Published : 16 Aug 2018 10:52 am

Updated : 16 Aug 2018 10:58 am

 

Published : 16 Aug 2018 10:52 AM
Last Updated : 16 Aug 2018 10:58 AM

விவிலிய மாந்தர்கள் 05: இவரே நம் தாய்

05

அன்னை மரியாள் விண்ணேற்புப் பெருவிழா: ஆகஸ்ட் 15

மரியாள் அல்லது மரியன்னை எனத் தமிழிலும் மரியம் என எபிரேய, அரமேய மொழிகளிலும் அழைக்கப்படுகிறார் இயேசுவின் தாய். விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, தூய ஆவியினால் இயேசுவை அவர் கருவில் தாங்கினார். உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையைத் தேர்வுசெய்து அதன்வழியே மனித உடலெடுத்தார். அதன்பொருட்டே ‘இறைவனின் தாய்’ என்று மதிக்கப்படுகிறார்.


இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்றபின் மரியாளைத் தலைவராகக் கொண்டே முதல் திருச்சபை உதயமானது. அந்த வகையில் ஆதித் திருச்சபையின் முதல் தலைவரும் அவரே என்பதை விவிலியம் எடுத்துக்காட்டுகிறது. ஓர் எளிய பெண்ணாக, கடவுளுக்கு முன்பாகப் பணிந்து வாழ்ந்த மரியாள், ‘கடவுளின் தாய்’ ஆக உயர்ந்தது மனிதகுல வரலாற்றில் ஓர் அற்புதம் ஆகும்.

தாழ்ச்சியால் உயர்ந்த மரியாள்

இஸ்ரவேல் தேசத்தில் நாசரேத் என்ற சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் மரியாள். கன்னியான அவர் அதே ஊரைச் சேர்ந்த தாவீதின் வம்சாவளியில் வந்த யோசேப்பு என்பவருக்குத் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் முன்பாக கடவுளால் அனுப்பப்பட்ட காபிரியேல் தேவதூதர் தோன்றினார். “பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளே, உனக்கு வாழ்த்துகள்! கடவுள் உன்னோடு இருக்கிறார்” என்றார்.

அதைக் கேட்டு மரியாள் மிகவும் கலக்கமடைந்து, அவரது வாழ்த்துக்கு என்ன அர்த்தம் என்று யோசிக்கக் தொடங்கினார். உடனே தேவதூதர், “மரியாளே, பயப்படாதே; நீ கடவுளுக்குமுன் தாழ்ச்சி கொண்டவள். இதோ! நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று நீ பெயரிடுவாயாக. அவர் மனிதருள் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுள் அவருக்குக் கொடுப்பார்.

அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”என்று சொன்னார். காபிரியேலின் வார்த்தைகளால் மரியாள் கர்வம் கொள்ளவில்லை. ஏனென்றால் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை, அதாவது அவருடைய சந்ததியில் வரும் ஒருவர் என்றென்றும் அரசாளுவார் என்ற வாக்குறுதியை, மரியாள் தம் பெற்றோர் வழியாகவும் அறிந்திருக்கிறாள். ஆகவே, பல நூற்றாண்டுகளாக மக்கள் ஆவலாய் எதிர்பார்த்திருந்த மீட்பனாக தனக்குப் பிறக்கப்போகும் மகன் இருப்பார் என்று தேவதூதர் கூறியதை நம்பினார்.

கேட்டுத் தெளிந்த மரியாள்

அதேநேரம் கற்புடன் இருக்கும் தனக்கு இது எப்படிச் சாத்தியம் என்ற சந்தேகத்தை “இது எப்படி நடக்கும், நான் கன்னிப்பெண்ணாக இருக்கிறேனே”என்று மரியாள் தேவதூதரிடம் தயங்காமல் கேட்டார். அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; அவரது வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.

இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று தூற்றப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி எதுவுமே இல்லை”என்று கூறியவுடன் உளம் மகிழ்ந்த மரியாள், மண்டியிட்டு, “இதோ! நான் கடவுளின் அடிமை. நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்று கூறி கடவுளின் மகிமையை ஏற்க தலைவணங்கிப் பணிந்தபோது தேவதூதர் அங்கிருந்து மறைந்தார் என மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திப் புத்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எலிசபெத்தை சந்தித்தபோது…

தன்னைத் தேர்ந்தெடுத்த கடவுளின் கரங்களில் தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்த மரியாளுக்கு, தனது உறவினரான எலிசபெத்தைப் பற்றி காபிரியேல் வானத்தூதர் சொன்ன வார்த்தைகள் உற்சாகம் ஊட்டின. மரியாள் யூதா மலைப்பிரதேசத்துக்குக் கிளம்பிச் செல்கிறார். அங்குதான் எலிசபெத்தும் தேவாலய குருவான அவரது கணவர் சகாரியாவும் வசித்து வந்தனர். சில தினங்கள் பயணித்து எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்தினார்.

