவதானிப்பதன் மூலம் அகத்துக்குள் என்ன நடக்கிறது என்பதைக் குறித்த விழிப்புநிலையை எட்டலாம். இதன் ஊடாக எதிர்வினை ஆற்றுதல் மட்டுப்படுத்தப்பட்டு துயரமான எண்ணங்கள் ஒன்றைத் தொட்டு ஒன்றாகப் பல்கிப்பெருகுவதைத் தடுத்து நிறுத்த முடியும். இதைப் பழகப் பழக எதிர்மறை எண்ணங்கள் காற்றில் கரைந்துபோகும்.

மனம் மெல்ல நிர்மலமாகும். காலிப்பாத்திரம்போல இருக்கும் மனம் அன்பால் நிறையும். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும் உலகமும் பிரபஞ்சமும் வேறு வேறல்ல என்ற உணர்வு உருவாகும். பேதப்படாத மனத்தில் சுயநலமற்ற அன்பும் கருணையும் சுரக்கும். பிறருடைய வலியும் வேதனையும் நமக்குப் புலப்படும். அமைதியை நோக்கி மெல்ல மனம் நகரும்.

அன்பு, கரிசனம், சாந்தம்

இந்தக் கட்டத்தை எட்டும்போது ஒருவருடைய வாழ்க்கை முழுவதுமாக மாறி இருக்கும். நிதானப்பட்ட மனம் தன்னளவில் அமைதி காப்பது மட்டுமின்றிச் சாந்தமும் ஒற்றுமையும் புறச் சூழலிலும் பரவ வழிகோலும். பற்றுதல்களில் இருந்து மனம் விடுபடும். இது  உலகப் பிரச்சினைகளில் இருந்து தப்பிதத்தோடும் அணுகுமுறையோ அல்லது சமூக அக்கறை அற்ற மனோபாவமோ அல்ல.

விபாசனாவைப் பயில்வது என்பது வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் தானும் வாடிப்போய் துவண்டுவிடாமல் நுண்ணுணர்வுடன் செயலாற்றும் கட்டம் ஆகும். வாடிய பயிருக்கு உயிரூட்டும் செயல் நிலை அது.  இந்நிலையை அடையும்போது பிறர் துன்பம் நீக்க உறுதியுடன் செயல்படுவோம். அதேநேரத்தில் அங்குப் பதற்றம், எரிச்சலுக்கும் மாற்றாக அன்பும் கரிசனமும் சாந்தமும் ததும்பும்.

புத்தர் கண்டுபிடித்த யானம் மனம்நிறை

கவனத்தைப் படிப்படியாக உருவாக்கும் விபாசனாவை புத்தர் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. விபாசனாவைப் பயில்பவர் தனது உயிர் இருப்பின் குறிப்பிட்ட சில அம்சங்களை நேரடியாக இந்தப் பயிற்சியின் மூலம் ஆராய்கிறார்.

விழிப்புடன் கவனிப்பது, மனம்நிறை கவனத்துடன் பார்ப்பது, கூர்ந்து ஆராய்வது ஆகியவைதாம் இப்பயிற்சியின் அடிப்படை. சரியாக முகர்வது, முழுமையாகத் தொடுவது என நாம் அடையும் அனுபவங்களில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் கூர்ந்து கவனிக்க வைப்பது விபாசனா ஆகும். நமக்கு ஏற்படும் எண்ணங்களின் பிடியில் நாமே சிக்கிக்கொள்ளாமல் அதைக் கவனிக்க இதன் மூலம் பயில்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து நிலையாமையின் உண்மை, திருப்தியின்மை ஆகியவற்றை அறிவதற்கும் சுயமற்றுப் பார்ப்பதற்கும் விபாசனா உதவுகிறது.

மூச்சில் கவனம்

விபாசனா தியானத்தில் மூச்சின் மீதே கவனம் செலுத்தப்படுகிறது. மனம் தன் இச்சையில் அலைவதும் அதைத் தனது ஆதாரத்துக்குள் திரும்பச் செய்வதற்குமான உயிர்புள்ளி மூச்சுதான். எங்கிருந்து கவனம் சிதறுகிறதோ அந்த மையப் புள்ளியைப் பார்க்காவிட்டால் சிதறல் நடப்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும். ஒருவர் மனத்தை உலுக்கும் எண்ணங்கள் ஏற்படும்போது, மூச்சில் கவனம் செலுத்தி ஆழ்ந்து இழுத்து விட்டாலே போதும் கொஞ்சம் அமைதி ஏற்படுவதை உணர முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x