Published : 16 Aug 2018 10:53 AM
Last Updated : 16 Aug 2018 10:53 AM

தெய்வத்தின் குரல்: திருமுறை கிடைக்கச் செய்தவர்

அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் ராஜராஜ சோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து பிரகாசப்படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது.

அப்போது அவனுக்கு ஒரு நல்ல சேதி வந்தது. "சிதம்பரத்துக்குக் கிட்டே திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி என்று ஒரு மகான் இருக்கிறார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம். அவர் ஆதி சைவர். அதாவது குருக்கள் ஜாதி. அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, தான் பூஜை பண்ணும் பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னாராம்.

இவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்தியம் பண்ணினாராம். சிறு பிராயமானதால், பிள்ளையார் நிஜமாகவே நைவேத்தியத்தைச் சாப்பிடுவார் என்று நினைத்தார். அவர் அப்படிப் பண்ணாததால் ஒரே அழுகையாய் அழுது கல்லிலே தலையை மோதிக்கொண்டு ப்ராணனை விட்டுவிடப் பார்த்தார். உடனே பிள்ளையார் பிரசன்னமாகி அவர் ஆசைப்பட்டாற்போலவே அத்தனை நைவேத்தியத்தையும் சாப்பிட்டாராம். அவரைக் கேட்டால் தேவார ஸமாசாரம் தெரியலாம்" என்று ராஜராஜ சோழனுக்குச் சேதி சொன்னார்கள்.

“அப்படியா?" என்று அவன் உடனே நம்பியுடைய பிள்ளையாருக்காக ஏகப்பட்ட நைவேத்யங்கள் ஸித்தம் செய்துகொண்டு அவரிடம் ஓடினான்.

சொல்ல மறந்துவிட்டேன் - அந்த விநாயகமூர்த்திக்குப் 'பொல்லாப் பிள்ளையார்' என்று பெயர், 'பொல்லா' என்றால் 'துஷ்ட' என்று அர்த்தமில்லை. அவர் துஷ்ட ஸ்வாமியே இல்லை, இஷ்ட ஸ்வாமிதான்! பின்னே என்ன அர்த்தம் என்றால் பொள்ளுதல், பொல்லுதல், பொளிதல் என்றெல்லாம் சொன்னால் 'செதுக்குவது' என்று அர்த்தம்.

சிற்பி எவனும் செதுக்காமல் ஸ்வயம் - பூ என்று தானாகவே உண்டாகிற விக்ரஹங்களுக்குப் பொல்லா மூர்த்திகள் என்று பேர். அப்படித்தான் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரும்.

சோழனின் கோரிக்கை

ராஜராஜசோழன் சமர்ப்பித்த நைவேத்தியங்களை நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாருக்குப் படைத்தார். பிள்ளையார் வாஸ்தவமாகவே தும்பிக்கையை நீட்டி அதெல்லாவற்றையும் போஜனம் பண்ணினார். ராஜாவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. நம்பியாண்டார் நம்பியிடம், "உங்களுடைய இந்த ப்ரத்ட்யச தெய்வத்தைக் கேட்டு மூவர் தேவாரங்கள் முழுக்கவும் எங்கே கிடைக்கும் என்று தெரிந்துகொண்டு சொல்லவேணும்.

இன்னொரு ஆசை, இப்ப கிடைத்துள்ள தேவாரத்தில் ‘திருத்தொண்டத் தொகை' என்று 63 நாயன்மார் பேர்களைத் தெரிவிப்பதாக சுந்தரர் பாடல் இருக்கிறதல்லவா? அந்த மஹானுபாவர்களின் திவ்ய சரித்திரங்களையும் பிள்ளையார் வெளியிட்டாரானால் லோக மங்களமாக எல்லாருக்கும் ப்ரசாரம் பண்ணலாம். அனுக்ரஹிக்கணும்' என்று ப்ரார்த்தித்துக்கொண்டான்.

இவன் சொன்னதை அவர் பிள்ளையாரிடம் சொல்லி, "அனுக்ரஹிக்கணும்" என்று வேண்டிக் கொண்டார்.

இந்தத் தமிழ்த் தேசத்துக்கு, பக்த லோகத்துக்கே, பரமோபகாராகப் பிள்ளையாரும் அந்த இரண்டு விஷயங்களையும் தெரிவித்தார். "சிதம்பரத்திலே நடராஜா சன்னிதானமான கனக ஸபைக்கு மேலண்டையிலே ஒரு அறை இருக்கிறது. அதிலேதான் மூவரும் தங்களுடைய தேவாரச் சுவடிகளை வைத்திருக்கிறார்கள். கதவில் அவர்களே இலச்சினை வைத்திருக்கிறார்கள். அப்படி அந்தச் சிதம்பர மேலண்டை அறையில் தேவார மூவரே அதிகாரப்பூர்வ அடையாளமாகத் தங்களுடைய கையை அழுத்திய இலச்சினைகளை வைத்து மூடியிருக்கிறார்கள். அங்கே போய்க் கதவைத் திறந்து சுவடிகளை எடுத்துக்கோ" என்றார்.

கணபதியே சரித்திரம் சொன்ன பெருமை

அறுபத்து மூவர் சரித்திரங்களையும் சொன்னார். சாட்சாத் கணபதியே சரித்திரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது! அவர் சொன்னதை நம்பி பிற்பாடு 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலாகப் பாடினார். திருத்தொண்டத் தொகையும், இந்தத் திருவந்தாதியுந்தான் பின்னாளிலே சேக்கிழார் விஸ்தாரமாகச் செய்த 'பெரிய புராண'த்துக்கு ஆதார நூல்கள்.

தேவாரக் கதை என்ன ஆச்சு என்றால், நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.

ஆனால், அங்கேயுள்ள நிர்வாகஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி சீல் வைத்தார்களே தவிர, அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே, இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்க அனுமதி தருவது என்று கேட்டார்கள். "அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய அதிகாரம் இல்லையே!" என்று கை விரித்து விட்டார்கள்!

சோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான்! சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும் பக்திமானும் மட்டுமல்ல; புத்திமானும்.

மனுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் 'அர்ச்சாவதாரம்' என்றே சொல்வது வழக்கு, முக்யமாக வைஷ்ணவ சித்தாந்தத்திலே. அர்ச்சா என்றால் விக்ரஹம்.

இதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான்.

மூவர் விக்ரஹங்களுக்கு விமரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபை மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், "முத்திரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்" என்று கேட்டுக்கொண்டான்.

எந்த மனசையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவார சொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.

தீக்ஷிதர்கள் மனசு உருகிக் கதவைத் திறந்தார்கள்.

(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x