மரியாளின் வாழ்த்தைக் கேட்டதும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, “என் எஜமானருடைய தாய்” என மரியாளை அழைத்தார். மரியாளின் மகன் எஜமானராக, மெசியாவாக ஆகப்போகிறார் என்பதைக் கடவுள் எலிசபெத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தை அறிந்து மரியாள் மீண்டும் கடவுளின் உன்னதத்தை எண்ணி மனநிம்மதி

 கொண்டார். மரியாளைப் பார்த்து எலிசபெத் மேலும் கூறும்போது, “நம்பிக்கை வைத்த நீ சந்தோஷமடைவாய்” என்று அவள் சொன்னார்.

அப்போது மரியாள் மறுமொழியாக “ இறைவனாகிய தந்தையை நான் மகிமைப்படுத்துகிறேன். அவருடைய பெயர் பரிசுத்தமானது. என் மீட்பராகிய கடவுளை நினைத்து என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குகிறது.

ஏனென்றால், அவர் தன்னுடைய அடிமைப் பெண்ணின் தாழ்ந்த நிலையைக் கவனித்திருக்கிறார். அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டுகிறார்” என்று கூறினார்.

சோதனையை வென்றார்

இதன்பிறகு தனக்கு நிகழ்ந்த யாவற்றையும் யோசேப்பிடம் எடுத்துக் கூறினார் மரியாள். கடவுளின் ஏற்பாட்டை, கணவர் எப்படி எதிர்கொள்வாரோ என்ற அச்சம் மரியாளுக்கு இல்லாவிட்டாலும் அவர் தன் பொருட்டு அதிக வேதனை அடைவாரோ என்ற மனப்போராட்டாம் இருந்தது. ஆனால் கடவுளின் மகிமையால் அந்தச் சோதனையைக் கடந்துவந்தார்.

‘யோசேப்பு நீதிமானாக இருந்ததால், எல்லார் முன்னாலும் மரியாளை அவமானப்படுத்த விரும்பவில்லை; அதனால், மரியாளை ரகசியமாக விவாகரத்து செய்ய முடிவுசெய்தபின் அவர் தூங்கிவிட்டார்; அப்போது கடவுளின் தூதர் அவருடைய கனவில் வந்து, “யோசேப்பே, உன் மனைவியான மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரப் பயப்படாதே; அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடு.

அவரே மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்” என்று சொன்னார். தூக்கத்திலிருந்து எழுந்த யோசேப்பு உடனடியாகச் சென்று மனைவியைத் தனது வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்.’ என்று விவிலியம் கூறுகிறது.

தவித்துப்போன தாய்

கன்னி மரியாள் பெத்லகேமில் இருந்தபோது, குமாரன் இயேசுவை ஈன்றெடுத்தார். தங்க இடமின்றி தவித்த அந்த ஏழைப் பெற்றோருக்கு ஒரு மாட்டுத் தொழுவமே கிடைத்தது. அவ்விடத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டார் அந்தத் தாய். குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, அன்னை மரியாள் அவரைத் தமது கரங்களில் அரவணைத்திருந்த காட்சியை மத்தேயுவின் புத்தகம் கூறுகிறது.

பின்னர் அரசன் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் எகிப்துக்குச் சென்றனர். பின்னர் பன்னிரெண்டு வயது பாலகனாக இயேசுவை அழைத்துக்கொண்டு, எருசலேம் தேவாலயத்தில் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடச் சென்றபோது, தேவாலயத்திலேயே தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்தனர்.

அப்போது அந்தத் தாய் மகனைக் காணாமல் எப்படித் தவித்துப்போயிருப்பார்! அதேபோல மற்றொரு சமயம் தேவாலயத்தில் பாலகனாக தனது மகன் முதிய மறைநூல் அறிஞர்களுடன் வேதத் திருச்சட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்துக்கொண்டிருந்தபோது அந்தத் தாய் ‘ஈன்ற பொழுதில் எப்படி பெரிதுவந்திருப்பாள்!’.

பின்னர் இயேசு தனது முப்பதாம் வயதில் இறை ஊழியத்தைத் தொடங்கியபோது கலிலேயாவின் கானா என்ற ஊரில் நடைபெற்ற திருமணத்தில், ‘தனக்கான தருணம் இன்னும் வரவில்லையே’ என்று இயேசு எடுத்துக் கூறியும் தாயார் கேட்டுக்கொண்டதால் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றிய முதல் அருள் அடையாளத்தைச் செய்ய அன்னை மரியாளே தூண்டுதலாக இருந்தார் என்பதை யோவான் எடுத்துக் காட்டுகிறார்.

இவரே உம் தாய்

அதன்பின் இயேசுவின் வாழ்வு முழுவதும் மகனோடு பயணித்தார் அன்னை மரியாள். அப்படிப்பட்டவர், உயிரற்ற தன் மகனின் உடலை தன் மடியில் கிடத்திக்கொண்டிருந்தபோது எத்தனைத் துடித்திருப்பார். இயேசு உயிர்விடும் சில மணிநேரத்துக்கு முன், தன் சீடர்கள் சிலரோடு சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்த தன் தாயைப் பார்த்து “அம்மா இவரே உம் மகன்” என்றார்.

பின்னர் தம் சீடரைப் பார்த்து, “இவரே உம் தாய்”என்றார். இதை அவரது சீடரான யோவான் குறிப்பிடுகிறார். இயேசு தம் சீடருக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் மரியாளைத் தாயாகக் கொடுத்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x